10 ஆகஸ்ட் 2013

நாவற்குழி சிங்கள குடியேற்றத்தில் கைக்குண்டுவெடிப்பு!

நாவற்குழியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்றப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இன்றிரவு நடந்துள்ளது. யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழிப் பகுதியில் அண்மையில் முளைத்துள்ள குறித்த சிங்கள குடியேற்றத்திட்டத்தில் அமைந்துள்ள தர்மசால எனப்படும் யாத்திரீகர் மடம் மீதே கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றிரவு சுமார் எட்டு மணியளவினில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
கார் ஒன்றில் சென்றவர்களே தாக்குதலை நடத்திவிட்டு தப்பித்துச் சென்றதாக அருகாகவுள்ள சிங்கள குடியேற்றவாசிகள் தெரிவித்தனர். குண்டு வெடித்த வேளை அப்பகுதியில் எவரும் தங்கியிராமையினால் ஆட்சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான குறித்த காணியில் கடந்த இருவருடங்களிற்கு முன்னதாக அடாத்தாக குடியேறிய சிங்கள குடியேற்றவாசிகளிற்கு பொதுபல சேனா தற்போது நிரந்தர வீடுகளை கட்டி வழங்கிவருகின்றது. எனினும் பாதுகாப்பிற்காக குறித்த குடியேற்றபகுதியின் நடுவிலும் சூழவும் படையினர் நிலைகொள்ளவைக்கப்பட்டு உள்ளதுடன் நிரந்தர படைமுகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிங்கள குடியேற்றவாசிகளை எவரும் சந்திப்பதாயின் படை முகாமில் அனுமதி பெற்றபின்னரே சந்திக்க முடியும். இந்நிலையில் அண்மையில் பெருமெடுப்பில் குடியேற்றவாசிகளது வழிபாட்டிற்கு புதிய விகாரையொன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்டும் வருகின்றது.
தேர்தல் அறிவிப்பு மற்றும் அது தொடர்பான பரபரப்பினிடையே இக்குண்டு வெடிப்பு நடந்துள்ள போதும் படைத்தரப்பினர் இடையிலோ குடியேற்றவாசிகள் இடையிலோ பரபரப்பு காணப்படாதது சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதென
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக