10 செப்டம்பர் 2012

மு.காவிற்கு முதலமைச்சைக் கொடுங்கள்"மனோ கோரிக்கை.

கிழக்கு மாகாணத்தில் எதிரணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்தும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு பெருந்தன்மையுடன் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இது கடந்த கால வரலாற்று தவறுகள் மாற்றியமைத்து தமிழ்-முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதுடன், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பயணத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது தமிழ் பேசும் மக்களதும், நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களினதும் விருப்பம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில், மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நாம் சப்ரகமுவ தேர்தலில் எடுத்து காட்டியுள்ளோம். சப்ரகமுவவையில் தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அங்கே எங்கள் ஒரே நோக்கம் தமிழ் பிரதிநிதித்துவம்தான். இந்த தேர்தலில் நாம் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமான சரியான முடிவு என்பதை இன்று காலம் தெட்டத்தெளிவாக எடுத்து காட்டிவிட்டது. இன்று சப்ரகமுவ உட்பட நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எமக்கு பாராட்டுகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
சப்ரகமுவையிலும், வட-மத்திய மாகாணத்திலும் இந்த அரசு அசுர பலத்துடன் ஆட்சியமைத்துள்ளது. எனவே அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் என்பதைவிட எம்மால் எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், கிழக்கில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், ஐக்கிய தேசிய கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ளன. இது வரலாறு அளித்துள்ள சந்தர்ப்பம் ஆகும்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவே பெரும்பான்மை தமிழ், முஸ்லிம் மக்களை பிரதானமாக பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், சுதந்திரமாக தமது ஆட்சியை அமைக்க வேண்டும் அது நியாயமானது. அதன் மூலமாகவே, எமது மக்களின் தேசிய அபிலாசைகளை உலகறிய செய்யலாம். குறிப்பாக முஸ்லிம் தேசியத்தை உலக அரங்குக்கு கொண்டு செல்வதற்கு இதுவே அரசியல்ரீதியான வழிமுறையாகும், அதற்கான சிறப்புமிக்க சந்தர்ப்பத்தை வரலாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கியுள்ளது.
இது நடைபெறாவிட்டால், முஸ்லிம் எழுச்சி பேரினவாத பெருங்கடலில் கலந்து காணாமல் போய் விடும். வரலாறு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமா? அதற்கும் வரலாறுதான் பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக