02 ஆகஸ்ட் 2013

கதிர்காமரின் மகனின் காணியையும் அரசு பறித்துள்ளதாம்!

கதிர்காமர் 
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஆணை கோரும் மனுவொன்றையே அவர் தாக்கல் செய்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச்சொத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவே அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக 1995 ஆம் ஆண்டு கடமையாற்றிய முறைப்பாட்டாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் எஸ்.ஜே. கிறிஸ்ரியன் கதிர்காமரே மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடற்படையைச்சேர்ந்த அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர், இலங்கை இராணுவத்தின் மேஜர் செல்வநாதன் கதிர்காமநாதர், பிரபல இராணி சட்டத்தரணி சாம் கதிர்காமர் ஆகியோர் தனது நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறியுள்ளார். தனது மூதாதையர்வழி சொத்தான இந்த காணி, ஆழ்வார் மலையடி மாவிட்டபுரத்தில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது நிலம் பொது தேவைக்காக தேவைப்படுவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால், இதற்கான காரணம் பாதுகாப்பு படையணி தலைமையகம் அமைத்தல் என கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பாதுகாப்பு படை 6381 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியை பொறுப்பேற்கும் அறிவித்தல்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வரவில்லை என்பதையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது முதுசமான காணியை பிரதிவாதி பொறுப்பேற்பதை தடைச்செய்யும் தடையுத்தரவை ஒன்றை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

நன்றி:தினக்கதிர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக