03 ஏப்ரல் 2013

ஊடகங்களை காப்பாற்ற இராணுவத்தை வெளியேற்றவேண்டும்-ராமதாஸ்

20-[1]அரசின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களையும், ஊடகங்களையும் காப்பாற்ற வேண்டுமானால், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் நாளிதழான உதயன் அலுவலகம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”இலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள உதயன் நாளிதழின் கிளை அலுவலகம் மீது இன்று அதிகாலை கொடூரமான முறையில் தாக்குதல் நடததப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் உதயன் நாளிதழின் பணியாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
உதயன் அலுவலகம் சூறையாடப்பட்டதுடன், அங்கிருந்த ஊர்திகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் ஊடகங்களுக்கு எதிரான இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழர்களுக்கு எதிரான படையினரின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியதாலும், ஜெனிவா மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளின் தூதர்கள் தெரிவித்த கருத்துக்களை உதயன் நாளிதழ் விரிவாக வெளியிட்டதாலும் ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள் தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் நடந்த போது படையினர் அங்கிருந்த போதிலும், தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலை நடத்தியவர்களும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இராணுவத்தினரை கொண்டு தமிழர்களை அடக்கி வரும் சிங்கள அரசு, ஊடகங்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.
இலங்கை அரசின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களையும், ஊடகங்களையும் காப்பாற்ற வேண்டுமானால், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை உடனடியாக வெளியேற்றுவது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக