18 செப்டம்பர் 2012

ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்ட தொண்டர்களுடன் வைகோ பயணம்!

 Vaiko Leaves Sanchi Protest Against மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார். ஆனால் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வைகோவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை வைகோ நிராகரித்துவிட்டார். திட்டமிட்டபடி பேருந்துகளில் தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் செல்வோம் என்று வைகோ அறிவித்திருந்தார்.
காந்தி படத்துக்கு கோட்சே மாலை போடுவதா?
இதைத் தொடர்ந்து நேற்று மத்திய பிரதேசம் செல்வதற்கு முன்பாக அண்ணா நினைவிடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு நடத்தும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி. மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா?. இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது. சொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும் என்றார் அவர்.
அதன் பின்னர் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு இருந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் 600 பேர், 15 பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக