13 செப்டம்பர் 2012

ஆட்களை பறித்தெடுத்து ஆட்சியமைப்பது அரசு தனக்கே உலை வைக்கும் செயல்;ஹக்கீம்

தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கும், தமிழ் பேசும் உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்காமல் அரசியல் நேர்மையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை எடுக்குமெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைப் பறித்தெடுத்து ஆட்சியமைக்க எவராவது முயற்சிப்பார்களாயின் அவர்கள் தமது விரல்களால் தமது கண்களையே குத்திக்கொண்டவர்களாகி விடுவார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அரசியல் நிலைவரம் குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், மேலும் கூறியவை வருமாறு:
கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களை ஆள்கிறார்களா, முஸ்லிம்கள் தமிழர்களை ஆள்கிறார்களா என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. பிரிந்து நிற்கின்ற கிழக்கில் இணக்கப்பாட்டுடனான ஆட்சியே முக்கியம்.
முஸ்லிம்களின் சுயாட்சி, சுயநிர்ணயம், அவர்களின் அபிலாஷைகள் என்பன இந்த வெற்றிக்குப் பின்னர் பேசவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அதிகாரப்பகிர்வை நுகரும் இடம் கிழக்கு என்பதால் மாகாண ஆட்சி வெறுமனே தலையாட்டும் பொம்மை ஆட்சியாக இல்லாமல், நீதியாக செயற்படும் அதிகாரமுள்ள ஆட்சியாக இருக்கவேண்டும்.
இந்த நிலைமைகளை நாம் எமது உறுப்பினர்களுக்குத் தெளிவாகச் சொல்லியுள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களை எடுத்து ஆட்சியமைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படியானதொரு நடவடிக்கை நடந்திருந்தால் அது உண்மையில் ஓர் ஆரோக்கியமான விடயமல்ல.
சிறுபிள்ளைத்தனமானதாகவே அது கருதப்படும். சர்வதேசமே இந்த அரசியல் சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆட்களைப் பறித்து ஆட்சியமைக்க முயற்சித்தால் அது தமது விரல்களாலேயே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.
தமிழ் பேசும் சமூகங்களின் அபிலாஷைகளுக்குக் குந்தகமான விதத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது. அதை மட்டும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக