28 ஆகஸ்ட் 2013

நீங்களும் காணாமற்போவீர்கள்-மக்களுக்கு மிரட்டல்!

"உங்கள் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் என நவநீதம்பிள்ளையிடம் மனுக் கொடுத்துள்ளீர்கள். இதனால் உங்கள் பிள்ளையின் நிலையே உங்களுக்கும் ஏற்படும்.''இப்படி நேற்று மாலை 6.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.அத்துடன் முள்ளிவாய்க்கால், கேப்பாபிலவு, புதுமாத்தளன் பகுதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பிரச்சினைகளை எடுத்துக் கூறிய மக்களின் விவரங்களை திரட்டும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. புலனாய்வாளர்களின் இந்த நடவடிக்கை குறித்து அங்கிருந்தவர்களால் உடனடியாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. நவநீதம்பிள்ளை மக்களுடன் உரையாடிய இடங்களுக்கு சிவில் உடையில் சென்ற புலனாய்வாளர்கள் அவருடன் உரையாடியவர்களின் விவரங்களை பெற்றுக்கொண்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளில் அச்சநிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இது குறித்து உடனடியாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதேவேளை, நேற்று ஆணையாளர் பயணம் செய்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வீதிகளில் இராணுவத்தினர் இல்லை. பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இராணுவத்தினரில் பெருமளவானோர் சிவில் உடையில் நடமாடினர் என்றும் சில இடங்களில் நவநீதம்பிள்ளையுடன் பேசக்கூடாது என்று மக்கள் மிரட்டப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக