15 செப்டம்பர் 2012

பேச்சுக்கு வருவதாக கூறி பின்னர் அநாகரிகமான முறையில் முஸ்லீம் காங்கிரஸ் தவிர்த்துக்கொண்டது!

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பதாக கூறி, இறுதி நேரத்தில் அநாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்... 'நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு கட்சியினருக்கும் ஏற்கனவே அறிவித்து அனுமதியும் பெற்றிருந்தோம். இந்நிலையில் நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தரவில்லை. எமது கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் - ரவூப் ஹக்கீமுக்கு பலமுறை தொடர்பை ஏற்படுத்தியபோதும் பதிலில்லை. ஒருகட்டத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தொடர்புக்கு பதிலளித்தார். எமது விடயம் தொடர்பாக அவருக்கு கூறியதும், தொலைபேசியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஹஸன் அலியிடம் கொடுத்தார்.
முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்புக்காக காத்திருப்பதாக சுமந்திரன் கூறினார்.தாங்களும் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அலரி மாளிகையில் ஹக்கீம் சந்திப்பொன்றில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை, தலைவர் வந்ததும் சொல்வதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தொடர்பினை ஏற்படுத்த முயன்றபோது அனைவரது தொலைபேசிகளும் ஓஃப் செய்யப்பட்டிருந்தது.
எங்களுடனான சந்திப்பை அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் தவிர்த்திருக்கிறது. நாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்திருக்கலாம், ஆனால் எங்களை காத்திருக்க வைத்து அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொண்டமை வருத்தமளிக்கிறது' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக