17 செப்டம்பர் 2012

மக்கள் விரும்பும் ஆட்சியை தடுத்தால் அரசுக்கு ஆபத்து;சோ­சலிசக் கட்சி

"கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்கள் தமது உணர்வுகளை இந்தத் தேர்தலினூடாக அரசுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதன் பின்னரும், கிழக்கு மாகாண ஆட்சியை அரசு தன் கைக்குள்ளும், பைக்குள்ளும் அடக்கி வைத்திருப்பது நல்லதல்ல.
எனவே, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்குத் தலைசாய்த்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும். இன்றேல் அது ஒட்டு மொத்த இலங்கைக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.''
இவ்வாறு நேற்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கிய சோஷலிஸக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜய சூரிய. மூன்று மாகாணத் தேர்தல் முடிவுகளினூடாக அவதானமாக இருங்கள் என்ற அபாய எச்சரிக்கையுடன் கூடிய சிவப்புநிற சமிக்ஞையையே மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ அரசுக்குக் காண்பித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நடந்துமுடிந்த கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் தேர்தல்களும் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றவை அல்ல. இது மஹிந்த அரசால் திட்டமிட்டு, தினம் ஒதுக்கி, முழுமையாக அரசவளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு மோசடியான தேர்தலே.
இருப்பினும், இந்தத் தேர்தலினூடாக கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் அரசுக்கு நல்ல பதிலொன்றைக் கொடுத்துள்ளனர். அவதானமாக இருங்கள் என சிவப்பு நிற சமிக்ஞை காட்டி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை அதிகாரத்தை அரசு பெற்றிராத போதிலும், அம்மாகாண ஆட்சியைத் தமது கைக்குள்ளும், பைக்குள்ளும் வைத்திருக்கிறது.
79 சதவீதமான கிழக்குவாழ் மக்கள் அரசுக்கு எதிராகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். 36.5 சதவீதமான தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றனர். இவர்களுள் 31 சதவீதமானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். அதாவது, நூற்றுக்கு 60 சதவீதமான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
ஒரு பகுதி மக்கள் தமது உள்ளத்து உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக்கூறிய பின்னரும் அதற்கு அரசு தலைசாய்க்காது செயற்படுகின்றது. அரசின் இந்தச் செயற்பாடு நாட்டுக்கு நல்லதல்ல. இது முழு இலங்கைக்குமே பேராபத்தை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டு அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
13 ஆவது அரசியல் சீர்திருத்தமானது, தமிழ் மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டதொன்றாகும். அதனைக் கருத்திற்கொண்டும் அரசு செயற்படவேண்டும் என்றார்.
சரத் மனமேந்திர:
இதன் போது கருத்துத் தெரிவித்த புதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திர கூறியவை வருமாறு:
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மைப் பலம் பெற்று அரசுக்கு ஆட்சியமைக்க முடியாமல் போயுள்ளது. இதனால் நான் கூறுவது என்னவெனில், கிழக்கில் 12 தமிழ் உறுப்பினர்களும், 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 8 சிங்கள உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆகையால் கிழக்கில் 12 தமிழ் உறுப்பினர்களும், 15 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துங்கள். இந்த அரசு இனவாதத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றது. மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சின் பின்னணியில் ஒரு பில்லியன் ரூபா பணம் இருக்கிறது.
அத்துடன், முதலமைச்சர், அமைச்சர், பிரதி அமைச்சர் என்ற பதவிகளும் இருக்கின்றன. இதற்கு ஆசைப்பட்டு அரசின் பின்னால் ஹக்கீம் செல்வாராயின் கிழக்கில் பொம்மை ஆட்சியொன்றை உருவாக்குவதற்கே அவரும் வழி வகுப்பார் என்றார்.
அருண சொய்ஸா:
இதன்போது கருத்துத் தெரிவித்த ருஹுணு மக்கள் கட்சித் தலைவர் அருண சொய்ஸா கூறியவை வருமாறு:
தென்மாகாணசபையைக் கலைத்து அங்கு தேர்தல் நடத்தினால் அரசு தோற்பது உறுதி. அரசு தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி முடிந்தால் தென்மாகாணத்தில் வெற்றிபெற்றுக் காட்டட்டும் என நான் சவால் விடுக்கிறேன். அரசின் இறுதிப்பயணம் தெற்கில்தான் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக