05 ஆகஸ்ட் 2013

ஜெயரட்ணத்தை கடத்தியது கபில் அம்மானின் ஆட்கள்!

ஜெயரெத்தினம் மனைவியுடன் 
கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட சிறிலங்கா காவல்துறையின் புலனாய்வு நிபுணரான இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் மற்றும், சிறிலங்கா இராணுவ கப்டன் லக்கி ஆகியோர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக, விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவில் கபில் அம்மான் தலைமையில் இயங்கிய முன்னாள் உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் தடுப்புக்காவலில் உள்ள அவர், தீவிரவாத முறியடிப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், சிறிலங்கா இராணுவ கப்டன் லக்கி, வவுனியாவைச் சேர்ந்த புலனாய்வாளர் இப்ராகிம் உள்ளிட்ட, தாம் பிடித்து வைத்திருந்த 80 பேரை விடுதலைப் புலிகள் கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
வள்ளிபுனத்தில் உள்ள அல்பா 5, புதுக்குடியிருப்பில் உள்ள அல்பா 2 ஆகிய சிறைகளில் வைத்து இவர்கள் கொல்லப்பட்ட பின்னர், அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய மேலும் மூன்று விடுதலைப் புலிகள், இயக்க உறுப்பினர்கள் மூவர் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் வைத்து கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களும், கபில் அம்மான் தலைமையில், இயங்கியவர்கள் என்றும், சிறிலங்காப் படை அதிகாரிகளின் கடத்தல்கள், கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், கல்கிசை காவல் நிலையத்தில், தீவிரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து வந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், 2005 ஏப்ரல் 20ம் நாள், கல்கிசையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கடத்தப்பட்டு காணாமற்போனார்.
வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், சிலாபம் வழியாக படகு மூலம் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கைதான புலிகள் இயக்க சந்தேக நபர் கூறியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், இராணுவ கப்டன் லக்கி மற்றும் தம்மைக் காட்டிக் கொடுத்ததாக சந்தேகித்த பலரையும், இரண்டு தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைத்திருந்ததாகவும் முன்னாள் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த சுமார் 30 பேர், கண்கள் கட்டப்பட்டு 2006ம் ஆண்டு மே மாதம் ஒட்டுசுட்டான் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு மாதம் கழித்து, 2006 ஜுலையில், மேலும் 50 பேர் இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் அனைவரது சடலங்களும் எரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் வெளியிட்டுள்ள தகவலின் படி இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், 2006 செப்ரெம்பர் மாதம் வள்ளிபுனம் காட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.
விசுவமடு தொட்டியடி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ கப்டன் லக்கி, 2009இல் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு பொறுப்பாக இருந்த காந்தி என்ற புலிகள் இயக்க முக்கிய தலைவரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக