04 ஆகஸ்ட் 2013

அரச நிகழ்வில் தேர்தல் பிரசாரம்!

news
டக்ளஸ்,ஹத்துருசிங்க 
வடக்குத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரும், படையினரும், அரச அதிகாரிகளும் அரச நிகழ்வைப் பயன்படுத்திய போதும் தேர்தல்கள் திணைக்களத்தினாலேயோ, பொலிஸாராலேயோ அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் மௌனம் சாதிப்பது நீதியான தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என்று இந்த மாதம் முதலாம் திகதி தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவம் வைத்திருந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு அரியாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன்ஆளும்கட்சி சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸூம் கலந்து கொண்டார். இதனை விட இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ், ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவாக வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தேர்தல்கள் விதிமுறைகளின் பிரகாரம், தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச நிகழ்வில் அரசியல் எதுவும் பேசக் கூடாதென்பதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் அவ்வாறான நிகழ்வுகளில் பங்கெடுக்கக் கூடாது. ஆயினும், இவற்றை மீறி நடந்த இந்த நிகழ்வுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்க முன்வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக