20 ஆகஸ்ட் 2014

கத்தி,புலிப்பார்வைக்கு தமிழக அரசு தடை விதிக்கக்கூடும்!

சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வேந்தர் மூவிஸின் புலிப்பார்வை திரைப்படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனமானது எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு சொந்தமானது. இக்குழுமம் இலங்கையிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது.இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று 65 இயக்கங்களின் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிட்டால் அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இப்படி விஸ்வரூபமெடுத்திருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களுக்கு அதிரடியாக தமிழக அரசு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக