10 செப்டம்பர் 2012

போலீசார் விரட்டியடித்ததில் குழந்தை பலி!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததில் குழந்தை ஒன்று கீழே விழுந்து பலியான பரிபாதம் நிகழ்ந்திருக்கிறது,
கூடங்குளம் சுனாமிகாலனி கடற்கரையில் குவிந்திருந்த பல்லாயிரம் மக்களை கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இதில் கடலுக்குள் குதித்தவர் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. இதனிடையே கூடங்குளம் மக்களுக்காக நடந்த போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் அந்தோணிசாமி, மணப்பாடு கிராமத்தில் பலியானார்.
இந்நிலையில் இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன்பாக ஒன்று திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளனர். அங்கிருந்த மேரிமாதா சிலையையும் போலீசார் உடைத்து நொறுக்கியுள்ளனர். போலீசார் பொதுமக்களை விரட்டியடித்த போது குழந்தை ஒன்று கீழே விழுந்து பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மு.காவிற்கு முதலமைச்சைக் கொடுங்கள்"மனோ கோரிக்கை.

கிழக்கு மாகாணத்தில் எதிரணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்தும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு பெருந்தன்மையுடன் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இது கடந்த கால வரலாற்று தவறுகள் மாற்றியமைத்து தமிழ்-முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதுடன், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பயணத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது தமிழ் பேசும் மக்களதும், நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களினதும் விருப்பம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில், மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நாம் சப்ரகமுவ தேர்தலில் எடுத்து காட்டியுள்ளோம். சப்ரகமுவவையில் தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அங்கே எங்கள் ஒரே நோக்கம் தமிழ் பிரதிநிதித்துவம்தான். இந்த தேர்தலில் நாம் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமான சரியான முடிவு என்பதை இன்று காலம் தெட்டத்தெளிவாக எடுத்து காட்டிவிட்டது. இன்று சப்ரகமுவ உட்பட நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எமக்கு பாராட்டுகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
சப்ரகமுவையிலும், வட-மத்திய மாகாணத்திலும் இந்த அரசு அசுர பலத்துடன் ஆட்சியமைத்துள்ளது. எனவே அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் என்பதைவிட எம்மால் எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், கிழக்கில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், ஐக்கிய தேசிய கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ளன. இது வரலாறு அளித்துள்ள சந்தர்ப்பம் ஆகும்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவே பெரும்பான்மை தமிழ், முஸ்லிம் மக்களை பிரதானமாக பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், சுதந்திரமாக தமது ஆட்சியை அமைக்க வேண்டும் அது நியாயமானது. அதன் மூலமாகவே, எமது மக்களின் தேசிய அபிலாசைகளை உலகறிய செய்யலாம். குறிப்பாக முஸ்லிம் தேசியத்தை உலக அரங்குக்கு கொண்டு செல்வதற்கு இதுவே அரசியல்ரீதியான வழிமுறையாகும், அதற்கான சிறப்புமிக்க சந்தர்ப்பத்தை வரலாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கியுள்ளது.
இது நடைபெறாவிட்டால், முஸ்லிம் எழுச்சி பேரினவாத பெருங்கடலில் கலந்து காணாமல் போய் விடும். வரலாறு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமா? அதற்கும் வரலாறுதான் பதில் சொல்ல வேண்டும்.

௭மது வெற்றியை அரசு கபளீகரம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! - இரா. சம்பந்தன்

௭மது வெற்றியை அரசு கபளீகரம் செய்வதை ௭ம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வன்முறைகளை பிரயோகித்து வெற்றியீட்ட முயற்சித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட 6217 வாக்குகளே கூடுதலாக பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியை ௭ங்களுக்கு வழங்குமாறு தேர்தல்கால பிரசாரங்களின்போது நாம் தமிழ்ப் பேசும் மக்களிடம் கோரிக்கை விடுத்தோம். ௭மது கோரிக்கையை ஏற்று ௭மது மக்கள் அந்த ஆணையை வழங்கியுள்ளனர்.
அதாவது தமிழரசுக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் வாக்களித்தனர். அவ் ஆணையை நிறைவேற்ற ௭ந்தவொரு தமிழ் பேசும் மக்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் விட்டுக் கொடுப்புடன் செயற்படத் தயாராகவுள்ளோம். கிழக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாகவே நாம் இங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக ௭ழுத்து மூலம் ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தோம்.
இவ்விடயம் ஊடகங்களிலும் வெளிவந்தன. ஆனால் தேர்தல் முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலை பல ஏமாற்றுவேலைகள் இடம்பெற்றன. மக்களால் ௭மக்குத் தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்ற வேண்டியது ௭மது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்க மாட்டோம். அரசாங்கத் தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக் கொண்டு அவர்கள் ஆட்சியமைக்க அனுமதிக்க முடி யாது.
மேலும் கிழக்கு மாகாண ஆளுனர்� ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மாகாண ஆட்சியை அமைக்க அழைத்தால் அதனை நாம் சட்ட ரீதியாக தடுப்போம். ௭மது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் பேசும் மக்களின் நீண்ட கால அபிலாசையான கிழக்கு மாகாண ஆட்சியை ௭மக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் கலந்தாலோசித்து நியாயமான விட்டுக் கொடுப்புகளுடன் ஆட்சியமைக்க நாம் உறுதியாகவுள்ளோம். தேர்தல் காலத்திலும் இந்த புரிந்துணர்வை தமிழ்ப் பேசும் மக்களுக்கு மிகப் பகிரங்கமான முறையில் வெளிப்படுத்தினோம்.
௭மது ஆட்சி முறையை அரசின் நடத்தையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மக்களின் நலன்கருதியதாகவே அமை யும். ௭ந்த ஒரு இனத்திற்கும் தீங்கு செய்ய வேண்டும் ௭ன்பது ௭மது கருத்தல்ல. இந்த அரசின் ஆட்சி வேண்டாம் ௭ன்ற நிலைமையை விளக்கி மக்களுக்கு தெளிவுபடுத்திய மூன்று கட்சிகளைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் இம் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 11 உறுப்பினர்களைக் கொண்ட ௭மது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்க கோரி ஆளுநருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்.
இதற்காக புரிந்துணர்வின் அடிப்படையில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட கூட்டமைப்பு தயாராகவுள்ளது. மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். அதனை ௭திர்த்த உறுப்பினர்கள் கொண்ட கூட்டாக நாம் உள்ளோம், இந்த கூட்டின் சார்பாக முன்மொழியப்படும் முதலமைச்சரின் தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரைக் கோருவோம் ௭னவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா முன்னாள் ௭ம்.பி. துரைரட்ணசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

09 செப்டம்பர் 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு!

 Kudankulam Protests Villagers Hold கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலை இடிந்தகரை சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்குள் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்துக்கு மிக அருகில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.
தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த போராட்டக் குழுவினர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகருவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸார் கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான கிராமத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

08 செப்டம்பர் 2012

தமிழ் ஈழம் அமைவதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து வருகிறோம்.

நெல்லை மாவட்டம் நெல்கட்டான்செவல் பாளையத்தை ஆண்டுவந்தவர் மன்னர் பூலித்தேவன். 1755களில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்த மாமன்னன். இவரது பிறந்தநாள் விழாவை அந்த கிராமத்தில் அந்த மன்னனின் பெயரால் அறக்கட்டளை ஏற்படுத்தியவர் ம.நடராஜன்.
அதன் மூலம் அந்த மன்னனின் பிறந்தநாள் விழாவை வருடம்தோறும் செப்டம்பர் 8ஆம் தேதி நடத்துவது வழக்கம். அந்த விழாவிற்காக சினிமா பிரபலங்களையும் அழைத்து வருகிறார். இந்த வருடம் 8ஆம் தேதி நெல்கட்டான்செவல் கிராமத்தில் பூலித்தேவனின் 297வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்காக பழ.நெடுமாறன், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மருமகன் கல்காத்தாவைச் சேர்ந்த கிருஷ்ணமோகன் மற்றும் கார்கில் கேப்டன் கொல்கத்தாவைச் சேர்ந்த சக்கரவர்த்தி போன்றவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டி வந்தார்.
அந்த கிராமத்தில் திரண்ட மக்களிடையே மன்னன் பூலித்தேவனின் சுதந்திர போராட்டத்தின் வீர வரலாறு பற்றி பேசினர். அவர்களில் நெடுமாறன் பேசும்போது, எந்த ஒரு இனம் விடுதலைக்காக போராடியதோ, அந்த இனம் தோற்றதாக இல்லை. அதைப்போன்று மன்னன் பூலித்தேவனும் இந்திய மண்ணின் விடுதலைக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர். அதைப்போன்று ஈழத்தில் பிரபாகரன் தமிமிழனத்தின் விடுதலைக்காக போராடியவன். பிரபாகரன் தலைமையில் ஈழத்தில் மிகப்பெரிய விடுதலைப் போர் வெடிக்கும்.
பிரணாப் முகர்ஜியின் மருமகன் கிருஷ்ண மோகன் பேசும்போது, மத்திய அரசாங்கம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஊழல்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த ஊழல் நிறைந்த மத்திய அரசு மாற்றப்பட வேண்டும் என்றார். மேலும் வேறு அரசு அமைய வேண்டும்.
இறுதியாக ம.நடராஜன் பேசும்போது, தன் வீடு, தன் பிள்ளைகள் என்று இருக்க வேண்டும். சமூகம் வளர வேண்டும் என்று பூலித்தேவன் பெருமைகளை சொன்னவர், சாதிச் சண்டையால் மிகவும் பாதிக்கப்பட்டது தென்பகுதி. வடக்கே கல்வி பெருகியதால் அந்த மோதல் அங்கே இல்லை. எனவே உங்களது பிள்ளைகள், வாரிசுகளுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உலக வரலாற்றில் தமிழனுக்கு ஒரு அடையாம் தந்தவர் பிரபாகரன். தமிழ் ஈழம் அமைவதற்கான வழிமுறைகளை நாங்கள் வெளியே தெரியாமல் செய்து வருகிறோம். விவேகமற்ற வீரம் கோழைத்தனமாகும் என்று பசும்போன் தேவர் சொன்ன வரிகளை அழுத்தமாக பேசினார்.

கருணாநிதி ஜெயலலிதா இருவருக்குமே ஈழப்பிரச்சினை தேர்தல் நேர ஊறுகாய்!

“மழை விட்டும் தூவானம் விடவில்லை“ என்று சொன்ன கலைஞருக்கும் “போர் நடந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும் ஈழப் பிரச்னை தேர்தல் நேரத்து ஊறுகாய் மட்டுமே என ஜுனியர் விகடன் தெரிவித்துள்ளது.
கழுகார் கேள்வி பதில் பகுதியில், வாசகர் ஒருவர் 'பிரணாப் முகர்ஜியை நம்பித்தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்’ என்கிறாரே கருணாநிதி? எனக் கேட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு கழுகாரால் பதிலளிக்கப்பட்டிருந்தது.
”எப்படிப்பட்ட நேர்மையாளரை ஜனாதிபதி ஆக்க கருணாநிதி துடித்திருக்கிறார் பாருங்கள்! கருணாநிதியின் உண்ணாவிரதத்தின்போது, 'கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்’ என்று இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தது. உடனே, உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டார். அதன் பிறகும் குண்டு வீச்சு தொடர்ந்தது. தமிழர்கள் செத்து விழுந்தார்கள். இதை கருணாநிதியிடம் சுட்டிக்காட்டியபோது, 'மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் சொன்னார். 'போர் நடந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று ஜெயலலிதா சொன்னதும், குண்டு வீச்சை, 'தூவானம்’ என்று கருணாநிதி வர்ணித்ததும்... ஒரே குரல்தான். இரண்டு பேருக்குமே ஈழப் பிரச்னை தேர்தல் நேரத்து ஊறுகாய் மட்டுமே!”
1985 டெசோ மாநாடு, 2012 டெசோ மாநாடு... ஒப்பிட முடியுமா? எனக் கேட்கப்பட்ட பிறிதொரு கேள்விக்கு, ”அப்போது நடந்தது உண்மையை ஊருக்கு உணர்த்த. இப்போது நடந்தது தப்பை மூடி மறைக்க. கருணாநிதி எத்தனை மாநாடுகள் நடத்தினாலும், 2008 டிசம்பர் முதல் 2009 மே வரையிலான ஏழு மாத கால பாவத்தைக் கழுவவே முடியாது!” எனப் பதிலளிக்கப்பட்டிருந்தது.

தமிழகத் தாக்குதல்கள் குறித்து மத்திய அரசுடன் பேசுவேன் - மஹிந்த சூளுரை!

இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் மீது தமிழகத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்திய மத்திய அரசுடன் தாம் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று நேற்றுக்காலை சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் 58 ஆவது மாநாடு கொழும்பில் நடை பெறுவது பற்றி விளக்கமளிக்க இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
பொதுநலவாய நாடுகளின் நாடா ளுமன்ற அமைப்பின் 58 ஆவது உச்சி மாநாடு இங்கு நடைபெறும்போது இந்தியாவில் இலங்கையர்கள் தாக்கப்படும் விவகாரத்தை அந்த மாநாட்டில் விவாதிக்க முடியாது.
தமிழ்நாட்டில்தான் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின் றன. நாங்கள் மாநிலத் துடன் தொடர் படவில்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப அவர்களுடன் நாம் தொடர்புபட்டு செயற்பட்டு வருகிறோம். 19ஆம் திகதி நான் இந்தியா செல்லும் போது இதுபற்றி அவர்களுடன் பேசுவேன்.
ஏற்கனவே இலங்கையர்கள் தாக்கப்பட்டபோது நாங்கள் விடுத்த பாதுகாப்பு வேண்டுகோள்களை ஏற்று இந்தியா யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியது. அது எமக்குப் பெரிதும் திருப்தியளிக்கும் விடயமாக உள்ளது.
இவ்வாறான சமயங்களில் நாம் சிந்தித்துச் செயற்படவேண்டியது அவசியமாகும். ஒருசில கட்சிகளின் செயற்பாடுகள் மாநில அளவில் நடப்பதை நாம் ஓர் அரசு என்ற ரீதியில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி.

தென்னிந்தியாவை மறந்து செயற்பட்டதனால் அப்பாவி மக்கள் துன்பப்படுகின்றனர்!

இலங்கை தென்னிந்தியாவை மறந்து செயற்பட்டு வந்ததால், அதன் பிரதிபலன்களை அப்பாவி  மக்கள் அனுபவிக்கின்றனர்தென்னிந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள மத்திய அரசாங்கத்திடம் கூறி எந்த பலனும் ஏற்பட போவதில்லை எனவும் தற்போதைய இலங்கை அரசாங்கம், தென்னிந்தியாவை மறந்து விட்டு செயற்பட்டு வந்துள்ளதால், அதன் பிரதிபலன்களை அப்பாவி இலங்கை மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற சம்பவங்கள் புதிதான சம்பவங்கள் அல்ல. இலங்கையில் இருந்து சென்ற எமக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்க நேர்ந்தது. ஆனால் அரசாங்கம் அந்த சம்பவங்களை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதுடெல்லியை விட தென்னிந்தியாவே, இலங்கைக்கு முக்கியமானது என தெரிவித்திருந்தார். காரணம் அங்கு சமஷ்டி முறையிலான ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தென்னிந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து டெல்லியிடம் கூறி எந்த பயனும் இல்லை. தென்னிந்திய அரசியலை, அரசாங்கம் கடந்த காலம் முழுவதும் மறந்தே செயற்பட்டு வந்தது. அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக நாட்டின் அப்பாவி மக்களே பாதிப்புகளை அனுபவிக்கின்றனர்.
தென்னிந்தியாவில் ஏதேனும் சம்பவம் ஒன்று நடந்தால், புதுடெல்லிக்கு கடிதம் எழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. காரணம் இன்று தென்னிந்தியா கூறுவதே டெல்லி கேட்கிறது. புதுடெல்லியை விட தென்னிந்தியா, இலங்கைக்கு முக்கியம் என்பதால், இலங்கை அரசாங்கம் தென்னிந்தியாவுடனான தனத உறவுகளை அதிகரிக்க வேண்டும். தென்னிந்தியாவில் உள்ள பெருபான்மையான மக்கள் விடுதலைப்புலிகள் என இந்த அரசாங்கம் எண்ணுகிறது. இந்தியாவின் உதவி கிடைத்தன் காரணமாகவே, அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்தது.
விடுதலைப்புலிகளை அழித்தவுடன் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதி வழங்கியது. வடக்கு பிரச்சினைக்கு 13வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குவதாக அரசாங்கம் கூறியது. தற்போது அரசாங்கம் நிலை தடுமாறி போயுள்ளது. நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் கூறுவதற்கு அரசாங்கத்திடம் எதுவுமில்லை. இதனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஒருவர் கூட போகமாட்டார். அமைச்சர்கள் செல்லவும் விரும்பவில்லை. இதனால் இம்முறை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளே ஜெனிவா செல்லும் குழுவிற்கு தலைமை தாங்குவர் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

07 செப்டம்பர் 2012

விடுதலைப்புலிகள் சார்பில் வழக்காடும் சட்டவாளர்களுக்கு சிறீலங்கா அனுமதி மறுப்பு!

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புக்கு எதிரான வழக்கில், சிறிலங்காவில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள் இந்தவாரம் கொழும்பு வரவுள்ளனர்.
அவர்கள் சிறிலங்காவில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இந்தவாரமும் அடுத்தவாரமும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும், இந்த விசாரணைகளில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு எதிர்தரப்பு சட்டவாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவனுமதி வழங்க மறுத்து விட்டது.
அரச சட்டவாளர்களுடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
எதிர்த்தரப்பு சட்டவாளர்களுக்கு சிறிலங்கா அரசு நுழைவனுமதி வழங்க மறுத்து விட்டதால், அவர்கள் பேர்ணில் இருந்தவாறு சாட்சிகளிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணைகளில் நேரலை காணொலி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதன் மூலம் சாட்சிகளிடம் அவர்கள் கேள்விகளை எழுப்ப முடியும்.
சிறிலங்கா சட்டமாஅதிபர் திணைக்களம் எதிர்த்தரப்பு (விடுதலைப் புலிகளின்) சட்டவாளர்களுக்கு நுழைவனுமதி வழங்க இணங்கிய போதும்,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தலையிட்டு அதை நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டக்ளசுக்கு எதிராக மனுத்தாக்கல்!

டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சந்தித்தனர். எனவே இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா பற்றி விசாரிக்க வேண்டும் என, மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான இருளாண்டி என்பவரால் சென்னை உயர் நீதிமன்றில் வாசிப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பபினர்கள் அடங்கிய குழு கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்தார்.
டக்ளஸ் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். எனவே அவரைப் பற்றிய முழு விவரமும் நாடாளுமன்றக் குழுவுக்கு தெரிந்திருக்கக் கூடும். எனவே இலங்கை சென்ற சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவிடம் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி விசாரிக்க கேட்டு ஏப்ரல் 26-ந் திகதி அன்று உள்துறை செயலாளர், காவற்றுறை டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். என இருளாண்டி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை டிவிசன் பெஞ்சிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

06 செப்டம்பர் 2012

இலங்கை படையினர் 450பேருக்கு இந்தியாவில் பயிற்சி!

“இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 450 பேருக்கு, இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது’ என இந்தியாவின் மத்திய இராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.
தமிழகத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு, மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த பதிலில், “இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு, தமிழ்நாட்டில் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மைதான். இலங்கை உட்பட நமது அண்டை நாடுகளின் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி பரிமாறப்படுவது வழக்கமான ஒன்றுதான்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, நாட்டில் பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், “தமிழ்நாட்டில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது’ என, இராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னணியில் புலிகள் இருக்கலாம் என்கிறார் கெகலிய.

இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டிருக்கலாம் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இயங்கியிருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பயண எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌவானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

05 செப்டம்பர் 2012

ஊழல் அரசாங்கத்தை வழிநடத்துகிற மன்மோகன்சிங்.. ஜோக்குகளின் நாயகனாகிவிட்டார்!

 Coalblock Allocations Won T Be Cancelled Now Pm பிரதமர் மன்மோகன்சிங்கை டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் இப்போது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் "ஊழல் மலிந்த ஒரு அரசாங்கத்தை வழிநடத்துகிற பிரதமர்" என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
"India's ‘silent' prime minister becomes a tragic figure" என்ற தலைப்பிலான கட்டுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கும் இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் மிக முக்கிய காரணமாக இருந்த மன்மோகன்சிங்கின் ஆளுமை பெரும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஊழல் மலிந்த அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவராக இருக்கிறார்.
கடந்த இரண்டுவாரங்களாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவை கோரி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துக் கொண்டிருக்க்ன்றன. 2-வது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த அவர் மீதான மதிப்பு சரிந்து போய்விட்டது. இந்தியாவின் பொருளாதாரமும் பெரு வீழ்ச்சியடைந்து விட்டது.
மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கிப் போய்விட்டன. இந்தியாவின் வளர்ச்சியும் கணிசமாக குறைந்துபோய் ரூபாய் மதிப்பு பெருவீழ்ச்சி கண்டிருக்கிறது. மன்மோகன்சிங் எப்பொழுதுமே மெளனமாக இருப்பதால் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்களது சொந்த பாக்கெட்டில் பணத்தை நிரப்புகின்றனர்.
ஜோக்குகளின் நாயகன்
கூட்டங்களிலும் மாநாடுகளிலும் செல்போனை சைலண்ட் மோடுக்கு மாற்றுங்கள் என்பதற்குப் பதிலாக "மன்மோகன்சிங் மோடுக்கு" மாற்றுங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜோக்கராகிவிட்டார். மன்மோகன்சிங்கைப் பற்றி ஒரு பல் மருத்துவர் சொன்ன ஜோக் இது... என்னுடைய கிளினிக்கிலாவது மன்மோகன்சிங் வந்து வாயைத் திறக்க வேண்டும்...
மன்மோகன்சிங் கடைசியாக வாயை திறந்தது கடந்த வாரம்தான்.. நிலக்கரித்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செய்ததன் மூலம் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை குற்றம்சாட்டியிருந்ததற்கு பதில் அளித்த போதுதான் வாயைத் திறந்தார்...அப்போதும் கூட "என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிட சிறந்தது" என்று கூறியிருந்தார் மன்மோகன்சிங் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் டைம் பத்திரிகை "செயல்படாத பிரதமர்" என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானின் கிராமத்தில் TNA தீவிரபிரச்சாரம்!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், இன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் ஊரான பேத்தாழை கிராமத்திற்கு கல்குடா தொகுதி வேட்பாளர் சகிதம் பிரச்சாரத்திற்காக சென்றார்.
இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வருகையை பேத்தாழை வாழ் பொதுமக்கள் பெரும் ஆவலோடு வரவேற்றனர். மேலும் ஜனாதிபதி வருவதனால் அதற்கான பஸ் வண்டியில் நிரப்பிச் செல்வதற்கு தயாராகி இருந்த கிழக்கு மாகாண வேட்பாளரான சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆதரவாளர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் வீடு வீடாகச் செல்லும் போது பேத்தாழை பொதுமக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதில் காட்டும் அக்கறையை பொறுக்க முடியாமல் ஒரு சிலர் பிரச்சாரத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களின் குழுவை பேத்தாழையில் இருந்து வெளியேறுமாறு கூறினர்.
அவ்விடத்திற்கு உடன் சென்ற பாராளுன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சம்பந்தப்பட்டோர்களுக்கு தகுந்த பதில்களை வழங்கி தமது பிரச்சார நடவடிக்கையை தொடர்ந்தார். இவர்களின் சிலர் வாழைச்சேனை பிரதேச சபையில் ஊழியர்களாகவும், உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிகின்றனர். சிலர் பிரதேச சபையில் சம்பளம் பெற்றுக்கொண்டு அரசாங்க சுயேட்சைக்குழு வேட்பாளராகவும் இறங்கியுள்ளனர்.
பேத்தாழை வாழ் பொதுமக்கள் பெரும்பாலானோர் இன்று அக்கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமனற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் தாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சி;ன்னத்திற்குத்தான் உறுதியளித்துள்ளனர்.
தமது கிராமத்திலேயே எல்லா அபிவிருத்தியையும் செய்துள்ளதாக மேடைகளில் குரல் எழுப்பும் முன்னாள் முதலமைச்சருக்கு இது பெரும் சங்கட நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக பேத்தாழையில் இருந்து கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை தமிழ் மக்களின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் உரிமையை பெறும் பங்கில் நாங்களும் செயற்படுவோம் என பேத்தாழை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணியோம்; அம்பாறையில் சம்பந்தன்.

"வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஏற்படுகின்றபோது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதுவரை வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணிக்கமாட்டோம்.''
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருதமுனையில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான மருதமுனையைச் சேர்ந்த துவான் புனைட்டை ஆதரித்து மருதமுனை கடற்கரை திறந்தவெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு
இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்துவருகின்றோம். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இரு சமூகங்களையும் பிரித்துவைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். ஆகவே, முஸ்லிம், தமிழ் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட்டு இதனை முறியடிக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் பலவிதமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த நாட்டிலே சிங்கள சமூகம் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மதித்தும் வருகின்றோம்.
எமது உரிமைகளைப் பற்றி நாங்கள் பேசுகின்றபொழுது அவர்களுக்கெதிராகச் செயற்படவில்லை. தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமையுடன் கௌரவமாக வாழவேண்டும்; எமது சமய கலாசார விடயங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்; எமது தனித்துவம் பேணப்படவேண்டும்.
தந்தை செல்வநாயகம் அரசியல் போராட்டத்தை ஆரம்பித்த போது தமிழ் மக்களுக்காக மாத்திரம் தனது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்காகவே ஆரம்பித்தார். அதை அவர் மிகவும் தெளிவாக உறுதிபடக் கூறியிருக்கிறார்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக முஸ்லிம்களுக்குத் தமிழர்களால் எந்தவிதமான அசம்பாவிதமும், எவராலும் நடந்ததாகச் சொல்லமுடியாது. அப்போது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
ஆனால், ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிழக்கின் பல இடங்களிலும் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். இன ரீதியான பிரச்சினைகள் இப்போது இல்லை. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மோதவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பொதுப்பிரச்சினைகளாகும். அவற்றை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.
ஆகவே, தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழவேண்டிய தேவை இருக்கின்றது. ஒற்றுமையும் ஒருமித்த குரலும் இருந்தால்தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

04 செப்டம்பர் 2012

சிங்கள யாத்ரீகர்கள் மீது தாக்குதல்!

Tamil Organizations Oppose Singhala Devotees Picsவேளாங்கண்ணி மற்றும் தஞ்சை பூண்டி மாதா ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வந்த சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டனர்.
இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க நேற்று இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்களர்கள் அங்கிருந்து பஸ்களில் பூண்டி வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர்.
இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயில் விடுதியை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.Tamil Organizations Oppose Singhala Devotees with Polcie
இதைத் தொடர்ந்து பூண்டி மாதா கோவிலில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இளம்பரிதி, காஜா மைதீன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தஞ்சை உதவி கலெக்டர் காளிதாஸ் தலைமையிலான அதிகாரிகள் தமிழர் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதை தமிழ் அமைப்புகள் ஏற்கவில்லை. இவர்கள் அனைவரும் பூண்டி பேராலய அறையை முற்றுகையிட்டும், கீழே அமர்ந்தும் ராஜபக்சேவுக்கு எதிராகவும், பூண்டி மாதா கோவிலில் தங்கியுள்ள சிங்களர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந் நிலையில் மக்கள் உரிமை இயக்கத்தினர் செயலாளர் பழ.ராஜ்குமார் தலைமையிலும், விடுதலை தமிழப்புலிகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பூண்டி மாதா ஆலயத்தில் தங்கியிருந்த 184 சிங்களர்களும் பஸ்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு வேளாங்கண்ணி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கும் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருவாரூர் பைபாஸ் சாலையில் வந்தபோது மதிமுகவினர் அவர்களை வழிமறித்தனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் ரயில் பாஸ்கர் தலைமையில் மதிமுகவினர் சிங்களர்கள் வந்த வேன்கள் மீது சரமாரியாக செருப்புகளை வீசினர்.Tamil Organizations Oppose Singhala Devotees
மேலும் வந்த பக்தர்கள்-விமான நிலையத்திலேயே நிறுத்தி வைப்பு:
இந் நிலையில் இன்று காலையும் இலங்கையில் இருந்து 134 சிங்கள பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர்.
பூண்டி மாதா கோவிலில் இருந்து வரும் இலங்கை பக்தர்களுடன் இவர்களையும் சேர்த்து இலங்கை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.
இந் நிலையில் விரட்டப்பட்ட சிங்களவரை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தது இலங்கை அரசு. இந்த விமானம் இன்று மாலையில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
முன்னதாக திருச்சி காட்டூர் அருகே சிலர், சிங்களர்கள் வந்த வேன்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. சிலர் உள்ளே இருந்தவர்களை கம்புகளாலும், கைகளாலும் சரமாரியாகத் தாக்கினர்.
இதையடுத்து உடனடியாக போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டிக் கலைத்தனர்.
பின்னர் சிங்களர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு நிலைமை சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கிழக்கு மாகாணசபை தேர்தல் இறைவன் கொடுத்தவரம் என்கிறார் சம்பந்தன்!

"கிழக்கு மாகாணத் தேர்தலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதை மஹிந்த ராஜபக்ஷ கூட எதிர்பார்க்கவில்லை. இது கடவுளுடைய செயல். நீண்ட காலமாக நாம் துன்பங்களையும், துயரங்களையும் எதிர்நோக்கி வருகின்றோம். இறைவன் எமக்கொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான்.
இதை நாம் உறுதியாகப் பயன்படுத்த வேண்டும். ''என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கக் கோரும் பிரசாரக் கூட்டமொன்று துறைநீலாவணை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் முன்பாக இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
சர்வதேச சமூகத்தின் மேற் பார்வையின் கீழ் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளைக் கையாளவேண்டிய நிலைமைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் தற்போதைய கிழக்கு மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தேர்தல் நடைபெறவேண்டிய அவசியமில்லை. ஏறத்தாள ஒரு வருடத்துக்கு முன்பாக இந்தத் தேர்தலை நடத்துகின்றார்கள். இதில் ஒரு கபடமான யோசனை இருப்பது குறித்து மக்கள் அறிவீர்கள்.
கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதன் நோக்கம் குறித்து அரச அமைச்சர்களே பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்கள். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசு வெற்றிபெற்றால், தமிழ் முஸ்லிம் மக்கள் அரசை ஆதரிக்கின்றார்கள். எனவே, சர்வதேச சமூகம் எந்தவிதமான அழுத்தங்களையும் அரசு மீது பிரயோகிக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்த முடியும்.
அதற்கு இந்தத் தேர்தலில் அரசு வெற்றிபெறவேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுதான் இந்தத் தேர்தலுடைய பின்னணியாகும். கிழக்குத் தேர்தலின் முடிவை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பினார். அவ்வாறு இணைந்து போட்டியிட்டால் வெற்றி இலகுவானதாகி விடும்.
அந்த வெற்றியைக் காட்டி சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைப் புறம்தள்ள முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால், முஸ்லிம் மக்களும் மு.காங்கிரஸும் அரசுடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை.
அதன் காரணமாகத் தற்போது மு.காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது. இதனால் நிலைமை முழுமையாக மாறியிருக்கின்றது. அரசு எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் பே_ம் மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவுள்ளனர் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குப் போதியதொரு சுயாட்சி தமக்கு வேண்டும் என்கின்ற இலக்கின் அடிப்படையில் வாக்களிக்கப் போகின்றார்களா?
இதன்மூலமாக சர்வதேசத்தின் பங்களிப்பு தமக்குத் தேவை என்றும், அது தொடரவேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கப் போகிறார்களா? அல்லது மஹிந்த ராஜபக்ஷ கூறுவதுபோல் என்னை நம்புங்கள், உங்களில் நான் ஒருவன் என்பதை நம்பி வாக்களிக்கப் போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலளிக்க வேண்டியது நமது மக்களின் கடமையாகும்.
இந்த மாகாணசபை முறைமையானது எங்களுக்குரிய தீர்வென்று நாம் கூறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் நிறைவேற்றப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் எமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கிழக்குத் தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகம் பகிரங்கமாகத் தொடர்புபடாது. நாமும் சர்வதேச சமூகத்தின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கவும் முடியாது. மக்களும் தமது முடிவுகளின் மூலமாகத் தங்களுடைய விருப்புகளை வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கானதொரு சந்தர்ப்பமாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. சர்வதேச சமூகத்துக்கு இதன் மூலம் நாம் தெளிவானதொரு செய்தியை வழங்கமுடியும்.
இன்னும் சில மாதங்களில் வடக்கு மாகாணசபைத் தேர்தலும் இடம்பெறவுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக வெற்றிபெறும். அதன்போது, வடமாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைந்து பல விடயங்கள் தொடர்பில் ஒருமித்துச் செயற்படக் கூடியதொரு நிலைமை உருவாகவேண்டும். அப்படியென்றால், கிழக்கு மாகாணத்திலும் நாம் வெற்றியீட்டவேண்டும்.
நாம் எவருக்கும் அநீதியிழைக்க மாட்டோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து, அவர்களின் ஆதரவைப் பெற்று அவர்களும் திருப்தியடையக் கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்படமாட்டோம். நீதியைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதியை இழைக்க முடியாது.
ஆனால், எமது தமிழ் மக்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும். பாதுகாப்புடன் வாழ வேண்டும். எமது மக்கள் போதிய சுயாட்சியின் மூலமாகத் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி, சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த மண்ணில் தொடர்ந்தும் அவர்கள் வாழ வேண்டும். அதற்கு அவர்களுக்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது என்றார்.
இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், பொன். செவ்வராசா மற்றும் எஸ். யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேற்படி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் துறைநீலாவணை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

03 செப்டம்பர் 2012

வாக்குறுதிகளை நம்புவதை விடுத்து தீர்வு எட்டப்படுவதனை உறுதிசெய்க!

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்கின்றன. அத்துடன் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் விடயத்திலும் இலங்கை அரசின் செயற்றிட்டம் திருப்திகரமானதாக இல்லை.
இலங்கை அரசு சர்வதேசத்துக்கு வழங்கிவரும் வாக்குறுதிகளை நம்புவதை விடவும் நீதியான தீர்வை வழங்கும் நடவடிக் கைக்கே சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் இவ்வாறு கோரியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை.
இலங்கையின் தற்போதைய நடைமுறை விடயங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் சபைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு
இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அத்தோடு இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையும் காணப்படுகிறது.
இதனால் தொடர்ந்தும் இதுபோன்ற குற்றங்கள் நீடித்துச் செல்கின்றன. போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்கின்றன. பலவந்தமான ஆள்கடத்தல்கள், கைதுசெய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுதல் போன்ற பாரதூரமான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகின்றன.
சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது. இத்தகைய தண்டனைகள் மூலமே தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படாமல் தடுக்க முடியும். ஆனால் அரசு இந்த விடயத்தில் மெத்தனப் போக்குடனேயே செயற்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான இலங்கை அரசின் தேசிய செயற்திட்டம் திருப்திகரமாக அமையவில்லை.
இலங்கை சர்வதேசத்துக்கு வழங்கிவரும் உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் நீதியான தீர்வுத்திட்டம் எட்டப்படுவதை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கையை வலிறுத்த வேண்டும்.
அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றுள்ளது.

செங்கொடியின் தியாகம், வீரத்தின் அடையாளம் - நினைவு நிகழ்வில் சீமான்!

வீரம் என்பது மற்றவர்களின் உயிரைக் காக்க தன்னுயிரைத் தருவதாகும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் தனது அண்ணன்கள் மூன்று பேரின் உயிரைக் காக்க தமிழக மக்களே கிளர்ந்தெழுங்கள் என்று கூறிவிட்டு, தனது உடலை தீக்கிரையாக்கிக் கொண்ட செங்கொடியின் செயல் தியாகமாகும். அதுவே வீரத்தின் அடையாளம். இதனை நான் சொல்லவில்லை, நமது இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் கூறியுள்ளார். எனவே செங்கொடியி்ன் தியாகம் என்றென்றைக்கும் நினைவு கூரத்தக்கதாகும் - இவ்வாறு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மூவரின் உயிர் காக்க தன்னையே தீக்கீரையாக்கிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த செங்கொடியின் முதலாமாண்டு நினைவுப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் சிறப்புரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீரத்தமிழச்சி செங்கொடி தீயைத் தழுவி தனது உயிரை மாய்த்துக் கொண்டது தற்கொலை அல்ல. வாழ்வில் தோற்றுவிட்டோம், கல்வியில் தோற்விட்டோம், தொழிலில் ஏற்பட்ட நட்டம், கடன் சுமையால் விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வது தான் தற்கொலை.
தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் நமது தம்பிகள் மூன்று பேரை காப்பாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று முதலில் கூறப்பட்டது. தமிழக அரசின் அந்த நிலை பின்னர் மாற்றப்பட்டு, மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப் பேரைவையில் நிறைவேற்றப்பட்டது என்றால், அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கியவர் வீரத் தமிழச்சி செங்கொடிதான்- என்றார்.

02 செப்டம்பர் 2012

மேலாதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளனவாம்?!

மேலாதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என்பதை ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளதாக ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தாம் தோற்கடிக்கப்பட முடியாதவை என காட்டுவதற்கு மேலாதிகக்க சக்திகள் முனைந்தன. ஆனால் அவற்றை எதிர்த்து நிற்பது சாத்தியம் என்பதை ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளன என ஈரானிய ஆன்மீகத் தலைவர் கமேனி கூறினார்.
சர்வதேச அரங்கில் வலுவாக இருப்பதற்கும் பரந்த நலன்களை பாதுகாப்பதற்கும் முஸ்லிம் நாடுகளுக்கிடையில் நெருங்கிய நட்புறவு வளர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பலஸ்தீன நாட்டிற்கு இலங்கை அளிக்கும் ஆதரவுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தை மதிப்பதற்காகவும் இலங்கையை அவர் பாராட்டினார். ஈரானுடன் உறவுகளை விருத்தி செய்வதில் இலங்கை ஜனாதிபதி காட்டும் ஆர்வத்தையும் அவர் வரவேற்றார்.
அணி சேரா மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஈரானிய ஆன்மீக தலைவர் முன்வைத்த அணுவாயுதமற்ற மத்திய கிழக்கு யோசனை மற்றும் பலஸ்தீனம் தொடர்பாக அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போர் மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் உரிமைகளை பேணுவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை ஜனாதிபதி விளக்கினார். 'உங்கள் உதவிகள் மூலம் பல பிரச்சினைகளை நாம் வெற்றிகொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்' எனவும் அவர்தெரிவித்துள்ளார்.