04 செப்டம்பர் 2012

சிங்கள யாத்ரீகர்கள் மீது தாக்குதல்!

Tamil Organizations Oppose Singhala Devotees Picsவேளாங்கண்ணி மற்றும் தஞ்சை பூண்டி மாதா ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வந்த சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டனர்.
இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க நேற்று இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்களர்கள் அங்கிருந்து பஸ்களில் பூண்டி வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர்.
இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயில் விடுதியை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.Tamil Organizations Oppose Singhala Devotees with Polcie
இதைத் தொடர்ந்து பூண்டி மாதா கோவிலில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இளம்பரிதி, காஜா மைதீன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தஞ்சை உதவி கலெக்டர் காளிதாஸ் தலைமையிலான அதிகாரிகள் தமிழர் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதை தமிழ் அமைப்புகள் ஏற்கவில்லை. இவர்கள் அனைவரும் பூண்டி பேராலய அறையை முற்றுகையிட்டும், கீழே அமர்ந்தும் ராஜபக்சேவுக்கு எதிராகவும், பூண்டி மாதா கோவிலில் தங்கியுள்ள சிங்களர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந் நிலையில் மக்கள் உரிமை இயக்கத்தினர் செயலாளர் பழ.ராஜ்குமார் தலைமையிலும், விடுதலை தமிழப்புலிகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பூண்டி மாதா ஆலயத்தில் தங்கியிருந்த 184 சிங்களர்களும் பஸ்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு வேளாங்கண்ணி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கும் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருவாரூர் பைபாஸ் சாலையில் வந்தபோது மதிமுகவினர் அவர்களை வழிமறித்தனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் ரயில் பாஸ்கர் தலைமையில் மதிமுகவினர் சிங்களர்கள் வந்த வேன்கள் மீது சரமாரியாக செருப்புகளை வீசினர்.Tamil Organizations Oppose Singhala Devotees
மேலும் வந்த பக்தர்கள்-விமான நிலையத்திலேயே நிறுத்தி வைப்பு:
இந் நிலையில் இன்று காலையும் இலங்கையில் இருந்து 134 சிங்கள பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர்.
பூண்டி மாதா கோவிலில் இருந்து வரும் இலங்கை பக்தர்களுடன் இவர்களையும் சேர்த்து இலங்கை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.
இந் நிலையில் விரட்டப்பட்ட சிங்களவரை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தது இலங்கை அரசு. இந்த விமானம் இன்று மாலையில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
முன்னதாக திருச்சி காட்டூர் அருகே சிலர், சிங்களர்கள் வந்த வேன்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. சிலர் உள்ளே இருந்தவர்களை கம்புகளாலும், கைகளாலும் சரமாரியாகத் தாக்கினர்.
இதையடுத்து உடனடியாக போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டிக் கலைத்தனர்.
பின்னர் சிங்களர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு நிலைமை சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக