18 ஆகஸ்ட் 2013

சிந்திய குருதி வீண் போகாது-எழிலன் அனந்தி

போரின் முடிவில் தனது கணவர் எழிலனை தானே சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாகவும், அதற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் அனந்தி சசிதரன் (எழிலன்).
யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர்,
“நான் போரினால் பாதிக்கப்பட்டவள். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு அதுவே காரணம்.
நான் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியல்ல, ஆனால் எனது கவணர் எழிலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.
வலயம் 4 முகாமில் வைத்து எனது கணவரை சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் நானே ஒப்படைத்தேன்.
எனது கணவர் தற்போது எங்கிருக்கிறார் என்று இதுவரை எனக்குத் தெரியாது.
அவர் உயிருடன் இருப்பார் என்று நம்புகிறேன். சிறிலங்காவில் கணவரைத் தேடுவது எனது கடமை.
சிறிலங்கா அரசாங்கத்திடமே எனது கணவரை நான் ஒப்படைத்தேன்.
எனவே அவர் காணாமற்போயுள்ள நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.
என்னைப் போன்ற பெண்களுடன் இணைந்து நானும் குரல் எழுப்பவுள்ளேன்.
போரினால் கணவனை இழந்த பெண்களுக்கும், முன்னாள் விடுதலைப் புலிகளின் மனைவிமாருக்கும் எந்தர வாழ்வாதாரத் திட்டங்களும் இல்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர்கள் தவறாக நடத்தப்படுதல், எமது காலாசார அழிப்புகளுக்கு எதிராக நான் போராடப் போகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காணாமல்போனவர்களின் பிரச்சினையை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்தவாரம் சிறிலங்கா வரும் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நவநீதம்பிள்ளையை சந்திக்கும் போது, போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து, எடுத்துக் கூறுவேன்.
பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கையில், ஒரு பையுடன் மட்டும் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியே வந்த என்னையும், மூன்று பெண் குழந்தைகளையும், காப்பாற்றியது, இங்குள்ள மக்களும், புலம்பெயர் சமூகத்தினரும் தான்.
நாம் தோற்றுப்போன சமூகம் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதுவரை காலமும் நாங்கள் செய்த தியாகங்களும், சிந்திய குருதியும் வீண் போகாது எந்த என்பதை இந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக