05 செப்டம்பர் 2012

வடக்கு - கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணியோம்; அம்பாறையில் சம்பந்தன்.

"வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஏற்படுகின்றபோது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதுவரை வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணிக்கமாட்டோம்.''
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருதமுனையில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான மருதமுனையைச் சேர்ந்த துவான் புனைட்டை ஆதரித்து மருதமுனை கடற்கரை திறந்தவெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு
இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்துவருகின்றோம். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இரு சமூகங்களையும் பிரித்துவைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். ஆகவே, முஸ்லிம், தமிழ் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட்டு இதனை முறியடிக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் பலவிதமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த நாட்டிலே சிங்கள சமூகம் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மதித்தும் வருகின்றோம்.
எமது உரிமைகளைப் பற்றி நாங்கள் பேசுகின்றபொழுது அவர்களுக்கெதிராகச் செயற்படவில்லை. தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமையுடன் கௌரவமாக வாழவேண்டும்; எமது சமய கலாசார விடயங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்; எமது தனித்துவம் பேணப்படவேண்டும்.
தந்தை செல்வநாயகம் அரசியல் போராட்டத்தை ஆரம்பித்த போது தமிழ் மக்களுக்காக மாத்திரம் தனது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்காகவே ஆரம்பித்தார். அதை அவர் மிகவும் தெளிவாக உறுதிபடக் கூறியிருக்கிறார்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக முஸ்லிம்களுக்குத் தமிழர்களால் எந்தவிதமான அசம்பாவிதமும், எவராலும் நடந்ததாகச் சொல்லமுடியாது. அப்போது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
ஆனால், ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிழக்கின் பல இடங்களிலும் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். இன ரீதியான பிரச்சினைகள் இப்போது இல்லை. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மோதவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பொதுப்பிரச்சினைகளாகும். அவற்றை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.
ஆகவே, தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழவேண்டிய தேவை இருக்கின்றது. ஒற்றுமையும் ஒருமித்த குரலும் இருந்தால்தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக