30 டிசம்பர் 2013

அறிக்கை சமர்ப்பிக்கிறார் நவிபிள்ளை!

மார்ச்மாதம் 3ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாகும் நிலையில் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை அதன் ஆணையாளரான நவநீதம் பிள்ளை மார்ச் 26 ஆம் திகதி சமர்பிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்போது இந்த அறிக்கை குறித்த சிறிலங்கா அரசின் கருத்துகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த மனித உரிமைப் பேரவையில் நவநீதன் பிள்ளையினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான அறிக்கைக்கு அமைய அந்த நாடு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துக்கு முன்னரான காலப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

26 டிசம்பர் 2013

புத்தர் சிலை உடைப்பு!

இன்று அதிகாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிள்ளையாரடி பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று உடைக்கபப்ட்டுள்ளது.
100 விழுக்காடு தமிழர்கள் வாழும் இந்த பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் அடாத்தாக ராணுவப் பாதுகாப்புடன் குறித்த புத்தர் சிலை பேரினவாத பிக்குகளால் நிறுவப்பட்டது. இதன் போது தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து அது வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை பல பாகங்களாக நொருங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவ இடத்தில் சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் பௌத்த மக்கள் எவரும் இல்லாத பட்சத்தில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்அங்கு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை தனியார் காணியொன்றில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மீட்கப்பட்ட புத்தர் சிலையின் பாகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் சம்பவம் குறித்து புலனாய்வுத் துறையினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மட்டகளப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 டிசம்பர் 2013

நெடுந்தீவு முகிலனின் பாற்காரன் குறும்படம்!

Palkaran 4நெடுந்தீவு முகிலனின் 6வது ஈழத்துக்குறும்படமான பாற்காரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் ராஜா திரயரங்கில் வெகு விமர்சையாக வெளிவந்தது. சர்வதேச தரத்திற்கூடான திரை நுணுக்கங்களோடும், தெனிந்திய சினிமாக்களுக்கு சவாலாகவும் இப்படம் வெளிவந்துள்ளது,
இக்குறும்பட வெளியீட்டு விழாவினை திரைஅரங்கிலேயே படக்குழுவினர் செய்திருந்தனர், இதில் ஆரம்ப நிகழ்வான மங்கள விளக்கேற்றலினை பால்விளக்கு எனும் பெயரில் தனியாக வடிவமைக்கப்பட்ட பால் கொள்கலனில் ஏற்றியது பார்வையாளர்களை மேலும் ஆச்சரியத்துக்கு உட்படுத்தியது
வரவேற்புரையை எஸ். உமாசுதன், அறிமுக உரையை கே. பிரபாகரன், வெளியீட்டுரையை ச. லலேசன் வழங்கினர்.
பண்டிதர் பொன்.சுகந்தன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமவிருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும், சிறப்பு விருந்தினராக சரோஜா சிவச்சந்திரனும் கௌரவ விருந்தினராக சி. ராஜ்குமாரும் பங்குபற்றினார்,
இந்நிகழ்வின் இறுதியில் அனைவரும் ஆவலாக காத்திருந்த பாற்காரன் படம் திரையிடப்பட்டது, மிகவும் துல்லியமான ஒளி ஒலியுடனும், அற்புதமான படப்பிடிப்பு நுணுக்கங்களுடனும், அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் அமைந்திருந்தது,
400 க்கும் அதிகமான மக்கள் வருகைதந்து ராஜா திரையரங்கத்தை நிறைத்ததுடன், திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்களை சொல்லி அவர்களை மேலும் ஊக்குவித்தனர்.

20 டிசம்பர் 2013

வடமாகாணசபை புஸ்வாணமா?-மனோ

சர்வதேச சமூகத்திடம், தனக்கு சார்பாக இந்த அரசு இன்று எடுத்து காட்டிவரும் ஒரே சாதகம், வடமாகாணசபை தேர்தலை நடத்தி, வடக்கில் வட மாகாணசபையை நிறுவியது ஆகும். இன்று இந்த சாதகமும், பாதகமாகும் நிலைமை வடக்கில் தோன்றி வருகிறது.
வடக்கில் தேர்தலை நடத்தி, மாகாணசபை அமைக்கப்பட்டாலும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் நிர்வாகத்துக்கு எந்த வித அதிகாரங்களும் 13ம் திருத்தத்தின்படி வழங்கப்படாமல், தொடர்ந்தும் ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது என்ற கருத்து இன்று மேலெழுந்து வருகிறது. அடுத்த மார்ச் மாதம் வரப்போகும் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் இதுபற்றி திட்டவட்டமாக தெரிந்து கொள்ளும் தேவை உலகத்துக்கு இருக்கிறது.
இது உண்மையா என்பதை பற்றி உலகம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம்தான் உலகம் கேட்டு தெரிந்து கொள்ளுமே தவிர வடக்கு ஆளுநர் சந்திரசிறியிடம் கேட்காது என்பதை உங்கள் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வீ .எப்.எம் பண்பலை வானொலியில் “சித்தாமுள்ள” என்ற சிங்கள மொழியிலான பிரபல நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் எச். ஆர். மித்ரபாலவிடம் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரையாடிய மனோ கணேசன் கூறியதாவது,
நீங்கள் பட்ஜெட்டில் மாகாணசபைகளுக்கு 148 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இதில் ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு 111 பில்லியன் போக மிகுதி 37 பில்லியன்தான் மாகாணங்களின் அபிவிருத்தி நிதி. இதுவும் வட மாகாணசபை உட்பட ஒன்பது மாகாணசபைக்குமான தொகை என்பதை மறக்க வேண்டாம். ஆனால், பாதுகாப்பு, நகர அபிவிருத்தி என்ற ஒரே ஒரு அமைச்சுக்கு மட்டும் 270 பில்லியன் ஒதுக்கியுள்ளீர்கள்.
போலிஸ், காணி விடயங்களை தவிர்த்து பார்த்தாலும் கூட 35 விடயங்கள் மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விடயங்களையும் இன்று மத்திய அரசாங்கமே கையில் எடுத்து கொண்டுள்ளது. ஆகவே மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆனால், இந்த அரசியலமைப்பை மீறும் செயல் பற்றி ஏனைய மாகாணசபைகள் மூச்சு விடுவது இல்லை. வடமாகாணசபையும் இப்படியே சொல்வதை கேட்டுக்கொண்டு, தருவதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.
இந்த பம்மாத்தை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வடக்கில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டே, அதிகாரங்களை ஆளுநர் மூலம் நடைமுறைபடுத்தும் உங்கள் போக்கு விரைவில் முடிவுக்கு வரும். ஒன்றில் மாகாணசபை முறைமையை ஒழியுங்கள். அல்லது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்துக்கு சட்டப்படி உள்ள அதிகாரங்களை வழங்குங்கள். உலகத்துக்கு வட மாகாணசபை தேர்தலை நடத்திவிட்டோம், வட மாகாணசபையை அமைத்துவிட்டோம் என அறிவித்தல் கொடுத்துவிட்டு மறுபுறம் அதை ஒரு புஸ்வாண வெற்று சபையாக வைத்திருக்க பார்க்கிறீர்கள். நாடு முழுக்க மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரம் இல்லையென்றால் எதற்காக 111 பில்லியன் ரூபா செலவில் ஊழியர்களும், கட்டிடங்களும், நிர்வாக செலவுகளும் என கேட்கிறேன்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் வருகிறது. அதற்கு முன்னர் உலகம் வடக்கில் மாகாணசபை நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறது. அதுபற்றி இப்போதே தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆளுனர் சந்திரசிறி ஒரு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல. எனவே வடக்கு மாகாணசபை நிர்வாகம் பற்றி வடக்கு முதல்வர் கூறும் கருத்துக்கு மிகவும் முக்கியத்துவம் காத்திருக்கின்றது. முதல்வர் என்ற பெயரில் வடமாகாணசபையை தொடர்ந்து வெற்று புஸ்வான சபையாக வைத்துக்கொண்டு இருக்க விக்கினேஸ்வரானால் முடியாது. மறுபுறம் இந்த சபையை சுட்டிக்காட்டி உலகத்துக்கு பொய்மை தோற்றம் காட்டும் அரசின் முயற்சிக்கு துணை போகவும் அவரால் முடியாது. ஆகவே அவர் உரிய நேரத்தில் உண்மையைதான் கூறுவார். அதைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
அதற்கு முன்னர் வடமாகாணசபைக்கு, 13ம் திருத்தத்தின்படி உரிய அதிகாரங்களை வழங்கி நிலைமை பாரதூரமடையமுன் அதை சீர் செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதைத்தான் உங்கள் அரசு தலைவர் ஜானதிபதிக்கு சில தினங்களுக்கு முன்னர் நான் சொன்னேன். இப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச, வடக்கு வசந்தம் திட்ட பொறுப்பில் இல்லையென தெரிகிறது. அதில் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொறுப்பு வகிப்பதாக, ஜனாதிபதியின் பேச்சில் தெரிகிறது. எனவே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஒரு நிகழ்வில் சந்தித்த போது இதையே அவருக்கு நான் சொன்னேன். வடக்கில் சுமூகமான நிலைமை நிலவுமானால் அது தெற்கில் எங்களுக்கும் நல்லது என்பதாலும் இதை நான் சொன்னேன். இதை கேட்டு தவறை திருத்தி கொள்வது உங்கள் பொறுப்பு. நிலைமை கைமீறி போனபின் விக்கினேஸ்வரனையோ, எங்களையோ குறை சொல்வதில் பிரயோஜனம் இல்லை என்றார்.

19 டிசம்பர் 2013

புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பாதீர்கள்-ரவிகரன்

ravikaran swissநிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை புலம்பெயர் தமிழர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுவிஸ் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 14/12/2013 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பில் வடகிழக்கின் சமகால நிலை தொடர்பில் தூதரக அதிகாரிகளிடம் எடுத்து விளக்கியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கலந்து கொண்டு ரவிகரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமிழ்மக்களின் பல பிரச்சினைகள் பற்றி ரவிகரனால் அவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.
தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நில அபகரிப்பின் இக்கட்டான சூழ்நிலைபற்றியும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் கலாச்சார, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையால் தமிழ் மக்களின் வாழ்வியல் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது பற்றியும் ரவிகரன் எடுத்துக்கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதார நடவடிக்கைகளைத் தமிழ் மக்கள் தொடர்வதில் உள்ள இடர்பாடுகள் தொடர்கிற நிலையில், தடுப்பிலிருந்து வந்தவர்கள் அடிக்கடி கண்காணிக்கப்படுவதாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாலும் இளைஞர் சமூகம் பெரும் விரக்தி அடைந்துள்ளது. இந்நிலையிலேயே தம் வாழ்வாதாரத்திற்காக , தம் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.
தாயகத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், புலம்பெயர் தமிழர் திருப்பி அனுப்பப்படுவது வருத்தமளிக்கிறது. இங்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில், எங்கள் உறவுகளை திருப்பி அனுப்ப வேண்டாமென உங்களிடமும் சர்வதேசத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

18 டிசம்பர் 2013

சவேந்திரசில்வாவிற்கு வீசா வழங்க கனடா மறுப்பு!

ஐக்கியநாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்
ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்தனர் என்ற வகையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக இவர் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அதேபோல், அண்மையில் சவேந்திர சில்வாவை, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
கனடாவில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு வீசா வழங்க கனேடிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் 57ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ஜெகத் டயசுக்கும் வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த படை அதிகாரிகளை சர்வதேச ராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் இலங்கையின் அரசியல் தந்திரோபயத்திற்கு தொடர்ச்சியாக விழும் அடியாகவே இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.மறுப்பு 

17 டிசம்பர் 2013

வடக்கு நிலை குறித்து மகிந்தவுடன் மனோ உரையாடல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால், இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை உருவாகிவருகிறது. வடக்கின் மக்கள் ஆணையை பெற்ற முதல்வரும், நிறைவேற்று அதிகாரத்தின் ஆணையை பெற்றுள்ள சந்திரசிறியும் இன்று முரண்பட்டு கொள்கிறார்கள். இந்நிலையை நீடிக்க விடாதீர்கள். நிலைமை மென்மேலும் பாரதூரமடைந்து, இந்நிலவரங்களின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வர் தனது பதவியை ஒருவேளை இராஜினாமா செய்து விடுவாரோ என நான் அச்சப்படுகிறேன். இது அவரது நிலைப்பாடு அல்ல.இது எனது அச்சம். அப்படியான ஒரு சாத்தியத்தை நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் புதிய நெருக்கடி உருவாகக்கூடாது என விரும்பும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலான எனது அச்சம் இதுவாகும். இதை நாட்டின் ஜனாதிபதியான நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தார்.
மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உரையாடியபோதே, மனோ இந்த கருத்தை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல்ரீதியாக நடைபெற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. ஆனால், தேசிய இனப்பிரச்சினை தீர்வு வரும்வரை மாகாண நிர்வாகம் காத்திருக்க முடியாது. நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் அவரது பிரதிநிதியான ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் மாகாண நிர்வாகம் தொடர்பிலான நிர்வாக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.
வட மாகாண நிர்வாகத்தை நடத்தும் செயலாளர்கள் மாற்றப்படுவது உட்பட பல முடிவுகள் ஒருதலைபட்சமாக எடுக்கப்படுகின்றன. இவை நிர்வாகத்தை குழப்புகின்றன. மாகாண நிர்வாகம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் எனவும் தொடர்ந்து மனோ கணேசன், மகிந்த ராஜபக்சவிடம் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது;
முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லது அல்ல. நான் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்திப்பேன். அல்லது விக்னேஸ்வரனை கொழும்பு வரும்படி அழைப்பு விடுகிறேன். எனது செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இன்று இதுபற்றி பணிப்புரை விடுப்பேன்.
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன். அந்த மாகாணசபை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் என்பதை தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள். ஆளுநரும், முதல்வரும் முரண்படக்கூடாது. ஒருவரை, ஒருவர் அனுசரிக்க வேண்டும். செயலாளர்களை மாற்றுவது பற்றி எனக்கு சரியான தகவல்கள் இல்லை.
இவை என்னிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும். மாகாணசபை நிதி ஒழுங்குகள் பற்றிய சட்டம் இருக்கிறது. அதை இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அக்கறை கொண்டு என்னிடம் ஆரம்பத்தில் கூறியுள்ளார். முதல்வரிடம் இதுபற்றி நான் உடனடியாக உரையாடுகிறேன்.
இதை அவர்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களிடமும் சொல்லுங்கள். இன்னொன்றையும் அவர்களிடம் சொல்லுங்கள். வடமாகாணசபையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், வடக்கின் பாடசாலைகளுக்கு சென்று இனவாதம் கக்கும் பரப்புரைகளை செய்கிறார்கள் என எனக்கு தெரியவந்துள்ளது. தமிழ், சிங்கள இனத்தவர் மத்தியில் இனவாத பிளவை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இனவாத பிரச்சாரத்தை பாடசாலை மாணவர் மத்தியில் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

16 டிசம்பர் 2013

கொடிகாமத்தில் பொலிசாருடன் முறுகல்!

மணல் ஏற்றிச்சென்ற அரச ஆதரவு கட்சியினர்க்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்வபாக தெரிய வருவதாவது;
கொடிகாமம் டி பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனத்தில் நேற்று சனிக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார் அந்த வாகனத்தினை கைப்பற்றுவதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.
அவ்வேளை அங்கு வந்த அரச ஆதரவு கட்சியைச் சேர்ந்தோர் வீதிக்கு குறுக்காக கட்டைகளைப் போட்டு பொலிஸ் வாகனத்தை மறித்து அந்த வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தனர்.
பொலிஸ் வாகனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொலிஸார் இருந்தமையினால் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸாரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அதற்குள் குறித்த டிப்பர் வாகனம் மணலை கொட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. வீதியை மறித்தவர்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்நிலையில், மேற்படி பிரதேசத்தில் வேறு ஒரு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸார் இருவர்இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளனர்.
அவ்வேளையில் அங்கு குழுமியிருந்த அரச ஆதரவுக் குழுவொன்று, நீங்கள் தானே மணல் அள்ளுவதைத் தடுக்க நேற்று வந்தனீர்கள் என கேட்டுக்கொண்டே; பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு தப்பிச்சென்றுள்ளனர்.

15 டிசம்பர் 2013

சிங்களத்தின் அடாவடியை தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்கள் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தில் மலையாளபுரம் என்னும் இடத்தில் பலவந்தமாக குடியேறிய சிங்ளக்குடும்பங்களின் அமைவிடம் அமைந்துள்ள இடத்தின் பாதையால் செல்லும் பெண்களை சேட்டைக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக அங்கிருக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றன
இப்பகுதியினுடாக சென்றுகொண்டிருந்த பெண்களை சேட்டைக்குள் இழுத்ததனால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் தங்களது சகோதரிகளுடன் சேட்டைவிட்டவர்களுடன் சண்டையிட்டதன் காரணமாக இங்கு வந்த பொலீசார் தமிழ்இளைஞர்களை மாத்திரம் கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.
இதன்பின்னர் அவ்விடத்திற்கு வந்த இலங்கை இராணுவத்தினரும், பொலிசாரும் அங்கு உள்ள தமிழ் பெண்களையும், இளைஞர்களையும் தடிகள் கொண்டு தாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அங்கு சண்டையிட்ட இளைஞர்களில் தமிழ் இனைஞர்களை மாத்திரம் கைது செய்துள்ளனர். தற்போதும் கூட இராணுவத்திற்கு பெண்களைச் சேர்த்துக்கொள்வதில் அரசாங்கம் குறியாகவுள்ளது.

14 டிசம்பர் 2013

ஐரோப்பிய பாராளுமன்றின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஐரோப்பிய பாராளுமன்றின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா
அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய பாராளுமன்றின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறான பரிந்துரைகள் எப்போது அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதனை அரசாங்கமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஏனைய தரப்பினரின் தேவைகளுக்காக ஆணைக்குழு நிறுவப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 டிசம்பர் 2013

சுயாட்சியை பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும்-சித்தார்த்தன்

தமிழ் மக்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் மூன்றாவது அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றபோது அங்கு குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாகாண சபைத் தேர்தலுக்கு மக்கள் வாக்களித்த போது பெரும் எதிர்பார்ப்போடு வாக்களித்தார்கள். இருந்தாலும் அந்த எதிர்பார்ப்புக்கள் எல்லாம் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதை தேர்தலில் போட்டியிட்ட போதே நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்.
ஏனென்றால், மாகாண சபை முழுமையான அதிகாரம் பெற்ற சபையாக இல்லாது மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியிலே கூடுதலாக தங்கியிருக்கின்ற சபையாகவே இருக்கின்றது.எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இலங்கையின் செலவீனத்தின் அரை வீதத்திற்கும் குறைவானதாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து முதலமைச்சர் கூறியது போல் மக்களுடைய நாளாந்த பிரச்சினைகள் அவர்களுடைய மறுவாழ்வு தொடர்பில் எவ்வளவு தூரம் அக்கறை கொள்ளமுடியும் என்பதை அறியமுடிகின்றது.ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலே பெரும்பாலான நிதி மீண்டுவரும் செலவீனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அபிவிருத்தி வேலைகள் குறைவாகவே இருக்கும் இது எதிர்பார்க்கப்பட்ட விடயம்.கிடைத்த பணத்தில் எப்படி புத்திசாலித்தனம் பக்குவமாக இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பில் முதலமைச்சர் கூறியுள்ளார். இதற்கு முதலமைச்சருக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக சட்ட ஒழுங்கு 13 ஆவது திருத்தத்தில் ஒரு பகுதி முதலமைச்சரின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பு செயலர் கூறியிருந்தார் சட்டம் ஒழுங்கு முதலமைச்சருக்கு கீழ் உள்ள விடயம். ஆனால் பொலிஸ் அதிகாரம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் இதன் மூலம் எவ்வாறு சட்ட ஒழுங்கை முதலமைச்சர் பார்க்கமுடியும் என்ற கேள்வியுள்ளது.சட்ட ஒழுங்கை மாகாண சபையோ, பொலிஸாரோ தனியாக செய்யவேண்டும் என்று இல்லை. மக்கள் சரியான விழிப்புணர்வு பெற்று எமது சமூகம், கிராமத்தை முன்னோக்க வேண்டும். வடக்கின் பல வீதிகள் சுமார் 50 வருடங்களாக புனரமை க்கப்படாத நிலையில் உள்ளன. பல வீதிக ளைப் பார்த்தால் சிறு மழை பெய்தவுடனே வெள்ளம் ஓடும் நிலை காணப்படுகிறது.இதனால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய வீதிகள் முன்னுரிமை அடிப்படையில் திருத்தப்படவேண்டும்.புனர்வாழ்வு முதலமைச்சர் கீழ் இருந்தாலும் பல விடயங்கள் மத்திய அரசு செய்துவருகிறது. வடமாகாண வரவு செலவு நிதி ஒதுக்கீ ட்டை பார்க்கின்றபோது நாம் எதையும் செய்யமுடியாது. மக்களுக்கு நியாயமான எதுவும் செய்யும்போது வேறுவிதமாக அணுகுமுறையைக் கையாள வேண்டும்.பிரத்தியேகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையாக இருக்கிறது. இதற்கு இரண்டு விடயங்கள் உள்ளது. சட்டம் ஒழுங்கு, விதி, புனர்வாழ்வு போன்ற வற்றிற்கு மிகமுக்கியமாக அரசியல் தீர்வுக் காக வாக்களித்தார்கள்.தமிழ் மக்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களை பார்க்கவேண்டிய விதத்திலே ஒரு சுயாட்சியை நான் காணவில்லை ஒன்று பட்ட இலங்கைக்குள் நாங்களே எங்களுடைய அலுவல்களை பார் க்கக்கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ளவேண்டும்.இதனை மாகாண சபை மாத்திரம் செய்கின்ற வேலை அல்ல மாகாண சபை ஓர் ஆரம்பப் புள்ளியாக இதனைத்தான் தேர்தலில் போட்டியிடும் போது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்கள் ஆரம்ப புள்ளியை தந்துள்ளார்கள்.தொடர்ந்தும் எங்களுடைய இலக்கை அடைவதற்கு தமிழ் மக்கள் என்ன கார ணத்திற்காக இவ்வளவு அவலங்களையும் சந்தித்தார்களோ அந்த இலக்கு இலட்சிய த்தை வென்றோருக்கு உழைக்க வேண்டும்.முதலமைச்சர் தலைமையில் நாங்கள் தொடர்ந்து எமது மக்களுக்கு அரசியல் தீர் வையும் அந்த அரசியல் தீர்வின் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வ தற்காக செய்யும் தீர்வு உருவாக்க முடியும் என்றார்.

12 டிசம்பர் 2013

தேசியக் கொடியில் சிங்கத்தை நீக்குக - விக்கிரமபாகு

இலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்படவேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். இலங்கையின் தேசியக் கொடியில் இருக்கும் சிங்கம் நீக்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக விவசாயியின் உருவமோ வேறு பொருத்தமான உருவமோ பொறிக்கப்பட வேண்டும் என விக்ரமபாகு குறிப்பிட்டார். இலங்கையின் தேசியக் கொடி நாட்டில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என வடக்கு மாகாண விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 டிசம்பர் 2013

கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி-முத்துக்குமார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவை என்கின்ற விவாதம் பல தளங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக பின் நோக்கி நகர்த்துவதாகும்.தமிழர் அரசியல் 1920 தொடக்கம் 1949 வரை சமவாய்ப்புகளை கோருகின்ற அரசியலாக இருந்தது. பின்னர் 1949 தொடக்கம் 1968 வரை தமிழர் தாயகத்தை வரையறைத்து அதற்கு அதிகாரத்தை கோருகின்ற சமஸ்டி தீர்வை முன்வைப்பதாக அமைந்தது. 1968 இற்குப் பின்னர் சமஸ்டி தீர்வும் சரிவராத நிலையில் தனிநாட்டுப் போராட்டமாக பரிணமித்தது. அதற்கு ஏற்ப ஆயுதப்போராட்டமும் எழுச்சியடைந்தது. அப்போராட்டம் இலங்கை மட்டம், பிராந்திய மட்டம் என்பவற்றை தாண்டி சர்வதேச மட்டத்திற்கு வந்து வெற்றியை பெறுகின்ற தறுவாயில்தான் சிறிலங்கா அரசு பிராந்திய அரசு, சர்வதேச ஆதிக்க சக்திகள் அனைத்தும் இணைந்து போராட்டத்தை அழித்திருந்தன.இவ்வாறு பல்வேறு தியாகம் நிறைந்த போராட்டங்களினால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் வெறும் நிர்வாகப் பரவலாக்கலை மட்டும் கொண்ட மாகாணசபை முறைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கீழ் இறக்கியுள்ளது. இது தமிழர் அரசியலை மிகமோசமான வகையில் பின்நகர்த்தும் ஒரு செயற்பாடாகும்.இனப்பிரச்சனை என்பது தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சனையே. இதுவரைகாலப் போராட்டம் தமிழ்த்தேசம் அழிக்கப்படுவதை பாதுகாப்பதற்கான போராட்டமே. எனவே எந்த அரசியல் தீர்வும் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வாகவே அமையவேண்டும். இதன் அடிப்படையில் சிங்களதேசமும் தமிழ்த்தேசமும் சமத்துவமாக இணைக்கப்பட்டு இலங்கை என்ற பொதுவான தேசத்தை உருவாக்குவதையிட்டு தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.தமிழ் மக்களினுடைய இறைமை தமிழ்த்தேசத்திடம் உள்ளது. சிங்கள மக்களின் இறைமை சிங்களதேசத்திடம் உள்ளது. இரண்டு இறைமைகளையும் கூட்டி இலங்கை என்ற தேசத்தை உருவாக்கலாம். இதுவே இருதேசக் கோட்பாடாகும். இலங்கை என்ற கட்டமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இதுவாகத்தான் இருக்கமுடியும்.மாற்று அரசியல் இயக்கம் தேவை என்பதற்கு மேற்கூறிய பிரதான காரணியை தவிர வேறு காரணிகளும் இருக்கின்றன. அவை பிரதான காரணியான தமிழர் அரசியலை பின்நோக்கி நகர்த்த முற்பட்டதால் ஏற்பட்டவையே. அதில் முதலாவது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளை கூட்டமைப்பு கைவிட்டமையாகும். தேர்தல் கோசங்களுக்காக தேர்தல் காலங்களில் இவை வெளிப்படுத்தப்பட்டாலும் நடைமுறையில் இவ் அடிப்படைக் கோட்பாடுகளை கூட்டமைப்பு 2009இலேயே கைவிட்டுவிட்டது. இந்தியாவிற்கு இவை பிடிக்காததுதான் கைவிட்டமைக்கான காரணமாகும். அதனை பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேரடியாகவே கூறியிருக்கின்றார். பேராசிரியர் சிற்றம்பலம் வெளிநாட்டுப் பிரமுகர்கள் மத்தியில் இவ் அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்தமைக்காக சம்பந்தனால் கண்டிக்கப்பட்டார்.
இரண்டாவது தமிழ் நாட்டையும், டயஸ்போராவையும் பலவீனப்படுத்த கூட்டமைப்பு முயற்சிப்பதாகும். தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேச ரீதியாக முன்கொண்டு செல்வதற்கு தடையாக உள்ளவை இந்தியாவும், மேற்குலகுமாகும். இதில் இந்தியா போடும் தடைகளை உடைக்கவல்ல ஆற்றல் தமிழ்நாட்டிற்கே உண்டு. அதேபோல் மேற்குலக தடைகளை உடைக்கவல்ல ஆற்றல் டயஸ்போராவிற்கு உண்டு. கூட்டமைப்பு இரண்டையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது.தமிழர் அரசியல் சர்வதேச ரீதியாக பலம் பெறுவதற்கு நிலம், புலம், தமிழகம் என்பவற்றிற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம். கூட்டமைப்பு இவ் வேலைத்திட்டங்களை குழப்புகின்றது. அதனால் ஏற்பட்ட அபாயம் தமிழ் மக்களுக்கான சர்வதேச சந்தர்ப்பங்களை கூட்டமைப்பு தவற விடுகின்றமையாகும். பூகோள அரசியல் தமிழ் மக்களுக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுத்திருந்தது. கூட்டமைப்பு அதனை கைவிட்டமையினால் தமிழ் மக்களைச் சாட்டி பிராந்திய சக்தியும், மேற்குலகமும் தங்களினுடைய நலன்களை மட்டும் அடைந்துகொள்ள முயற்சிக்கின்றன. தமிழ் மக்கள் இங்கு வெறும் கருவியாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர்.கூட்டமைப்பு தனது பின் நகர்த்தும் அரசியல் செயற்பாட்டிற்கு தமிழகமும், டயஸ்போராவும் வரவில்லை என்பதற்காக தமிழ் அரசியலைப்பற்றி கதைப்பதற்கு அவற்றிற்கு உரிமை இல்லை எனக் கூறுகின்றது. விக்னேஸ்வரனின் கணவன், மனைவி உறவிற்குள் தமிழகம் தலையிடத் தேவையில்லை என்ற கருத்து இப்போக்கின் உச்சமாகும்.உண்மையில் விக்னேஸ்வரனுக்கும், தமிழர் அரசியலுக்கும் உள்ள உறவினைவிட தமிழகத்திற்கும், தமிழர் அரசியலுக்கும் உள்ள உறவு மிகவும் தொன்மையானது. தமிழ்த் தேசிய அரசியலுக்காக தமிழக உறவுகள் பலர் உயிர்துறந்திருக்கின்றனர். பலர் சிறைக்குச் சென்றிருக்கின்றனர். இத்தகைய தியாகங்களைச் செய்தவர்களுக்கு உரிமையில்லை எனக் கூற விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது.
மூன்றாவது, தமிழ் மக்களது அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தேர்தலில் கூத்தடிக்கின்ற ஓர் அரசியல் கட்சியாக இருக்கவே கூட்டமைப்பு விரும்புகின்றது.இத்தகைய காரணங்களினால் தான் மாற்று அரசியல் இயக்கம் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை திருத்துவதன் மூலம் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தவறானதாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை திருத்துவது என்பது நடைமுறையில் நினைத்தே பார்க்கமுடியாத காரியமாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான அமைப்பு அல்ல. அது இந்தியாவின்sridaran வெறும் பொம்மை. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவது மட்டுமே அதன் வேலைத்திட்டமாக உள்ளது. தமிழர் அரசியலைப் பொறுத்தவரை இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் என்பது தமிழர் அரசியலை 13வது திருத்தத்திற்குள் முடக்குவதே. இந்தச் செயற்பாட்டிற்கு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகள் கைவிடப்படவேண்டும் என இந்தியா விரும்புகின்றது. தமிழகத்தினதும் டயஸ்போராவினதும் உறவுகளை தாயகத்திலிருந்து துண்டிப்பதன் மூலமே இதனை சாத்தியமாகலாம் என அது கருதுகின்றது. குறிப்பாக தமிழகத்தை தமிழர் தாயகத்திலிருந்து துண்டிப்பதில் இந்தியா மிகவும் அக்கறையாக உள்ளது அதற்கு தற்போது கிடைத்த மிகப்பெரிய கருவி விக்னேஸ்வரனே.
இரண்டாவது கூட்டமைப்புக்குள் கொழும்பினை மையமாகக்கொண்ட தமிழ்மேட்டுக்குடிகளின் கை மேலோங்கியுள்ளமையாகும். அதனால் போராட்டம் தொடர்பாக சிறிய வலியைக்கூட பெற்றிருக்காத சுமந்திரனும் விக்னேஸ்வரனும் பெரிய உழைப்புக்கள் எதுவும் இல்லாமல் திடீரென தலைமை நிலைக்கு உயர்ந்துள்ளனர். இவர்களுடைய நலன்கள் கொழும்பு சார்ந்ததாக இருப்பதனால் தமிழ் அரசியல் முன்நோக்கிச் செல்வதை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.ஆயுதப்போராட்டம் வளர்வதற்கு முன்னரும் இவ் மேட்டுக்குடியின் ஆதிக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் விடுதலை இயக்கங்கள் எழுச்சியடைந்ததும் இவ் ஆதிக்கம் அகற்றப்பட்டது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலர் தமிழ் அரசியலின் தலைமை நிலைக்கு உயர்ந்தனர். இன்று ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதால் இம் மேட்டுக்குடிகள் மீண்டும் மேல்நிலைக்கு வந்து தமிழர் அரசியலைக் கைப்பற்றியுள்ளன.மூன்றாவது கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்டமைப்பினை கொண்டிராமையாகும். எந்தவித ஜனநாயக பொறிமுறைகளும் அங்கு கிடையாது. இதனால் உட்கட்சிப் போராட்டங்களை நடாத்தக்கூடிய வாய்ப்புக்கள் எதுவும் அங்கு அறவே இல்லை. இந்நிலையில் எப்படித்தான் கூட்டமைப்பை திருத்தமுடியும்.பிரபாகரன்கூட தீர்மானங்களை எடுக்கும்போது தளபதிகளை கலந்து ஆலோசித்தே எடுப்பார். சம்பந்தனிடம் அதுவும் கிடையாது. அவர் தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்கின்றார். பணியமறுப்பவர்களை இந்தியாவைக்கொண்டு பணியவைக்க முயற்சிக்கின்றார்.
நான்காவது கூட்டமைப்புக்கென இலக்கோ, கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ அமைப்பு பொறிமுறைகளோ எதுவும் கிடையாது. இந்நிலையில் திருத்துவதற்கான எந்த வாய்ப்புகளும் அங்கு இல்லை.ஐந்தாவது கூட்டமைப்பு கொள்கைகளைக் கைவிட்டு தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளமையினால் ஜொலி அரசியல் செய்ய விரும்புகின்றவர்களே கட்சிக்குள் உள்நுழைகின்றனர். பிரக்ஞைபூர்வ சக்திகள் ஒன்றில் ஒதுங்கிக்கொள்கின்றனர் அல்லது ஜொலி அரசியல்வாதிகளாக மாறிவிடுகின்றனர்.மொத்தத்தில் கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சிதான்.யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்படுகின்றார் என்பதும் உண்மைதான். அவற்றை நாம் மறுக்கவில்லை. அவர் மாகாணசபைத் தேர்தலின்போது கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி கிளையின் சார்பில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் பிரபாகரன் பற்றி பாராட்டிப் பேசியிருக்கின்றார். புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராளிகள் என வலியுறுத்தியிருக்கின்றார். இவை எல்லாம் வரவேற்கப்படவேண்டிய விடயங்களே.
ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை நடந்துகொள்கின்றது. இவரது கிளிநொச்சி தீர்மானங்களில் ஒன்றைக்கூட கூட்டமைப்பின் தலைமை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கவில்லை. மாவீரர் தினம் தொடர்பான இவரது பாராளுமன்ற உரையினை சம்பந்தனும், சுமந்திரனும் கண்டித்திருக்கின்றனர். இவ் உரைக்கும் கூட்டமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.இந்நிலையில் சிறிதரன் தமிழ்த்தேசியத்துடன் உறுதியாக நிற்பவராக இருந்தால் கட்சி தலைமைக்கு எதிராக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். அப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருத்தல் வேண்டும். போராட்டத்தில் வெற்றிகாணவில்லையாயின் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசியத்திற்காக செயற்படுபவர்களுடன் இணைந்திருக்கவேண்டும்.சிறிதரன் இவை எவற்றையும் செய்யவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக ஏனையவர்கள் போராடியபோது சிறிதரன் ஒதுங்கியே இருந்தார். ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் முடிவினை சம்பந்தன் எடுத்தபோது மாவை கடுமையாக முரண்பட்டிருந்தார். அப்போதுகூட சிறிதரன் மாவையுடன் இணைந்து எதிர்ப்பு காட்டுவதற்கு பதிலாக மௌனம் சாதித்திருந்தார்.சிறிதரனின் இப்போக்கு அவர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதையே வெளிக்காட்டுகின்றது. மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் தமிழ்த்தேசியத்தில் உறுதியாக நிற்பதாக காட்டிக்கொள்கிறார். மறுபக்கத்தில் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை செயற்படும்போது மௌனம் காத்து ஒத்துழைக்கின்றார். இது முழுக்கமுழுக்க பதவியை பாதுகாப்பதற்கான நடிப்பே தவிர வேறென்றும் அல்ல.உண்மையில் இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் கூட்டமைப்பு தலைமையின் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இவர்கள் தான் வெள்ளைப்பூச்சடிக்கின்றனர். இதன் மூலம் கூட்டமைபினை திருத்துவதற்கு பதிலாக மேலும் கெட்டுப்போவதற்கு துணைபுரிகின்றனர்.எனவே தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கு மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தவிர்க்கமுடியாதது என்றே வரலாறு நிருபிக்கின்றது.

10 டிசம்பர் 2013

மண்டேலாவின் இறுதிச் சடங்கில் 90 நாட்டு அரச தலைவர்கள்!

தென்னாபிரிக்காவின் ஒளிவிளக்கு நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்கு நிகழ்வில் 90 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என சிஎன்என் சர்வதேச செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இளவரசி டயானா, மைக்கேல் ஜாக்சன், மற்றும் போப் ஜான் பால் ஆகியோரின் இறுதி சடங்கை விட இது பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தென்னாபிரிக்க அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆராதனை நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், தென் ஆபிரிக்க நாடாளுமன்றத்தில் விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மற்றும் மண்டேலாவின் பேரன் மண்டேலாவும் உள்ள போதிலும், இந்த விசேட அமர்வில் கலந்து கொள்வார்களா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன.
தென் ஆபிரிக்காவின் இறுதி வெள்ளை ஜனாதிபதி எப்.டபிள்யூ. கிளாக்கும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசு, நெல்சன் மண்டேலாவிற்கும் எப்.டபிள்யூ. கிளாக்கிற்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை சோவேற்றோ விளையாட்டுத் திடலில் இடம்பெறும் ஆராதனை நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்சின் தலைவர் பிராங்கோயிஸ் ஒலண்டே மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் ஆகியோர் கலந்து கொள்வர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கியூபாவின் ஜனாதிபதி ரவுல் கஸ்ரோ கலந்து கொள்வார் என கியூப வானெலி செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜேமன் ஜனாதிபதி ஜோசிம் கவுக், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர், ஜோஸ் மனுவல் பராசோ, நெதலாந்து அரசர் வில்லியம் அலக்ஸ்சான்டர் மற்றும் ஸ்பெயினின் முடிக்குரிய இளவரசர் பெலிப்பியும் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே சோவேற்றோ விளையாட்டுத் திடலிலேயே, நெல்சன் மண்டேலா தனது இறுதி பாரிய பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

09 டிசம்பர் 2013

சுகாதார பரிசோதகர் சுருக்கிட்டுத் தற்கொலை!

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தனது கள்ளக் காதலியின் வீட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு தானும் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மரணமானவர் இரு பிள்ளைகளின் தந்தையென இனங்காணப்பட்டுள்ளார். இவரது சடலம் ஆனந்தபுரத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மரணமானவர் பொதுச் சுகாதார பரிசோதகராக முருங்கனில் கடமையாற்றி வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இராமநாதன் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தபோது கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் இவருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.
இப் பெண்ணுடன் இவர் காதல் கொண்டிருந்தார். இந்நிலையில் சொந்த இடங்களில் மீளக் குடியேறிய பின்பும் குறித்த பெண்ணின் வீட்டிற்கு அவர் சென்று வந்துள்ளார்.
இப் பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளையுடன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற சுகாதார பரிசோதகர், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த அவர் அப் பெண்ணின் வீட்டிற்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.
அதன் பின்னர் பாழடைந்த வீடொன்றுக்குச் சென்று சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு விசாரணை முடிவில் தற்கொலை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழப்படுகொலையில் இந்தியா மற்றும் ஐ.நாவின் பங்கு!

தமிழீழப்படுகொலையில் இந்தியா மற்றும் ஐ.நாவின் பங்கு பற்றிய எங்களது மூன்றாண்டு ஆய்வினை ஆதாரங்களோடு சமர்பித்துள்ளோம். எங்களது வாதங்கள் அடுத்த அமர்வில் தொடரும்.இனப்படுகொலைக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த சர்வதேச விசாரணை முயற்சியை தொடர்ந்து செய்து வரும் சிங்களத் தோழர்கள் விராஜ் மெண்டிஸ், ஜூட் லால் பெர்னாண்டோவிற்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிப்போம். அயராது உழைக்கும் அவர்களது பங்களிப்பு நிச்சயம் ஈழத்தில் நிகழ்ந்த அநீதிகளை சர்வதேச அரங்கில் வெளிக்கொணரும்.
சிங்களத் தோழர்கள், விராஜ் மெண்டிஸ், ஜுட் லால் பெர்னாண்டோ ஆகியோர் தமது பெருமுயற்சியால் 2009 இறுதியில் டப்ளினில் மக்கள்தீர்ப்பாயத்தினை நடத்தி சர்வதேசத்தினை அமெரிக்க-இங்கிலாந்து -ஐரோப்பிய ஒன்றீயத்தினை அம்பலப்படுத்தினார்கள்.
-திருமுருகன் காந்தி அவர்கள் தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட செய்தியில் இருந்து.
தமிழீழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal)கடந்த சனவரி ,2010 அயர்லாந்திலுள்ள டப்ளினில் நடத்திய விசாரணையின் இரண்டாவது அமர்வு கடந்த டிசம்பர்-7,2013 அன்று ஜெர்மனியில் தொடங்கியது.
வருகின்றன டிச-10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் தமிழீழ இனப்படுகொலையில் பங்கேற்ற இந்தியா,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பங்களிப்பும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..
அதோடு, தமிழீழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையா என்பது சாட்சிகளையும், தகுந்த ஆதாரங்களையும் கொண்டு கடந்த 2 நாட்களாக இந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்திவருகின்றது.
விசாரணையின் கடைசி நாளான இன்று , தமிழக நேரப்படி விசாரணை சரியாக பகல் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நடைபெறும். இந்த விசாரணையை இணையத்தில் நேரலையில் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
(http://www.pptsrilanka.org/livestreaming/index.html)இன்றைய விசாரணையில் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் மே 17 இயக்கத்தை சார்ந்த தோழர்.திருமுருகன் காந்தி, தோழர்.உமர் உள்ளிட்டோரின் சாட்சியங்களும், ஆதாரங்களும் விசாரணைக்கு வரவிருக்கின்றன.
இன்றுடன் முடிவடையும் விசாரணைக்கு பின் நாளை (10/12/13) இதனைப்பற்றிய தீர்ப்பு வழங்கப்படும்.
இனப்படுகொலைகளை பற்றிய விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வரும் இந்த Permanent Peoples tribunal -ல் ஒய்வு பெற்ற அய்.நா அதிகாரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

08 டிசம்பர் 2013

நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நிலவரம்!

நான்கு மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் குறித்து தொகுதிவாரியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவருகிறது.ராஜஸ்தானில் 102 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ்15 இடங்களிலும். மற்றவர்கள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.சட்டீஸ்கரில் பாஜக 7 இடத்திலும், காங்கிரஸ் 5 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.மத்திய பிரதேசத்தில் பாஜக48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தில்லியில் பாஜக 15 இடங்களில், ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது நான்கு மாநில தேர்தல் முடிவுகள் 2.40 மணி நிலவரம்

சட்டீஸ்கர் : மொத்தம் (90/90)
பாஜக - 49
காங். - 41
மற்றவை - 0

ராஜஸ்தான்: மொத்தம் (199/199)
பாஜக - 155
காங். - 26
மற்றவை- 18

தில்லி: மொத்தம் (70/70)
பாஜக - 32
ஆம் ஆத்மி கட்சி- 29
காங். -8
மற்றவை -1

மத்தியப் பிரதேசம்: மொத்தம் (230/230)
பாஜக - 157
காங். - 65
மற்றவை-8

பெரும் தோல்வியில் காங்கிரஸ்!பாரதிய ஜனதா வெற்றிப்பாதையில்!

வெற்றி பெற்ற தலைவர்கள் 
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. மதியம் 21.10 மணி நிலவரப்படி டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் 22 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார். பாஜக 9 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் 6 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக 152 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 63 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 5 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
199 தொகுதிகளில் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்த-ல் பாஜக 139 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 8 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் 43 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 45 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

07 டிசம்பர் 2013

சிறீலங்காவை அலறவைக்கும் பிரித்தானியா!

சிறிலங்காவின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நேச நாடுகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மார்ச் மாத ஜெனீவா அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச ஆதரவினைத் திரட்டும் வகையில் பொதுநலவாயம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தனது நேச நாடுகளுடன் பிரித்தானியா கலந்துரையாடவுள்ளதாக பிரித்தானியாவின் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
மார்ச் மாதத்துக்கு முன்னராக சிறிலங்கா அரசு, யுத்தம் குற்றம் தொடர்பில் வெளிப்படையான சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவை ஊடாக சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும். இந்த விடயத்தை எமது பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் முன்னேற்றத்தைக் காண விரும்புகின்றது என பிரதமர் டேவிட் கமரூன் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

06 டிசம்பர் 2013

மனோவும் விக்னேஸ்வரனும் கொழும்பில் சந்திப்பு!

வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர், ஜனநாயக மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்கினேஸ்வரனை சந்தித்தனர்.
இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன், சண். குகவரதன், பிரியாணி குணரத்ன, கே.ரி. குருசாமி, எஸ். பாஸ்கரா, லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.
இச்சந்திப்பு குறித்து ஜமமு தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது;
பரஸ்பர வேலைப்பளு காரணமாக தள்ளி போடப்பட்டிருந்த இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கில் மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி பொறுப்பில் இருக்கும் கூட்டமைப்பு நிர்வாகத்தை, முடக்கும் அரசின் செயல்பாடுகள் பற்றிய நிலைமைகளை முதல்வர் விளக்கி கூறினார்.
அரசாங்கம் உலகத்திற்கு ஒன்றை சொல்லுவதும், உள்நாட்டில் இன்னொன்றை செய்வதும் என்ற இரட்டை நிலைபாட்டில் செயல்படுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். அதேவேளை சிங்கள இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் ஒரு சிறு புரிந்துணர்வு தென்படுவதாகவும், குறிப்பாக அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, வாசுதேவ, டிவ் குணசேகர ஆகியோர் தம்முடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். வடக்கின் உண்மை நிலைமைகள் பற்றி ஜனநாயக மக்கள் முன்னணி சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவதை வரவேற்ற அவர், இந்த பணியை இன்னமும் வலுவாக முன்னெடுத்து, உண்மை தகவல்களை சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும்படி வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில், மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பாஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நமது கட்சி போட்டியிடுவது பற்றியும், இது தொடர்பில் அடுத்த வாரம் கொழும்பில் கூடவுள்ள எங்கள் அரசியல்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்படவுள்ளது பற்றியும் நான், முதல்வருக்கு எடுத்து கூறினேன். தமிழினத்தின் நலன் கருதி, தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒன்றை ஒன்று ஆதரித்து புரிந்துணர்வுடன் செயல்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் மிக தெளிவாக இருப்பதாக விக்கினேஸ்வரன் கூறினார். அத்துடன் தத்தமது பிராந்தியங்களில் இரண்டு கட்சிகளும் பலமாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் நான் கடந்த மாதம் முதல்வருக்கும், ஜனாதிபதிக்கும் எழுதி அனுப்பியிருந்த கோரிக்கைகள்
பற்றியும் கலந்துரையாடப்பட்டது. கைதிகள், தடுத்து வைக்கப்படிருப்போர் தொடர்பான விபரங்களை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் எதிர்பார்த்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்த அதிமுக்கிய மனிதநேய விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பில் விரைவில் ஒரு செயற்பாட்டு குழு அமைக்கப்பட்டு காரியங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விக்கினேஸ்வரன் கூறினார்.
வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு நமது கட்சி அளித்து வரும் ஆதரவை நாம் தொடர்ந்து வழங்கி வரும் அதேவேளையில், தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பிலும், வடக்கு மாகாணசபை முடக்கப்படுவது தொடர்பிலும் உண்மை நிலவரங்களை நாம் தொடர்ந்து சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவோம் என நான் , முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு உறுதியளித்தேன் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.மனோவும் விக்னேஸ்வரனும் கொழும்பில் சந்திப்பு!

05 டிசம்பர் 2013

வவுனியாவில் மூதாளர் மீது துப்பாக்கிச்சூடு!

வவுனியா - மன்னார் பிரதான வீதியின் யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (04.12.13) இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 60 வயதுடைய சற்குணசேயோன் பாலசுந்தரி என்ற பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தனிமையில் இருந்த இப் பெண் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக இப்பெண் கால் பகுதியில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

04 டிசம்பர் 2013

பொறுமைக்கும் எல்லையுண்டு-அமெரிக்கா

பொறுமைக்கும் எல்லையுண்டு அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கைபொறுமைக்கும் எல்லையுண்டு என அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்தால் சர்வதேச சமூகம் பொறுமையை இழக்க நேரிடும் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா டிசாய் பிஷ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலளார் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

03 டிசம்பர் 2013

இடம்பெயர்ந்தோரை சந்தித்தார் ஐ நா பிரதிநிதி!

இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில், அதனால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கான தீர்வு குறித்து ஐ நா வின் விசேஷப் பிரதிநிதி வடமாகாண அளுநர், முதலவர்ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான தீர்வு, அதை அடைவதில் இருக்கும் தடைகளை களைவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இன்றைய பேச்சுக்களில் முக்கியமாக பேசப்பட்டது என்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐ நா வின் சிறப்புத் தூதர் சாலோக்கா பெயானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து இப்போது கோணாப்புலவு முகாமில் தங்கியுள்ள மக்களை பெயானி சென்று சந்தித்தார்.
அந்த முகாமிலுள்ள மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இருப்பதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ நா வின் சிறப்பு பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளனர்.
"தடுக்கப்பட்டனர்"
விரைவில் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து உதவுமாறும் அவரிடம் முகாம்வாசிகள் கோரியுள்ளனர்.
சாலோக்கா பெயானி அவர்கள் கோணாப்புலவு முகாமுக்குச் சென்ற போது, அவரிடம் தமது சிரம நிலைகளையும், கஷ்டங்களையும் தெரிவிக்கவிடாமல் சில அதிகாரிகள் தடுத்ததாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஐ நா பிரதிநிதி பெயானி
இராணுவத்தின் பிரசன்னமே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்திருப்பதாக வட மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐ நா சிறப்பு பிரதிநிதியிடம் கூறியுள்ளார்.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விவசாயம் செய்வது, மீன்பிடிப்பது, கடைகள் நடத்துவது என பல தொழில்களையும் இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் பெயானி அவர்களுக்கு மாகாண முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக நாளை-புதன்கிழமை ஐ நா வின் சிறப்பு பிரதிநிதி முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்கிறார்.

02 டிசம்பர் 2013

மகிந்தவிற்கு எதிராக அரை நிர்வாண போராட்டம்!

2014ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவ்விடயம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையாகவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (02) மேற்கொண்டிருந்தது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின்போது ராஜபக்ஷ ஆட்சியாளர்களிடம் எமக்கு உக்கிரமடைந்துள்ள 6 பிரச்சினைகளை முன்வைத்தோம். அவற்றில் 5 பிரச்சினைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உதாசீனப்படுத்தியுள்ளார். "கடவுளின் படயலை சாப்பிடுவது போல" விவசாயிகளுக்கு 60 வயதில் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை 63 வயதாக அதிகரித்து காவாலித்தனத்தை புரிந்துள்ளார் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

01 டிசம்பர் 2013

கருணாநிதி பாணியில் ஜெயலலிதா!

சிறீலங்கா கடற்படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது என்ற இந்தியாவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து 4 முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது, இலங்கை கடற்படையினருக்கு நேவி பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.