08 ஆகஸ்ட் 2014

ஈராக்கில் உள்ள ஐஎஸ் இயக்கம் மீது தாக்குதலுக்கு ஒபாமா உத்தரவு!

வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, மதச் சிறுபான்மையினர் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவோ இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஈராக்கிற்கு மீண்டும் அமெரிக்கப் படைகளை அனுப்பும் உத்தேசமில்லை என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் குழு தீவிரவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் அமெரிக்கா ஏற்கனவே மனிதாபிமான ரீதியில் விமானத்திலிருந்து பொருட்களை வீசிவருகிறது.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் காரகோஷை ஐஎஸ் குழு பிடித்ததையடுத்து அங்கிருக்கும் பொதுமக்கள் பெருமளவில் வெளியேறிவருகிறார்கள்.
வியாழக்கிழமையன்று மாலையில், தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா, மவுண்ட் சின்ஜார் பகுதியில் சிக்கியிருக்கும் யாஸிதி சமூகத்தினருக்கு அமெரிக்க ராணுவ விமானங்கள், உணவையும் தண்ணீரையும் வீசியிருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த மலைப்பகுதியிலேயே தங்கியிருந்தால் அவர்கள் பட்டினியாலும் தண்ணீர் இல்லாததாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், ஐஎஸ் குழுக்களால் கொல்லப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"உலகில் பிரச்சனை ஏற்படும் ஒவ்வொரு தடவையும் அமெரிக்கா அதில் தலையிட முடியாது; தலையிடவும்கூடாது" என ஒபாமா தெரிவித்தார்.
"ஆனால், பயங்கரமான அளவில் வன்முறை நிகழும் வாய்ப்பிருக்கும்போது, அதுவும் குறிப்பாக ஈராக்கிய அரசு உதவி கேட்டிருக்கும் நிலையில், அமெரிக்கா சும்மா இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் ராணுவ ஆலோசகர்களும் இருக்கும் இர்பிலை நோக்கி ஐஎஸ் படையினர் நகர்ந்தாலோ, பாக்தாதிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ வான் தாக்குதல் நடத்தப்படும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
மவுண்ட் சின்ஜார் முற்றுகையில் சிக்கியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயலும்போது தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு
"ஈராக்கில் ஸ்திரத்தன்மையை அளிக்கக்கூடிய மிதவாத சக்திகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் தற்போது ஈராக்கில் நிலவும் பிரச்சனைக்கு அமெரிக்கத் தீர்வு என ஒன்றும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
ஈராக்கிய நிலை கூறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு அவை கூடியிருக்கும் நிலையில், அதிபர் ஒபாமா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சிறுபான்மை மதக் குழுக்கள் சந்திக்கும் பிரச்சனை ஒரு "மாபெரும் மனிதப் பேரழிவாக" மாறும் நிலை ஏற்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
முன்பு ஐசிஸ் என்று அறியப்பட்ட ஐஎஸ் குழு, ஒரு சுன்னி முஸ்லிம் குழுவாகும். ஜூன் மாதம் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து வட ஈராக்கில் பல பகுதிகளை பிடித்து வருகிறது ஐஎஸ். சிரியாவின் சில பகுதிகளையும் ஐஎஸ் கட்டுப்படுத்தி வருகிறது.
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இஸ்லாமிய அரசை உருவாக்கியிருப்பதாக ஐஎஸ் கூறிவருகிறது.
இதற்கிடையில், பாக்தாதில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக