08 செப்டம்பர் 2012

தென்னிந்தியாவை மறந்து செயற்பட்டதனால் அப்பாவி மக்கள் துன்பப்படுகின்றனர்!

இலங்கை தென்னிந்தியாவை மறந்து செயற்பட்டு வந்ததால், அதன் பிரதிபலன்களை அப்பாவி  மக்கள் அனுபவிக்கின்றனர்தென்னிந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள மத்திய அரசாங்கத்திடம் கூறி எந்த பலனும் ஏற்பட போவதில்லை எனவும் தற்போதைய இலங்கை அரசாங்கம், தென்னிந்தியாவை மறந்து விட்டு செயற்பட்டு வந்துள்ளதால், அதன் பிரதிபலன்களை அப்பாவி இலங்கை மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற சம்பவங்கள் புதிதான சம்பவங்கள் அல்ல. இலங்கையில் இருந்து சென்ற எமக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்க நேர்ந்தது. ஆனால் அரசாங்கம் அந்த சம்பவங்களை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதுடெல்லியை விட தென்னிந்தியாவே, இலங்கைக்கு முக்கியமானது என தெரிவித்திருந்தார். காரணம் அங்கு சமஷ்டி முறையிலான ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தென்னிந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து டெல்லியிடம் கூறி எந்த பயனும் இல்லை. தென்னிந்திய அரசியலை, அரசாங்கம் கடந்த காலம் முழுவதும் மறந்தே செயற்பட்டு வந்தது. அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக நாட்டின் அப்பாவி மக்களே பாதிப்புகளை அனுபவிக்கின்றனர்.
தென்னிந்தியாவில் ஏதேனும் சம்பவம் ஒன்று நடந்தால், புதுடெல்லிக்கு கடிதம் எழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. காரணம் இன்று தென்னிந்தியா கூறுவதே டெல்லி கேட்கிறது. புதுடெல்லியை விட தென்னிந்தியா, இலங்கைக்கு முக்கியம் என்பதால், இலங்கை அரசாங்கம் தென்னிந்தியாவுடனான தனத உறவுகளை அதிகரிக்க வேண்டும். தென்னிந்தியாவில் உள்ள பெருபான்மையான மக்கள் விடுதலைப்புலிகள் என இந்த அரசாங்கம் எண்ணுகிறது. இந்தியாவின் உதவி கிடைத்தன் காரணமாகவே, அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்தது.
விடுதலைப்புலிகளை அழித்தவுடன் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதி வழங்கியது. வடக்கு பிரச்சினைக்கு 13வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குவதாக அரசாங்கம் கூறியது. தற்போது அரசாங்கம் நிலை தடுமாறி போயுள்ளது. நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் கூறுவதற்கு அரசாங்கத்திடம் எதுவுமில்லை. இதனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஒருவர் கூட போகமாட்டார். அமைச்சர்கள் செல்லவும் விரும்பவில்லை. இதனால் இம்முறை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளே ஜெனிவா செல்லும் குழுவிற்கு தலைமை தாங்குவர் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக