05 ஆகஸ்ட் 2014

பிரபாகரனின் உறுதியை இந்தியா புரிந்து கொள்ளத் தவறிவிட்டது – கேணல் ஹரிகரன்

இந்தியப் படையினர் சிறிலங்காவில் போருக்குள் வீழ்த்தப்பட்டதற்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்த உணர்ச்சி வசப்பட்ட திடீர் முடிவு மட்டுமன்றி, அவருக்கு உணர்ச்சி வசப்பட்டு ஆதரவளித்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜியும் சமமான காரணம் என்று, முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் நட்வர்சிங் எழுதியுள்ள நூலில், இந்தியப் படைகளை சிறிலங்காவுக்கு அனுப்புவதற்கு முன்னர், அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது குறித்து, சிறிலங்காவில் 1987 தொடக்கம், 1990 வரை இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கேணல் ஹரிகரன், கருத்து தெரிவிக்கையில்,
“ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார்.
பஞ்சாபில் ஹர்சன்ந் சிங் லோங்கோவால் உடன்பாடு, போடோலாந்து என்பவற்றிலும் இதுபோன்று தான் முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க நேரம் இருக்கவில்லை.
முன்னாள் வெளிவிவகாரச் செயலர் ஜே.என்.டிக்சிற் 'Assignment Colombo' என்ற தனது நூலில், வெளிநாடு ஒன்றில், கிளர்ச்சியாளர்களுடன் போரிடுவதற்காக, சிறிலங்காவுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்வதை அப்போதைய வெளிவிவகார அமைச்சர். பி.வி. நரசிம்மராவ், எதிர்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக கொழும்பு சென்றிருந்த போதே, சிறிலங்கா பிரச்சினையின் தீவிரத்தை ராஜீவ்காந்தி உணர்ந்து கொண்டதாக, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், சிறிலங்கா விவகாரங்களில் பரிச்சயமானவருமான பேராசிரியர் வி.சூரியநாராயன் தெரிவித்துள்ளார்.
உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்ட மறுநாள், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட போது ராஜீவ்காந்தி கடற்படைச்சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார்.
அப்போது, ஜெனரல் சுந்தர்ஜியின் கருத்தைக் கேட்டார்.
இராணுவத் தளபதியாக இருந்த அவர், விடுதலைப் புலிகளை 72 மணிநேரத்தில் தோற்கடித்து விட முடியும் என்றார்.
சிறிலங்காவின் கள நிலவரங்கள் குறித்து ஜெனரல் சுந்தர்ஜிக்கு எந்த யதார்த்தமும் தெரியாது.
இதனால், சிறிலங்காவில் இருந்து 19 மாதங்களின் பின்னர், இந்திய அமைதிப் படையினர் அவமானத்துடன் திரும்பியது.
ஆனால், சிறிலங்காவின் வடக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்தமை, தனது இராணுவத்தை திசை திருப்புவதற்கும், நாட்டின் பிறபகுதிகளில் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு உதவியது என்று சூரியநாயணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் 1987 ஜூனில், ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கை மூலம், இந்தியா உணவுப் பொதிகளை வீசிய பின்னர், எந்த வெளிநாட்டு உதவிகளும் வராத நிலையில், உடன்பாட்டில், கையெழுத்திடுமாறு ஜே.ஆரின் கையை இந்திய முறுக்கிய போது, அவருக்கு சிறியளவு தெரிவுகளே இருந்தன என்கிறார் கேணல் ஹரிகரன்.
இந்தியாவின் கவலைகளை சிறிலங்கா புறக்கணித்தால், இந்தியா படைபலத்தைப் பயன்படுத்த தயங்காது என்பதை இது வெளிப்படுத்தியது.
இந்த நடவடிக்கை, சிறிலங்காவில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், பங்களாதேஸ் பாணியில், இந்தியா சுதந்திர தமிழீழத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் மூட்டியது.
ஆனால் உடன்பாடு ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான போரையும் தணித்தது.
இறுதியில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விடுதலைப் புலிகளுடன் இந்தியாவைப் போரிட வைத்தார்.
இந்தியாவில் இருந்து, திரும்பியதும், இந்தியாவின் வரிசையில் உள்ள கால் விரலாக இருக்கமாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலையில் நிகழ்த்திய உரையை இந்திய அரசாங்கம் கவனமான எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
புலிகள் தமது ஆயுதங்களை பெயரளவுக்கே ஒப்படைத்தனர். பயன்படுத்த முடியாத, பயனற்ற ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டன.
இந்திய அரசாங்கம், புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே, தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்றும் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக