01 ஏப்ரல் 2013

இந்தியாவினால் எதுவும் செய்யமுடியாது-ரணில்

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கத்தினால் அவசரமாக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய - சிறிலங்கா உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லி அழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லியின் அழைப்பை ஏற்று, இன்றிரவு இந்தியா செல்லும் ரணில் விக்கிரமசிங்க, வரும் வியாழக்கிழமை கொழும்பு திரும்புவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் சுமுக உறவுகள் நிலவவில்லை.
நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியையும், அதிகாரப் பகிர்வையும் கொண்டு வருவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அவசர அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக