20 ஏப்ரல் 2013

சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

ஜெனீவாவில் சுரேஷ் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கொழும்பில் உள்ள பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் 2 மணிநேரம் இந்த விசாரணை நடந்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியொன்று தொடர்பில் வெளியான செய்தியொன்று பற்றியே இந்த விசாரணையின்போது கேள்விகள் கேட்கப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தச் செய்தியில் இராணுவ இரகசியங்கள் வெளியாவதாக, பத்திரிகைக்கு விபரம் தெரிவித்தபோது சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிந்திருக்கவில்லையா என்றும் விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் இரண்டு இலட்சம் பேரில் ஏறக்குறைய ஐந்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடமாகாணத்தில் நிலைகொண்டிருப்பதாகத் தான் தெரிவித்தது ஒன்றும் புதிய விடயமல்ல என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
ஏற்கனவே பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியாகியுள்ள தகவல்களையே தான் கூறியதாகவும் இராணுவ இரகசியம் எதுவும் தெரியாத தன்னால் அது குறித்து எவ்வாறு தகவல்களைச் சொல்ல முடியும் என்றும் விசாரணையின்போது தான் பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வடபகுதியில் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து தாங்கள் தொடர்ச்சியாகப் பேசி வருவது அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதனால், தங்களை மௌனமாக இருக்கச் செய்யும் வகையில் அச்சுறுத்துவதற்காகவே இத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் பிபிசிக்கு அளித்த செவ்வியொன்று தொடர்பில் நாலாம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக