காணமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழு முன் இன்று சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதிகளில் ஒருவரான அந்தோனி இராயப்பு (ஜான்) அவர்களின் மனைவி இராயப்பு மிரேனியா தனது சாட்சியத்தை சற்று முன் மடு பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் - யுத்தம் நடைபெற்ற வேளையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதயைடுத்து 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 18ஆம் திகதி அப்பகுதியிலுள்ள அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் அவர்களின் உதவியுடன் 40 விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் முல்லைத்தீவு பகுதியில் சரணடைந்தனர். இதில் எனது கணபுர் அந்தோனி இராயப்புவும் இருந்தார். அவருக்கு அப்போழுது வயது 43 எனது கணவர் 23 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றியுள்ளார்.பின் வட்டுவாகல் பகுதியிலுள்ள பாடசாலை முகாமில் கம்பிக்கூட்டில் அடைத்து வைத்தார்கள். அதன் பின் இதுவரை அவரை காணவில்லை. பின் அவரை தேடி பல முகாம்களுக்கு சென்றேன். இருந்தும் அவரை காண முடியவில்லை. பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளேன். ஆனால் அவரை நான் இன்று வரை காணவில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சில தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் விடுலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எனது கணவர் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை . பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதனாலேயே அவர் சரணடைந்தார். ஆனால் அவருடன் சரணடைந்த 40 பேருக்கும் என்ன நடந்தது என இன்றுவரை தெரியவில்லை. இவ்வாறான சூழலில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து வருகிறேன். ஒரு முறையாவது அவரை பார்த்தால் எனக்குப் போதும். அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.நான் மிக கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறேன் இந்த சூழலில் சிலர் மது போதையில் எனது வீட்டிற்கு வந்து,அவர் வந்திட்டாரா? அவர் எங்கே என சொல்லி என்னை அச்சுறுத்தி வருகிறார்கள். நான் முச்சக்கர வண்டியில் சென்றால் முச்சக்கர வண்டி சாரதியை பார்த்து ஏன் ஏற்றி சென்றாய்? எங்கே கூட்டி சென்றாய்? என அச்சுறுத்தி வருகிறார்கள். எனது வீட்டிற்கு வருபவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்.வரவர நான் மிகவும் பயத்தில் வாழ்ந்த வருகிறேன். எனவே எனது கணவன் இருக்கிறாரா இல்லையா என தெரிவிக்க வேண்டும். அவர் நிச்சயமாக இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவிக்கையில் - உங்களைச் சில ஆணைக்குழு அதிகாரிகள் பார்ப்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு ஒத்துழையுங்கள் அதன் மூலம் கணவரை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி அந்தோனி இராயப்பு வின் மனைவி தெரிவிக்கையில் - இவ்வாறு பல வாக்குகள் ஏற்கனவே எனக்கு வழங்கப்பட்டு இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனக்கு எதுவித உதவிகளும் வேண்டாம் எனவே எனக்கு எனது கணவரை ஒரு முறையாவது பார்த்தால் போதும். இராணுவத்தினரே அவரை வைத்துள்ளனர். எனவே அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக