01 செப்டம்பர் 2012

கருணாவும் பிள்ளையானும் சுதந்திரமாக வால் பிடிக்க கூட்டமைப்பே காரணம் - செல்வம்!

பிள்ளையானும், கருணாவும், அரசாங்கத்திற்கு வால்பிடிக்கும் சகல தமிழர்களும் பாதுகாப்புடன் இருப்பது இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தமிழர்களின் உரிமைகளுக்காவும் அவர்களது உயிர்களுக்காகவும் நடத்தி வரும் போராட்டங்களால் தான் என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது' என்று நேற்றிரவு திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்த ஜனாதிபதிக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே இந்தத்தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றியடையச் செய்யவேண்டும் என்று சில தமிழர்கள் வெட்கம்கெட்டு தமிழ்மக்களிடம் இப்போது வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்களின் வெட்கம்கெட்ட தனத்திற்கு நாமும் உடந்தையாக இருக்க முடியுமா? தமிழன் அடக்கப்படவேண்டியவன், அவன் அடிமையாக இருக்கவேண்டும் என்ற நினைவுடன் செயற்படும் அரசாங்கம் இன்று அதே தமிழர்களிடம் வந்து வாக்குக்கேட்டு, அவர்களது வாக்குகளாலேயே வெற்றியடைய நினைப்பது வேடிக்கையான ஒன்றா இல்லையா?
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் தான் அழிக்கப்பட்டார்கள், வேறு யாரும் அழிக்கப்படவில்லை, வேறு எதுவும் அங்கு நடக்கவில்லை என்று பிள்ளையானும், கருணாவும், டக்ளசஸும் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டு சர்வதேச சமூகத்திடம் உரத்து கூறுவார்கள். இதனை நாம் அனுமதிக்க முடியுமா?
இந்த தேர்தலில் அரசு வெற்றியடையுமாயின் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கும் சர்வதேசம் நம்மைவிட்டு அகன்று சென்றுவிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடையுமாயின் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் நிற்கின்றார்கள் என்ற செய்தி சர்வதேசத்திற்கு தெளிவாக உணர்த்தப்படும்.
தமிழர்கள் வாய்திறந்தால் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் மௌனமாக இந்தத் தேர்தலில் தங்களது வாக்கை அளிப்பதன் மூலம் மிக அழுத்ததிருத்தமாகவும், தெளிவாகவும் ஒரு செய்தியை உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் கூறும் ஒரு சந்தர்பம் இப்போது கிடைத்துள்ளது.
பல்லாயிரம் போராளிகள், பொதுமக்கள் தமிழ் இனத்திற்காகவும் மொழி உரிமைக்காகவும் உயிர் கொடுத்தார்கள். அதே தியாக வழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் எங்கள் உயிர்களைக் கொடுத்தாகிலும் இன உரிமையைப் பாதுகாப்போம்' என்று அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக