31 ஆகஸ்ட் 2013

எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா-நவநீதம் பிள்ளை

05e28526-e0c1-4ee9-be1d-952f1c8c058bnews.ap.org_r620x349இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணம், சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் மற்றுமொரு கவனத்தினை குவித்திருந்த நிலையில், எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா என ஐ.நா ஆணையாளர் குறித்துரைத்த கருத்து , அனைத்துலக ஊடகங்களின் இன்றைய மையச்செய்திகளில் ஒன்றாகிவிட்டது.
போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில், சிறிலங்கா அரசாங்கத்தின் போக்கு அனைத்துலக மட்டத்தில் கடும் கடுமையான விமர்சனங்களை ஏலவே எதிர்கொண்டு வரும் நிலையில், அனைத்துலக ஊடகங்களில் மற்றுமொரு மையச்செய்தியாக (எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா) ஐ.நா ஆணையாளரின் கூற்று வெளிவந்திருப்பமை சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளியாகவே கருதப்படுகின்றது.
போர் குற்ற விசாரண, ஆட்கடத்தல்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள், நில அபகரிப்பு, பாலியல் அச்சுறுத்தல்கள், காணமல் போனோர் விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்பு, மத வழிபாட்டு உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் என பல்வேறு விவகாரங்களில் சிறிலங்கா அரசினது போக்கும் ,அதன்வழி இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பேரினவாத பூதமும் சிங்களத்தின் மீதான கடும் விமர்சனங்களுக்கு காரணமாகியிருந்தன.
இந்நிலையில் இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளரின் பயணம் சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் கவனத்தினை பெற்றிருந்தது.
உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றென மக்கள் கருதுகின்றனர் என ஐ.நா ஆணையாளருக்கு தெரிவித்திருந்த சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, அறிக்கையானது சுதந்திரமானதாக இருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பல்வேறு விவகாரங்கள் ஐ.நா ஆணையாளரின் பயணத்தினைச் சுற்றி இருந்ததோடு தமிழ்மக்கள் மத்தியில் ஓருவித எதிர்பார்ப்பும் இருந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

28 ஆகஸ்ட் 2013

நீங்களும் காணாமற்போவீர்கள்-மக்களுக்கு மிரட்டல்!

"உங்கள் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் என நவநீதம்பிள்ளையிடம் மனுக் கொடுத்துள்ளீர்கள். இதனால் உங்கள் பிள்ளையின் நிலையே உங்களுக்கும் ஏற்படும்.''இப்படி நேற்று மாலை 6.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.அத்துடன் முள்ளிவாய்க்கால், கேப்பாபிலவு, புதுமாத்தளன் பகுதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பிரச்சினைகளை எடுத்துக் கூறிய மக்களின் விவரங்களை திரட்டும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. புலனாய்வாளர்களின் இந்த நடவடிக்கை குறித்து அங்கிருந்தவர்களால் உடனடியாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. நவநீதம்பிள்ளை மக்களுடன் உரையாடிய இடங்களுக்கு சிவில் உடையில் சென்ற புலனாய்வாளர்கள் அவருடன் உரையாடியவர்களின் விவரங்களை பெற்றுக்கொண்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளில் அச்சநிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இது குறித்து உடனடியாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதேவேளை, நேற்று ஆணையாளர் பயணம் செய்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வீதிகளில் இராணுவத்தினர் இல்லை. பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இராணுவத்தினரில் பெருமளவானோர் சிவில் உடையில் நடமாடினர் என்றும் சில இடங்களில் நவநீதம்பிள்ளையுடன் பேசக்கூடாது என்று மக்கள் மிரட்டப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

27 ஆகஸ்ட் 2013

அழுது புலம்பிய காணமற்போனோரின் உறவினர்கள்!தடுத்து நிறுத்திய பொலிஸார்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில், காணாமற்போனோரின் உறவுகள் அவரை சந்கிக்கும் நோக்கில் ஒன்று கூடியிருந்தனர்.
யாழ். பொதுநூலக முன்பக்க வாசலில் காணாமற்போனோரின் உறவுகள் சுலோகங்கள் சகிதம் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண ஆளுநர், அரச அதிபர்கள், மற்றும் மாகாண அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை நூலகத்திற்கு முன்பக்கமாக காணாமற்போனோரின் உறவுகள், காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும் நீதியான விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி கதறி அழுதனர்.
போரின் பின்னரான அபிவிருத்தி தொடர்பாக ஆணையாளருக்கு, விளக்கம் அளிக்கப்பட்டு கொண்டிருந்தவேளை வெளியே காணாமற்போனோரின் உறவுகள் தம் உறவுகளை தேடித்தருமாறு கதறி அழுது கொண்டு இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கலந்துரையாடலை முடித்து கொண்டு வெளியேறிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை காணாமற்போனோரின் உறவுகள் சந்திக்க முற்பட்டு, முன்பக்க வாசலை நோக்கி சென்றவேளை, அவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதனை அடுத்து நவநீதம்பிள்ளை அடங்கிய குழுவினர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி சென்று விட்டனர்.
அதேவேளை காணாமற்போனோரின் உறவுகள் 15 பேர் அடங்கிய குழு ஒன்று யாழ். ஐ.நா அலுவகத்தில் நவநீதம்பிள்ளையை சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

26 ஆகஸ்ட் 2013

முள்ளிவாய்க்காலில் இருந்து படைகள் ஓட்டம்!

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இன்றைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் அவர், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்திப்பார். பின்னர், அங்கிருந்து கிளிநொச்சிக்குப் புறப்படுவார்.
ஏ9 வீதியால் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டம் மற்றும், அதன் முன்னேற்றங்கள் குறித்தும் நவநீதம்பிள்ளை பார்வையிடவுள்ளார்.
இறுதிப்போர் நடந்த புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளையும் நவநீதம்பிள்ளை பார்வையிடவுள்ளார்.
இந்நிலையில் ஆணையாளரின் வருகைக்கு முன்னர் போர் எச்சங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
போர்த்தடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், நேற்று இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அங்கு இருந்த இராணுவ மினிமுகாம், காவலரண்கள் என்பனவும் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

25 ஆகஸ்ட் 2013

கொள்ளையர் வடிவில் சென்ற சிங்க படைப்பிரிவு!

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரம கடத்திச் செல்ல சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் இலங்கை இராணுவத்தின் சிங்க படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் என இணைத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகன் ஒருவரே அவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி டிக்மன்ஸ் வீதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற நிலையில் பொலிஸாரின் துப்பாக்கி இலக்காகி கொல்லப்பட்ட நபர் சிங்க படைப்பிரிவை சேர்ந்த கதிரப்புலிகே இந்திக சம்பத் குமார என்ற இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் இலக்கம் 502712, உதசிறி அசங்க என்ற இராணுவ கோப்ரல், இவர் 5வது சிங்க படைப்பிரின் அதியுயர் பாதுகாப்பு வலய பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுகிறார்.
இலக்கம் 418908, கதிரப்புலிகே ரெஜின் சந்திமல் குமார சிங்க படைப்பிரிவின் விசேட படைப்பிரிவு அதியுயர் பாதுகாப்பு வலயம் கொழும்பு.
கதிரப்புலிகே ரோஹித்த லக்ஷ்மன் , வித்தான ஆராச்சிகே சந்தகுமார ஆகியோரும் சிங்கப்படைப் பிரிவின் வீரர்கள் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
ஒரு வர்த்தக கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்த தரகு பணம் தொடர்பான தகவல்கள் ஊடகவியலாளர் மந்தனாவுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பிலான புலனாய்வு தகவல் சம்பந்தப்பட்ட முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்ததாகவும் இதனையடுத்து அந்த ஆவணங்களை ஊடகவியலாளரிடம் இருந்து கைப்பற்ற அவர் இராணுவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் தெரியவருகிறது.
இதற்காக பேசப்பட்ட தொகையில் மூன்று லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை அரசாங்கத்தின் முக்கிய தலைவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே செலுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
ஊடகவியலாளரையோ, அவரது வீட்டில் இருப்பவர்களையோ கொலை செய்யாது, அவரை அச்சுறுத்தி அந்த ஆவணங்களை பெறுமாறு அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளரின் வீட்டிற்கு புகுந்து அவரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி ஆவணத்தை பெற்று கொள்ளுமாறு, அது சாத்தியப்படவில்லை என்றால் அவரை கடத்திச் செல்லுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை மந்தனாவின் வீட்டிற்கு சென்ற இராணுவத்தினர் டிபெண்டர் ரக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் அவதானித்துள்ளனர் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

24 ஆகஸ்ட் 2013

சிவராசாவிற்கு அனந்தி கொடுத்த சாட்டையடி!

தமிழ் விவகாரங்கள் மற்றும் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ஆர்.சிவராஜா வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
மாவிலாறு அணையை எழிலன்தான் மூடினார். அதுவே இறுதிப்போருக்கு வழி சமைத்தது என்பதற்காக அவரின் மனைவி அனந்தி தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் தன்னுடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்களின் சாட்சியாக இருப்பவர்கள் ஐநாவின் மனித உரிமை ஆணையாளரைச் சந்திப்பதன் மூலம் உண்மைகள் வெளிப்பட்டுவிடும். அங்கு நடைபெற்ற உரிமை மீறல்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்பதால் அதற்காக அச்சமடைந்து அரசுக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே சிவராஜா இவ்வாறு அறிக்கை விட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின் முடிவில் என்னைப் போன்றவர்கள் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதி மொழியை நம்பித்தான் எங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். அதேபோல எத்தனையோ பெற்றோரும் தமது பிள்ளைகளை ஒப்படைத்தார்கள். அவர்களைப் பொறுப்Nபுற்று கொண்டு சென்ற அரசாங்கம் அவர்கள் பற்றிய தகவல்களை இன்று வரையிலும் தெரிவிக்காமல் கபட நாடகமாடிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்போடு நடந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. கூலிக்கு மாரடிக்கின்ற சிவாராஜாவுக்கு இதெல்லாம் எப்படி புரியப் போகின்றது?
எழிலன் திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தாரே ஒழிய விடுதலைப்புலிகளின் யுத்தத்திற்கு அவர் பொறுப்பாக இருக்கவில்லை. மாவிலாறு சம்பவம் என்பது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஒரு அம்சம் அவ்வளவுதான்.
உண்மையில் மாவிலாறு என்பது ஒரு ஆறு அல்ல. அது ஒரு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால். அது மூடப்பட்டிருந்த காலத்தில் மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு அங்கு தண்ணீரும் இருக்கவில்லை. வற்றிய நிலையில் பெறுமானமற்று அது இருந்தது.
ஆனால் யுத்தத்தை எப்போது ஆரம்பிக்கலாம். தமிழ் மக்களை எப்படி அடக்கி ஒடுக்கி அழிக்கலாம் என காத்திருந்த ஆட்சியாளர்கள் இதைப் பெரிதுபடுத்தி ஒரு சாட்டாக வைத்து தமது நோக்கத்தை நிறைவேற்றினார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இதைக்கூட அறியாதவராக சிவராஜா சிறுபிள்ளைத் தனமாக அறிக்கை விடுவதும் விமர்சனம் செய்வதும் கேலிக் கூத்தானது.
வெலிவேரியாவில் தொழிற்சாலைக் கழிவுகளினால் நிலத்து நீர் விசமடைந்திருந்ததனால் குடிநீர் கேட்டவர்களை இராணுவத்தை அனுப்பி மூன்று பேரைக் கொன்று அப்பாவிகளை அடக்கி ஒடுக்கிய அரசாங்கத்திற்காக ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவராஜா வக்காளத்து வாங்கி அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கின்றது.
திருமலை அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த அவரது மனைவியான என்னை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரச் சொல்வதற்கு ஜனாதிபதியின் தமிழப்பிரிவு இணைப்பாளருக்கு என்ன அருகதை உண்டு? எங்கள் மக்களும் நானும் பட்ட சொல்லொணாத் துயரங்களை இவர் கண்ணால் கூடப் பார்த்திருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் என்றால் என்ன அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒரு சிறு துளியாவது இவருக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட இவர் என்னை நீலிக்கண்ணீர் வடிப்பதாகச் சொல்வது நீலிக்கண்ணீருக்கு அர்த்தம் தெரியாத அவருடைய அறியாமையைத்தான் காட்டுகின்றது.
நானா இல்லை ஜனாதிபதியின் தமிழ்ப் பிரிவு ஊடக இணைப்பாளராகிய சிவராஜா எனக்கெதிராக அறிக்கை வெளியிட்டதன் மூலம் அரசுக்காக அவர்தான் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள். தேர்தலில் அவர்கள் தகுந்த பதிலும் தருவார்கள். அப்போது எல்லாம் புரியும்.
இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு செல்வதைத் தடுத்து நிறுத்திய அரசுடன் ஒட்டிக் கொண்டு தண்ணீர் பற்றிபேசுவது இவருக்கு வெட்கமாக இல்லையா? பாதிப்புகளுக்கு உள்ளாகி நடந்தவற்றுக்காக நியாயம் கேட்கின்ற என்போன்றோருக்கு எதிராக அறிக்கை விடுவது ஊடகத்துறையில் நீண்ட காலம் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற சிவராஜாவை ஒரு கருத்துப் பச்சோந்தியாகவே கருத வைக்கின்றது என்பதை அவர் கவனத்தில் எடுப்பது நல்லது.
கடந்த ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டபோது ஜெனிவா சென்று அரசுக்கு எதிராக சிவராஜா சர்வதேச ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தியாவிலிருந்து இயங்கும் இளைய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் ஜெனிவாவிலிருந்து கொண்டே அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதேபோல் லண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் ஜெனிவாவில் இருந்தவாறு உண்மை நிலைவரத்தை எடுத்துக் கூறினார். அப்போது இவரை அரச சார்பு சிங்கள ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருந்தன.
ஆனால் இன்று வயிற்றுப் பிழைப்புக்காக அரசுப் பக்கம் ஒட்டிக்கொண்டு என்னைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது. இவர் தனது ஜெனிவா பயணத்தை புரட்டிப் பார்க்கவேண்டும். அதன் பிறகு யார் நீலிக்கண்ணீர் வடிப்பது என்பதையும் யார் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது தெரிய வரும்.

23 ஆகஸ்ட் 2013

இலங்கை மீது திருப்தியில்லை-சல்மான் குர்ஷித்

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அச்சாணியாக இருக்கும், அவர்களின் பாதுகாப்பை ஓரளவேனும் உறுதி செய்யும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை'' என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் நேற்றுக் காலை பா.ஜ.க. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் எழுப்பிய கேள்வியயான்றுக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற மேலவை அமர்வின்போது, "இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வலியுறுத்துமா என்று பா.ஜ.க. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், "13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டுமென்று இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது'' என்று தெரிவித்தார்.

22 ஆகஸ்ட் 2013

ஈழ நேருவை நாடு கடத்த இடைக்கால தடை!

ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் செப்டம்பர் 27-ந் தேதிக்குள் பதில் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

21 ஆகஸ்ட் 2013

இப்படியும் ஒரு கணவன்!

களுத்துறை பன்வில பிரதேசத்தில் இயங்கி வந்த விடுதியொன்றில் பாலியல் தொழில் நடப்பதாக களுத்துறை தெற்கு காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அங்கு சுற்றுவளைப்பை மேற்கொண்ட காவற்துறையினர் பாலுறவுக்காக பெண்களை நாடிச் சென்றவர்கள் போல் சென்று அங்கிருந்த தரகர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த பெண்ணொருவரையும் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஏனைய பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண் கண்டியை சேர்ந்தவர் எனவும் அவரை அவரது கணவரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாகனம் ஒன்றுக்கு தவணைப் பணத்தை செலுத்துவதற்காக பெண்ணின் கணவர், பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

20 ஆகஸ்ட் 2013

மானிப்பாயில் வேட்பாளர் மீது தாக்குதல்!

வடமாகாண சபை வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் இன்தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சேனாதிராஜா கிருஸ்ணகுமார் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை இரவு சென்ற சிலர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றதாக் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலின்போது அவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் மேலும் தெரியவருகிறது.

19 ஆகஸ்ட் 2013

இராணுவ நிகழ்வில் முடியப்பு ரெமிடியஸ்!

newsஇராணுவ நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான முடியப்பு ரெமீடியஸ் தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களைக் கண்டதும் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று இன்று நாவாந்துறையில் இடம்பெற்றது. 512 ஆவது இராணுவத்தினரால் நாவாந்துறையில் 84,85,87,97 ஆகிய கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட 20 குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நாவாந்துறை முஸ்லீம் பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்றது. அந்தநிகழ்விற்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சட்டத்தரணி ரெமீடியஸ் ககலந்து கொண்டிருந்தார். குறித்த விடயத்தினை அறிந்த தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வு இடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டனர். அவர்களது வருகையினை அவதானித்த ரெமிடியஸ் இடத்தை விட்டு தலைமறைவானார். இருப்பினும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரை அணுகிய திணைக்கள உத்தியோகத்தர்களை இராணுவ அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தியதுடன் அவ்வாறான வேட்பாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் பொய் கூறி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ஆகஸ்ட் 2013

சிந்திய குருதி வீண் போகாது-எழிலன் அனந்தி

போரின் முடிவில் தனது கணவர் எழிலனை தானே சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாகவும், அதற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் அனந்தி சசிதரன் (எழிலன்).
யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர்,
“நான் போரினால் பாதிக்கப்பட்டவள். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு அதுவே காரணம்.
நான் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியல்ல, ஆனால் எனது கவணர் எழிலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.
வலயம் 4 முகாமில் வைத்து எனது கணவரை சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் நானே ஒப்படைத்தேன்.
எனது கணவர் தற்போது எங்கிருக்கிறார் என்று இதுவரை எனக்குத் தெரியாது.
அவர் உயிருடன் இருப்பார் என்று நம்புகிறேன். சிறிலங்காவில் கணவரைத் தேடுவது எனது கடமை.
சிறிலங்கா அரசாங்கத்திடமே எனது கணவரை நான் ஒப்படைத்தேன்.
எனவே அவர் காணாமற்போயுள்ள நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.
என்னைப் போன்ற பெண்களுடன் இணைந்து நானும் குரல் எழுப்பவுள்ளேன்.
போரினால் கணவனை இழந்த பெண்களுக்கும், முன்னாள் விடுதலைப் புலிகளின் மனைவிமாருக்கும் எந்தர வாழ்வாதாரத் திட்டங்களும் இல்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர்கள் தவறாக நடத்தப்படுதல், எமது காலாசார அழிப்புகளுக்கு எதிராக நான் போராடப் போகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காணாமல்போனவர்களின் பிரச்சினையை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்தவாரம் சிறிலங்கா வரும் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நவநீதம்பிள்ளையை சந்திக்கும் போது, போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து, எடுத்துக் கூறுவேன்.
பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கையில், ஒரு பையுடன் மட்டும் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியே வந்த என்னையும், மூன்று பெண் குழந்தைகளையும், காப்பாற்றியது, இங்குள்ள மக்களும், புலம்பெயர் சமூகத்தினரும் தான்.
நாம் தோற்றுப்போன சமூகம் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதுவரை காலமும் நாங்கள் செய்த தியாகங்களும், சிந்திய குருதியும் வீண் போகாது எந்த என்பதை இந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

17 ஆகஸ்ட் 2013

மாணவர் படுகொலை ஐ..நா.மனித உரிமைகள் சபைக்கு!

திருகோணமலை மாணவர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரஜிகர் மனோகரன் என்ற மாணவரின் தந்தை மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் இது தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளார்.எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் அமர்வின் போது இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, மனோகரன் மனித உரிமைகள் சபையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு தாம் சாட் சியமளித்துள்ளதாகவும், இத னால் விசாரணை அறிக்கை தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமை தமக்கு இருப்ப தாகவும் மருத்துவர் மனோகரன் தெரிவித்துள்ளார். உண்மையான கொலையாளிகளையும் என்ன நேர்ந்தது என்பதனையும் இந்த அறிக் கையின் மூலம் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டின் பேரில் 12 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 ஆகஸ்ட் 2013

இயக்குனர் மணிவண்ணனின் மனைவி மரணம்!

கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

15 ஆகஸ்ட் 2013

அனைத்துலக விசாரணைக்கு பிரதமர் உருத்திரகுமாரன் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 99ம் விதியின் கீழ் ஐ.நா செயலாளர் நாயகம் தனது உட்கிடையான அதிகாரங்களை பயன்படுத்தி முள்ளிவாய்கால் இனப்படுகொலை தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை கொண்டுவர அமெரிக்க அரசு தனது தார்மீக, இராஜதந்திர வளங்களை பயன்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களின் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களுக்கு இவ்விவகாரம் தொடர்பில் எழுத்தியுள்ள கடித்திலேயே இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்அவர்கள் முன்வைத்துள்ளார்.
21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடுமையான இன அழிப்புகளில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு ஒன்றென்றும், இவ் இனஅழிப்பு அமெரிக்க அரசுத் தலைவர் ஒபமாவின் காலத்திலேயே இடம் பெற்றதெனவும் இக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விமர்சன அறிக்கையிலும், அமெரிக்க சர்வதேச சட்ட சஞ்சிகையில் பிரசுரமான பேராசிரியர் ஸ்டீவன் ரட்ணரின் ஆய்வுக்கட்டுரையிலும் நீதி வழங்குவதற்காக அரசியல் சூழலும், நீதிபரிபாலன சூழலும் சிறிலங்காவின் உள்ளே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அனைத்துலக விசாரணை ஒன்றின் மூலமே நீதி வழங்கலாம் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் அரசியல் நலன்கள் prevalent ஆக இருப்பதால் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை ஐக்கிய நாடுகள் பட்டத்தின் 99வது விதியின் கீழ் அமைக்கலாம், அமைக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் வி.உருத்திரமாரன் அவர்கள் தனது கடிதத்தில் தெளிவாக இடித்துரைத்துள்ளார். இக்கருத்துடன் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகர்கள், அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு ஆகியனவும் ஒருமித்துள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
தண்டனையினை (Impunity) சகித்துக்கொள்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும். மேலும் தேசிய இனப் பிரச்சனைகள் தொடர்பாக பிற நாடுகளுக்கும் ‘சிறிலங்காக் தீர்வு’ என்னும் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். அது அனைத்துலக பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்பது சொல்லத் தேவையில்லை என அக்கடித்தில் குறிக்கப்பட்டுள்ளதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நாவுக்கான சமந்தா பவர் அவர்களின் நியமனம் அமெரிக்கவின் செனட் சபையினால் அங்கிகாரப்பட்டமைக்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் அனைத்துலக குடிசார் சமுகம், அனைத்துலக உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகமயமாக்கலும் தொழில்நுட்ப புதுமைகளும் (Technological innovation) மக்கள்சக்தியின் மேலிருந்த தடையினை (மூடியை) நீக்கிவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய செயலாளர் நாயகத்தின் மேல் தார்மீக அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து குடிசார் சமுகத்தை ஒருங்கிணைத்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் பட்டத்தின் 99ம் பிரிவின் கீழ் விசாரணை பொறிமுறையை அமைக்க கோரி, 1000 அரசுசார்பற்ற நிறுவனங்களின் ஆதரவினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டி வருகின்றமையும் தூதுவர் சமந்தா பவரின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

14 ஆகஸ்ட் 2013

தமிழீழமே இறுதித்தீர்வு-மே பதினேழு இயக்கம்

வட தமிழீழத்தில் நடைபெற இருக்கும் மாகாணசபை தேர்தலுக்கு எதிராகவும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் மே பதினேழு இயக்கம் 17-08-2013, மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

13 ஆகஸ்ட் 2013

மெட்ராஸ் கபே படத்தில் தேசியத்தலைவராக அஜய்?

மெட்ராஸ் கஃபே படத்தில் அஜய் ரத்னம் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்று உடையணிந்து, மீசை வைத்துள்ளார்.
ஷூஜித் சர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், நர்கிஸ் ஃபக்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் மெட்ராஸ் கஃபே. படத்தில் 1990களில் இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் குறித்து காட்டுகிறார்களாம். படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என்று தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள அஜய் ரத்னத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்று உடை அணிந்துள்ளார். மேலும் அவரைப் போன்றே மீசையும் வைத்துள்ளார். அஜய்யை பார்த்தால் தேசியத் தலைவர்தான் நினைவுக்கு வருகிறார். இதனால் அஜய் தேசியத்தலைவராக நடித்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இயக்குனரை கேட்டால் இது ஒரு படம், தயவு செய்து எதுவும் யூகிக்காதீர்கள் என்கிறாராம்.

12 ஆகஸ்ட் 2013

பதவி விலகுமாறு கோருவதற்கு ரிசாட் பதியூதீனுக்கு உரிமையில்லை!

அமைச்சர் ரிசாட் பதியூதீனின் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை என காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கிராண்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்துறை மா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதீன் கோரியிருந்தார். எனினும் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தம்மை நியமித்ததாகவும், தம்மை பதவி விலகுமாறு கோர அமைச்சருக்கு உரிமையில்லை. குறைந்தளவான அதிகாரத்தைப் பயன்படுத்தி மோதலைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு அமையவே காவல்துறையினர் கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது செயற்பட்டதாகவும். வெலிவேரியவில் இடம்பெற்றதனைப் போன்ற சம்பவங்கள் இடம்பெற வேண்டும் என அமைச்சர் பதியூதீன் விரும்புகின்றாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

11 ஆகஸ்ட் 2013

கொழும்பில் தொடர்ந்து பதற்றம்!

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மசூதி மீது நேற்றுமாலை, பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கிரான்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள மாடிக்கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மசூதி மீது, நேற்று மாலை தொழுகை முடிந்த பின்னர், சுமார் 100 பேர் வரையிலான பௌத்த அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதன்போது, அருகிலுள்ள வீடுகள், வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு வழங்கிய இரு காவல்துறையினர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்றிரவு தொடக்கம் இன்று காலை 7 மணிவரையும் கிரான்ட்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
சுவர்ண சைத்திய வீதியில் உள்ள இந்த மசூதியை அகற்ற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் பொதுபல சேனாவின் பெளத்த பிக்குகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் போராட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆகஸ்ட் 2013

நாவற்குழி சிங்கள குடியேற்றத்தில் கைக்குண்டுவெடிப்பு!

நாவற்குழியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்றப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இன்றிரவு நடந்துள்ளது. யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழிப் பகுதியில் அண்மையில் முளைத்துள்ள குறித்த சிங்கள குடியேற்றத்திட்டத்தில் அமைந்துள்ள தர்மசால எனப்படும் யாத்திரீகர் மடம் மீதே கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றிரவு சுமார் எட்டு மணியளவினில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
கார் ஒன்றில் சென்றவர்களே தாக்குதலை நடத்திவிட்டு தப்பித்துச் சென்றதாக அருகாகவுள்ள சிங்கள குடியேற்றவாசிகள் தெரிவித்தனர். குண்டு வெடித்த வேளை அப்பகுதியில் எவரும் தங்கியிராமையினால் ஆட்சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான குறித்த காணியில் கடந்த இருவருடங்களிற்கு முன்னதாக அடாத்தாக குடியேறிய சிங்கள குடியேற்றவாசிகளிற்கு பொதுபல சேனா தற்போது நிரந்தர வீடுகளை கட்டி வழங்கிவருகின்றது. எனினும் பாதுகாப்பிற்காக குறித்த குடியேற்றபகுதியின் நடுவிலும் சூழவும் படையினர் நிலைகொள்ளவைக்கப்பட்டு உள்ளதுடன் நிரந்தர படைமுகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிங்கள குடியேற்றவாசிகளை எவரும் சந்திப்பதாயின் படை முகாமில் அனுமதி பெற்றபின்னரே சந்திக்க முடியும். இந்நிலையில் அண்மையில் பெருமெடுப்பில் குடியேற்றவாசிகளது வழிபாட்டிற்கு புதிய விகாரையொன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்டும் வருகின்றது.
தேர்தல் அறிவிப்பு மற்றும் அது தொடர்பான பரபரப்பினிடையே இக்குண்டு வெடிப்பு நடந்துள்ள போதும் படைத்தரப்பினர் இடையிலோ குடியேற்றவாசிகள் இடையிலோ பரபரப்பு காணப்படாதது சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதென
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

09 ஆகஸ்ட் 2013

விமானப்படையை நவநீதம்பிள்ளை நம்பவில்லையென ரம்புக்கல கவலை!

இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கை விமானப்படையின் விமானங்கள் மீது நம்பிக்கை இல்லையாம். இனி நாம் என்ன செய்வது? அப்படியானால் ஐ.நா. விமானத்திலேயே வர வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை ஐ.நா. விமானத்திலேயே வந்து வடக்கு உட்பட தேவையான அனைத்து இடங்களுக்கும் சென்று எதிர்பார்க்கும் உண்மைகளை கண்டறிய அரசாங்கம் இடமளிக்கும். உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதில்லையா? வெலிவேரியவில் ஒரு சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதனை மீண்டும் தூண்டி அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முற்படுவது நியாயமில்லை என ரம்புக்கல தெரிவித்துள்ளதுடன்,பொதுநலவாய மாநாட்டை பாதிக்கும் அல்லது ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிராக மேலும் நெருக்கடிகள் வலுவடையும் என்பதெல்லாம் உள்நோக்கங்களைக் கொண்ட பிரசாரங்கள் எனவும் ரம்புக்கல குறிப்பிட்டுள்ளார்.

08 ஆகஸ்ட் 2013

புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த 05 பேர் தேர்தலில்!

விடுலைப்புலிகள் அமைப்புடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த 05 பேர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி ஒருவரே இவர்களை மீண்டும் அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த அரசியல்வாதி புலிகளின் யாழ்ப்பாண கட்டளை தளபதியான தீபனின் நெருங்கிய உறவினர் எனவும் திவயின கூறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஆனந்தி என்ற பெண், புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக சம்பந்தன் உரை!

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றில் குரல் கொடுக்கவுள்ளது. காணி அபகரிப்புத் தொடர்பில் நாடாளுமன்றில் கூட்டமைப்பு சமர்ப்பித்த பிரேரணை இன்று மாலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது இதுதொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் முதலில் உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் ஆளுந்தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

06 ஆகஸ்ட் 2013

அடடே,சிறீலங்கா பொலிசாரா இப்படி?!

ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பாராட்டப்பட்டப்பட்டுள்ளனர். கே. பண்டார (பி.சி. 77890) மற்றும் ஏ.பி. ஜயசிங்க (பி.சி. 75821) ஆகிய போக்குவரத்து பொலிஸாரே மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி. இந்திரனினால் பாராட்டப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பழைய கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலை செய்யும் நோக்கோடு ஆற்றினுள் 28 வயதுடைய யுவதி குதித்துள்ளார். இதன்போது கல்லடிப் பாலத்தில் கடமையிலிருந்த குறித்த இரண்டு பொலிஸாரும் ஆற்றினுள் பாய்ந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டுள்ளனர்.
இந்த துணிகர முயற்சியை கேள்வியுற்ற மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் இரண்டு போக்குவரத்து பொலிஸாரையும் அழைத்துப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணிடம் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

05 ஆகஸ்ட் 2013

ஜெயரட்ணத்தை கடத்தியது கபில் அம்மானின் ஆட்கள்!

ஜெயரெத்தினம் மனைவியுடன் 
கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட சிறிலங்கா காவல்துறையின் புலனாய்வு நிபுணரான இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் மற்றும், சிறிலங்கா இராணுவ கப்டன் லக்கி ஆகியோர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக, விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவில் கபில் அம்மான் தலைமையில் இயங்கிய முன்னாள் உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் தடுப்புக்காவலில் உள்ள அவர், தீவிரவாத முறியடிப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், சிறிலங்கா இராணுவ கப்டன் லக்கி, வவுனியாவைச் சேர்ந்த புலனாய்வாளர் இப்ராகிம் உள்ளிட்ட, தாம் பிடித்து வைத்திருந்த 80 பேரை விடுதலைப் புலிகள் கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
வள்ளிபுனத்தில் உள்ள அல்பா 5, புதுக்குடியிருப்பில் உள்ள அல்பா 2 ஆகிய சிறைகளில் வைத்து இவர்கள் கொல்லப்பட்ட பின்னர், அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய மேலும் மூன்று விடுதலைப் புலிகள், இயக்க உறுப்பினர்கள் மூவர் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் வைத்து கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களும், கபில் அம்மான் தலைமையில், இயங்கியவர்கள் என்றும், சிறிலங்காப் படை அதிகாரிகளின் கடத்தல்கள், கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், கல்கிசை காவல் நிலையத்தில், தீவிரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து வந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், 2005 ஏப்ரல் 20ம் நாள், கல்கிசையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கடத்தப்பட்டு காணாமற்போனார்.
வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், சிலாபம் வழியாக படகு மூலம் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கைதான புலிகள் இயக்க சந்தேக நபர் கூறியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், இராணுவ கப்டன் லக்கி மற்றும் தம்மைக் காட்டிக் கொடுத்ததாக சந்தேகித்த பலரையும், இரண்டு தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைத்திருந்ததாகவும் முன்னாள் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த சுமார் 30 பேர், கண்கள் கட்டப்பட்டு 2006ம் ஆண்டு மே மாதம் ஒட்டுசுட்டான் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு மாதம் கழித்து, 2006 ஜுலையில், மேலும் 50 பேர் இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் அனைவரது சடலங்களும் எரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் வெளியிட்டுள்ள தகவலின் படி இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், 2006 செப்ரெம்பர் மாதம் வள்ளிபுனம் காட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.
விசுவமடு தொட்டியடி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ கப்டன் லக்கி, 2009இல் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு பொறுப்பாக இருந்த காந்தி என்ற புலிகள் இயக்க முக்கிய தலைவரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.

04 ஆகஸ்ட் 2013

அரச நிகழ்வில் தேர்தல் பிரசாரம்!

news
டக்ளஸ்,ஹத்துருசிங்க 
வடக்குத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரும், படையினரும், அரச அதிகாரிகளும் அரச நிகழ்வைப் பயன்படுத்திய போதும் தேர்தல்கள் திணைக்களத்தினாலேயோ, பொலிஸாராலேயோ அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் மௌனம் சாதிப்பது நீதியான தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என்று இந்த மாதம் முதலாம் திகதி தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவம் வைத்திருந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு அரியாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன்ஆளும்கட்சி சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸூம் கலந்து கொண்டார். இதனை விட இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ், ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவாக வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தேர்தல்கள் விதிமுறைகளின் பிரகாரம், தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச நிகழ்வில் அரசியல் எதுவும் பேசக் கூடாதென்பதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் அவ்வாறான நிகழ்வுகளில் பங்கெடுக்கக் கூடாது. ஆயினும், இவற்றை மீறி நடந்த இந்த நிகழ்வுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்க முன்வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீருவில் பூங்கா சேதப்படுத்தப்பட்டுள்ளது!

வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது :யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவம் இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் நினைவிடம் ஒன்று இருந்ததுடன் போருக்கு பின்னர் அதனை இராணுவத்தினர் முற்றாக சேதப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் வல்வை நகர சபைக்கு சொந்தமான பூங்காவை புனரமைத்து, நகர சபை மக்களின் பாவனைக்கு வழங்கியிருந்தது.
இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த இராணுவத்தினர் குறித்த பூங்கா தமக்குரியது எனவும் அதனை தமக்கு வழங்குமாறு கோரியிருந்தனர். அதனை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் மேற்படி பூங்கா நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

03 ஆகஸ்ட் 2013

வாசுதேவ நாணயக்காரவையும் பகைக்கிறார் மகிந்த!

news
வாசுதேவ நாணயக்கார 
சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளரை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடைசி நேரத்தில் நீக்கியுள்ளது. ஆளும்கட்சியின் இந்த நடவடிக்கை குறித்து, கடும் விசனம் கொண்டுள்ள வாசுதேவ நாணயக்கார, இது குறித்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வவுனியா மாவட்டத்தில், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கு, சங்கரலிங்கம் என்ற வேட்பாளரை நிறுத்த வாசுதேவ நாணயக்கார முடிவு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கு இடமளிக்கப்பட்டது. இது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு பலத்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ஆழ்ந்த அதிருப்தியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம் ஜெயந்தவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தமது வேட்பாளர் எதற்காக நீக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பி, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு சிறிலங்கா ஜனாதிபதியிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசு தனது கட்சியை முறையின்றி நடத்துவது சினங்கொள்ள வைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

02 ஆகஸ்ட் 2013

கதிர்காமரின் மகனின் காணியையும் அரசு பறித்துள்ளதாம்!

கதிர்காமர் 
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஆணை கோரும் மனுவொன்றையே அவர் தாக்கல் செய்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச்சொத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவே அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக 1995 ஆம் ஆண்டு கடமையாற்றிய முறைப்பாட்டாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் எஸ்.ஜே. கிறிஸ்ரியன் கதிர்காமரே மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடற்படையைச்சேர்ந்த அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர், இலங்கை இராணுவத்தின் மேஜர் செல்வநாதன் கதிர்காமநாதர், பிரபல இராணி சட்டத்தரணி சாம் கதிர்காமர் ஆகியோர் தனது நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறியுள்ளார். தனது மூதாதையர்வழி சொத்தான இந்த காணி, ஆழ்வார் மலையடி மாவிட்டபுரத்தில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது நிலம் பொது தேவைக்காக தேவைப்படுவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால், இதற்கான காரணம் பாதுகாப்பு படையணி தலைமையகம் அமைத்தல் என கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பாதுகாப்பு படை 6381 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியை பொறுப்பேற்கும் அறிவித்தல்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வரவில்லை என்பதையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது முதுசமான காணியை பிரதிவாதி பொறுப்பேற்பதை தடைச்செய்யும் தடையுத்தரவை ஒன்றை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

நன்றி:தினக்கதிர் 

01 ஆகஸ்ட் 2013

வடக்கில் கோத்தாவிற்கு தடை!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உருவப்படத்தைப் பயன்படுத்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, முஸ்லிம் வர்த்தகரான சிராஸ் யாழ்ப்பாணத்தில் கோத்தாபய ராஜபக்சவின் படத்துடன் பெருமளவு சுவரொட்டிகளை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, அவருக்கு ஆதரவானவர்கள் யாழ்.செயலகத்துக்கு முன்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன்பின்னர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட்ட இடம், சிராசுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையிலேயே, கோத்தபாய ராஜபக்சவின் ஒளிப்படத்தைப் பயன்படுத்தியதால்தான், வேட்பாளர் பட்டியலில அவரைச் சேர்த்துக் கொள்வதில் இழுபறி ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். மேலும், கோத்தபாய ராஜபக்சவின் படத்தையோ, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் படத்தையோ தேர்தல் சுவரொட்டிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும் சிராசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கோத்தபாய ராஜபக்சவின் படத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுமாறும் வேட்பாளர் சிராசுக்கு, அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த உத்தரவிட்டுள்ளார்.