09 ஆகஸ்ட் 2014

ஒரு குடும்பத்தை காப்பாற்றவே நிபுணர்குழு-மங்கள சமரவீர

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட சர்வதிகாரத் தலைவர்களைப் பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இலங்கையில் காணாமல்போனோர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.தே.கட்சியின் எம்.பியான மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிவிவகார சேவைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவகாரத்தில் உரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "மனித உரிமைகள் கவுன்ஸிலினால் இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்காக சர்வதேச விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசு உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற் காக சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது. இக்குழுவில் டெஸ்மன்ட் டி சில்வா, கெப்ரிளைஸ், டாக்டர் கிரேன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் உள்ளூரில்விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளனர். இந்த மூவரடங்கிய குழுவினரின் பின்னணியைப் ஆராய்வோமானால், இக்குழுவின் தலைவராக உள்ள வர் டெஸ்மன்ட் டி சில்வா. இவர் இராணுவப் போரில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தியவர். புலிகளின் பிடியிலிருந்து 3 இலட்சம் தமிழர்களை விடுவிப்பதற்காக 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது தவறல்ல எனக் கூறியவர். அதுமட்டுமன்றி, பிரிட்டனில் இடம் பெற்ற படுகொலை ஒன்று தொடர்பாக இவர் மூடிமறைப்புகளை மேற்கொண்டவர். இலங்கையின் தவறுகளையும் மூடிமறைக்கத் தொடர்ந்து பாடுபடுபவர். அடுத்தவர், கெப்ரிளைஸ். இவர் சர்வாதிகாரத் தலைவர்களை விடுவிக்கும் உரிமைக்காக செயற்படுவதில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிபுணர். லிபியாவில் இடம்பெற்ற யுத்தத்தில் போர்க்குற்றச் சாட்டுக்குள்ளான லிபிய ஜனாதிபதி கேணல் கடாபி இவரைத் தொடர்பு கொண்டுள்ளார். கடாபியையும் அவரது மகனையும் பாதுகாப்பதற்காக இவர் உறுதி வழங்கியிருந்த போதிலும் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அடுத்தவர் டாக்டர் கிரேன். 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் 156 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியவர். இப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளரைப் பாதுகாத்து பழியை சாதாரண இராணுவத்தினர் மீது சுமத்தியவர். எனவே, தற்போது இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த மூவரும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலை களைப் புரிந்தவர்களைப் பாதுகாத்தவர்கள். இவ்வாறான ஆட்சியாளர்களைப் பாதுகாத்து பழியை சாதாரண இராணுவத்தினரின் மீது சுமத்தியவர்கள். இதனால் இலங்கையிலும் இராணுவத்தினருக்கு எதிரான சூழ்ச்சி ஒன்று இடம்பெறுவதாகத் தோன்றுகின்றது. உத்தரவிட்டவர்கள் பாதுகாக்கப்பட்டு சாதாரணமானவர்கள் மீது பழி சுமத்தப்படப் போகின்றது. இந்த மூன்று நிபுணர்களும் நாட்டைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பத்திற்காக சட்டங்கள் கூட மாற்றப்படுகின்றன"என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக