09 செப்டம்பர் 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு!

 Kudankulam Protests Villagers Hold கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலை இடிந்தகரை சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்குள் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்துக்கு மிக அருகில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.
தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த போராட்டக் குழுவினர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகருவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸார் கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான கிராமத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக