27 ஆகஸ்ட் 2013

அழுது புலம்பிய காணமற்போனோரின் உறவினர்கள்!தடுத்து நிறுத்திய பொலிஸார்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில், காணாமற்போனோரின் உறவுகள் அவரை சந்கிக்கும் நோக்கில் ஒன்று கூடியிருந்தனர்.
யாழ். பொதுநூலக முன்பக்க வாசலில் காணாமற்போனோரின் உறவுகள் சுலோகங்கள் சகிதம் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண ஆளுநர், அரச அதிபர்கள், மற்றும் மாகாண அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை நூலகத்திற்கு முன்பக்கமாக காணாமற்போனோரின் உறவுகள், காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும் நீதியான விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி கதறி அழுதனர்.
போரின் பின்னரான அபிவிருத்தி தொடர்பாக ஆணையாளருக்கு, விளக்கம் அளிக்கப்பட்டு கொண்டிருந்தவேளை வெளியே காணாமற்போனோரின் உறவுகள் தம் உறவுகளை தேடித்தருமாறு கதறி அழுது கொண்டு இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கலந்துரையாடலை முடித்து கொண்டு வெளியேறிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை காணாமற்போனோரின் உறவுகள் சந்திக்க முற்பட்டு, முன்பக்க வாசலை நோக்கி சென்றவேளை, அவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதனை அடுத்து நவநீதம்பிள்ளை அடங்கிய குழுவினர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி சென்று விட்டனர்.
அதேவேளை காணாமற்போனோரின் உறவுகள் 15 பேர் அடங்கிய குழு ஒன்று யாழ். ஐ.நா அலுவகத்தில் நவநீதம்பிள்ளையை சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக