16 ஏப்ரல் 2013

சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுமியர்களை காணவில்லை!

யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்துவருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விரக்கதியடைந்த சிறுமி ஒருவர் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் ஏனைய பெண் பிள்ளைகளால் இது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் 10 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும் இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிடம் கேட்டபோது இது தொடர்பான தகவல்களை தன்னால் தரமுடியாது என்றும் அவ்வாறு தகவலை தான் வெளியில் சொன்னால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எற்கனவே நான்கு வருடங்களில் 10 மேற்பட்ட இடமாற்றங்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக