11 செப்டம்பர் 2012

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம்!

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இலங்கையில் ஆணைக்குழுக்கள் நிறுவப்படுதலும் அதன் மூலம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையும் மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடிய பின்னணியை அரசாங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக