15 செப்டம்பர் 2012

வன்னி மந்துவிலில் கண்ணி வெடியில் சிக்கி மூன்று படையினர் சாவு!

எவ்வளவு மூடிமறைத்தாலும் வன்னிச் செய்திகள் வெளிவரத் தான் செய்கின்றன. சில நாட்களுக்கு முன்பு இனந் தெரியாதவர்கள் வைத்த கண்ணிவெடியில் குறைந்தது மூன்று இராணுவத்தினர் உயிரிழந்தனர், வேறு சிலர் படுகாயம் அடைந்தனர். மந்துவில் கிராமம் ஆனந்தபுரம் தேவிபுரத்திற்கு அருகாமையில் முல்லை மாவட்டத்தில் இருக்கிறது.
தமிழீழத்திற்கான போராட்டத்தில் மந்துவில் ஒரு வரலாற்று மைய்யமாக இடம்பெறுகிறது. 2009 ஏப்ரல் மாதத்தில் நடந்த திருப்புமுனை போர் இங்கு நடந்தது. இராணுவம் பெரும் இழப்புக்களை இந்த இடத்தில் சந்தித்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற இராணுவம் நச்சு வாயுக் குண்டுகளை வீசி நிலமையைச் சமாளித்தது.
சூழ்ச்சியாலும் நவீன போர் விதிமுறைகளை மீறுவதாலும் பெற்ற அப்போதைய வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் ஒரு நினைவுத் தூபியை சிங்கள இராணுவம் மந்துவிலில் நிறுவியுள்ளது. விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற ஆயுத தளபாடங்களைப் பொறுக்கி எடுத்து ஒரு காட்சியகத்தையும் சிங்கள இராணுவம் மந்துவிலில் அமைத்துள்ளது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வரும் சிங்கள உல்லாசப் பயணிகளை சிங்கள இராணுவம் மந்துவிலுக்கு அழைத்துச் சென்று உபசரிக்கின்றது. இது வன்னியில் வழமையாக நடக்கும் நிகழ்ச்சி.
இதன் மூலம் இராணுவம் உயர் வருமானத்தைப் பெறுவதோடு தனக்குத் தானே பாராட்டுத் தெரிவிக்கும் சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துகிறது.
மந்துவில், ஆனந்தபுரம், தேவிபுரம் என்பன தொடர்ச்சியாகக் காணப்படும் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பூமியாகும். விடுதலைப் போருக்கும் இந்த மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மாவீரன் லெப் கேணல் ஜொனி விக்னேஸ்வரன் விஜயகுமார் இந்திய அமைதிப் படையால் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரப்பட்டு தேவிபுரத்தில் வைத்து 13 மார்ச்சு 1988ல் நயவஞ்சகமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜொனி நினைவாக விடுதலைப் புலிகள் ஜொனி கண்ணிவெடிகளைத் தயாரித்தார்கள். அந்தக் கண்ணிவெடி எதிரிகளுக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக இருக்கிறது. மந்துவில் பற்றிய மேலதிக செய்திகளை மிக விரைவில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக