இலங்கையில் இருந்து 3 இளைஞர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிந்த பிறகு அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்நிலையில் இலங்கையில் இருந்து 3 அகதிகள் நேற்று தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பரிந்துரை வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(24), யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(26), முல்லைத் தீவு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (19). இந்த 3 பேரும் சாவகச்சேரியில் இருந்து பேருந்து மூலம் மன்னார் வந்துள்ளனர். அங்கிருந்து நேற்று இரவு 8 மணியளவில் பிளாஸ்டிக் படகு ஒன்றில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் அரிச்சல்முனை பகுதியில் அவர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த படகு இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டது. இரவு முழுவதும் அரிச்சல்முனை பகுதியில் இருந்த அவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு வந்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறுகையில், இலங்கை ராணுவம் தமிழர்களை பிடித்து சித்ரவதை செய்து வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க எங்கள் பெற்றோரே படகுக்கான வாடகையை கட்டி எங்களை அனுப்பி வைத்தனர். சென்னையில் நண்பர்கள் இருப்பதால் அவர்கள் மூலம் பிழைப்பு தேடலாம் என்று இந்தியா வந்தோம் என்றனர். அதில் ஒருவர் கூறுகையில், இலங்கையில் சண்டை முடிஞ்ச பின்னாலும் அங்குள்ள தமிழ் ஆட்கள் நிம்மதியா இருக்க முடியல. விசாரணைங்கிற பேரால தமிழ் ஆட்களை ராணுவம் அழைச்சிட்டு போறதும், ஆட்களை கடத்திட்டுப் போறதும் தொடர்ந்துகிட்டே தான் இருக்கு. அங்க இருந்தா உசுருக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால தான் எங்கட அப்பா என்னை அகதியா இந்தியாவுக்கு அனுப்பி வச்சாங்க. இலங்கையில தமிழ் ஆட்களுக்கு எல்லாம் கொடுக்குறதா அரசாங்கம் சொல்லுது. ஆனா, எதுவும் உருப்படியா கிட்டல. போலீஸ் வேலைக்கு ஆட்கள் எடுத்தாலும் எங்கட ஆட்கள போலீஸ் துறையில் அடிமையாத்தான் நடத்துறாங்க. சர்வீஸ் செஞ்சவங்களுக்கு ஒரு புரமோஷனும் கிட்டல. ஒரு இடத்தை விட்டு வேற இடத்துக்கு நகந்தாலே சோதனைதான். பாஸ் இல்லாம எங்கயும் வெளிக்கிட முடியாது. என்னோட சகோதரர் கனடாவில் இருக்கார். நான் இந்தியாவில வேலை பார்க்கலாம்னு அகதியா வந்துட்டேன். என்னை போன்ற ஆட்கள் இலங்கையில நிறைய இருக்காங்க. ஆனா, அவங்கல்லாம் அங்கிருந்து வெளிக்கிட முடியுமான்னு தோணல என்றார். இந்நிலையில் பாஸ்போர்ட் சட்டப்படி அவர்கள் 3 பேரும் கைது செய்யப்படவிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக