08 ஏப்ரல் 2013

மக்களைக் காக்க தவறிய இலங்கை-ஐ.நா. பணிக்குழு

"பொதுமக்களை வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்வதிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றும் கடப்பாட்டிலிருந்தும் இறுதிப்போரின் போது இலங்கை தவறிவிட்டது''
இவ்வாறு ஐ.நா. பணிக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக நிலுவையில் இருக்கும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகல முறைப்பாடுகளையும் துரிதகதியில் விசாரித்து அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அரசை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் அல்லது தன்முயற்சியின்றி காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழு கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.நா. பணிக்குழு நிறுவப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இலங்கை அரசுக்கு காணாமல் போனோர் தொடர்பாக 12 ஆயிரத்து 433 சம்பவங்கள் தொடர்பாக அறிவித்திருக்கின்றது.
இவற்றில் 40 சம்பவங்கள், அவைகளுக்குரிய இடங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், 6 ஆயிரத்து 535 சம்பவங்கள் அரசு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் தீர்க்கப்பட்டன. இதைவிட 222 சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தமையால் அவை நீக்கப்பட்டன. எனினும் 5ஆயிரத்து 676 சம்பவங்கள் தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ளன.
இவற்றில் 4 சம்பவங்களை அவற்றின் அவசரத்தன்மை கருதி உடனடியாகத் தீர்க்குமாறு இலங்கை அரசைக் கேட்டிருந்தோம். மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் லலித் வீரராஜா மற்றும் நாம் இலங்கையர் மணவர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமற் போனமை, இந்திய வம்சாவளியினரான தொழிலதிபர் இராமசாமி பிரபாகரன் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி சிவில் உடையில் வந்தவர்களால் கடத்தப்பட்டமை, திருமதி வசந்தமாலா பத்மநாதன் என்பவர் வவுனியாவில் ஒரு வங்கிக்கு அருகில் 2011ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை என்பனவே அந்தச் சம்பவங்களாகும்.எனினும் இவை குறித்து முன்னேற்றகரமான பதில் எதுவும் இலங்கை அரசிடமிருந்து கிடைக்கவில்லை.
சகல மக்களும் வலுக்கட்டாயமாக காணமற் போகச் செய்வதிலிருந்து காப்பற்றப்பட வேண்டும் என்ற பிரகடனத்தை செயல்படுத்துவதில் இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் எதிர் நோக்கப்பட்ட இடையூறுகள் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு மே 4 ஆம் திகதி ஐ.நா. பணிக்குழு இலங்கை அரசுக்கு அனுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் இலங்கை அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அத்துடன் இது குறித்து 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் திகதி அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக