16 ஆகஸ்ட் 2014

புலிப்பார்வைக்காக மாணவர்களை தாக்கிய சீமானின் அடியாட்கள்!

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கினர் நாம் தமிழர், பாஜக மற்றும் ஐஜேகே கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல், ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனை கொடூரமாகக் கொன்றது சிங்கள ராணுவம். இதற்கான ஆதாரங்கள், படங்கள் வெளியான போது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. நீதி விசாரணை வேண்டும் என்ற குரல்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தான், ஈழத்துக்கு ஆதரவாகவும், தனக்கு எதிராகவும் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கினார் ராஜபக்சே. சகல பலவீனங்களையும் மறைத்துக் கொண்டு, வெளியில் வீராவேசமாகப் போராடுவது போல நடிக்கும் சில சினிமாக்காரர்களை குறிவைத்துப் பிடித்துள்ளது ராஜபக்சே தரப்பு. அவரது பினாமிகளின் ஊடுருவல் தமிழ் சினிமாவையே திகைக்க வைக்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இந்த பினாமிகள் தயாரிக்கும் படங்கள்தான் கத்தியும் புலிப்பார்வையும் என்கிறார்கள் தமிழ் சினிமாவின் இயக்கத்தை முற்றாக அறிந்த சில தயாரிப்பாளர்கள். இந்தப் படங்களுக்கு எதிராக மாணவர்களும், தமிழ் உணர்வு கொண்ட கட்சிகளும் அணி திரண்டன. இவர்களில் அரசியல் கட்சிகளை எப்படியோ சரிகட்டிவிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த இரு படங்களையுமே எதிர்க்காதது பலத்த சந்தேகங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான். விழா நடந்து கொண்டிருக்கும்போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோஷம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோஷம் எழுப்பினர். உடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி அடியாட்கள் பாய்ந்து வந்து, கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு முதலுதவி கூட அளிக்காமல், ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக