25 ஏப்ரல் 2013

மாணவியிடம் பாலியல் சேட்டை விட்ட நகரசபை உறுப்பினர்!

ஓட்டமாவடியைச் சேர்ந்த றுபாஸா மஹ்றூப் என்ற மாணவியை காத்தான்குடியில் அவர் கல்வி கற்பதற்காகத் தங்கியிருந்த வீட்டிலிருந்து தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காத்தான்குடி நகர சபையின்
ஆளுந்தரப்பு உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் மாஸ்டரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் முன்வைத்த முன்பிணை கோரும் மனுவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். அப்துல்லா நேற்று (24.04.2012) வியாழக்கிழமை நிராகரித்தார்.
இவர் அடாவடி அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
கடந்த 22ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் அளவில் இச்சம்பவம் காத்தான்குடியை அடுத்துள்ள புதுக்குடியிருப்பு என்னும் தமிழ்க் கிராமத்தில் நடைபெற்றது. காரில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகக் கொடுமைகள் தாங்காது கதவைத் திறந்து கொண்டு வெளியில் பாய்ந்து விடுவேன் என அம்மாணவி விடுத்த எச்சரிப்பையடுத்து நகர சபை உறுப்பினர் காரை நிறுத்தினார். அவ்வேளை இம்மாணவி வீதியில் இறங்கி அழுதவாறு நடந்து சென்றார்.
இதனை அவதானித்த பயணிகள் சிலர் அம்மாணவியிடம் நடந்த விபரத்தைக் கேட்டு அவரை காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் வந்த நேரத்தில் சம்மௌன அலுவலகம் மூடப்பட்டு இருந்ததால் காத்தான்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து மக்கள் கூட்டம் அவ்வீட்டை முற்றுகையிட்டது.
காத்தான்குடி பொலிசார் தகவல் கிடைத்து அங்கு வந்து மாணவியிடம் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரது வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
இதேவேளை, காத்தான்குடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மேற்படி நகர சபை உறுப்பினரை வாழைச்சேனையில் வைத்து பொதுமக்கள் மறுதினம் மடக்கிப் பிடித்தனர். அவரை வாழைச்சேனைப் பொலிசார் பொறுப்பேற்க மறுத்தபோது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை (ஓட்டமாவடி) தவிசாளர் ஹமீதிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையிலேயே நேற்று காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், உறுப்பினர் அப்துல் லத்தீப் ஆகியோர் கல்முனைக்குச் சென்று சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் மூலமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.
அதனைப் பரிசீலித்த நீதிபதி அப்துல்லா முன் ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்ததுடன் சந்தெக நபரை உடனடியாகக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து குறித்த நகர சபை உறுப்பினர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோரின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி மேடைப் பேச்சாளரும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இயங்கிவரும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களில் பொருளியல் பாடம் கற்பித்து வரும் ஆசிரியரும் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக