11 ஜனவரி 2014

சிறிலங்கா குறித்து அமெரிக்கா கடும் நிலைப்பாடு!

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஏஎவ்பியிடம் கருத்து வெளியிட்ட கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரி ஒருவர், “சென்.அந்தனிஸ் மைதானம்- 2009 ஜனவரியில் இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம்” என்று டுவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்து, சிறிலங்கா தொடர்பான வொசிங்டனின் கடுமையான மனிதஉரிமைக் கொள்கையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த டுவிட்டர் குறிப்பு அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவும், தம்மை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொதுஉறவுகள் விவகார பணிப்பாளர் கிறிஸ்ரோபர் ரீல், நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது,
“அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் உயிர் பிழைத்த பலரை சந்தித்துள்ளார். உயிர்தப்பியவர்களிடம் இருந்து, பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொண்டுள்ளோம்.
எனவே நம்பகமான சுதந்திரமான விசாரணையொன்று அவசியமானது. அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு எதிராக, எமது அரசாங்கம் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் செயற்பாடுகளை நியூயோர்க்கில் அவதானித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரை நாடு கடத்தினோம். விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாகவே அமெரிக்கா பேணிவருகிறது.
உலகிலேயே விடுதலைப் புலிகளை தடை செய்த முதலாவது நாடு அமெரிக்கா தான். எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப் தற்போது சிறிலங்காவில் இருக்கிறார். அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார். கடந்த சில தினங்களில் அவர் வடக்குக்கும் சென்றிருந்தார்.
சிறிலங்கா நிலைமைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் கொழும்பு வந்துள்ளார். குறிப்பாக, போர் நடந்த பகுதிகளில் நிலைமைகளை பார்வையிடுகிறார். அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் புரியப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த இடத்துக்கும் அவர் சென்றார்.
அங்கு அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தினார். மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் நாங்கள் பல அமைப்புக்களின் அறிக்கைகளை பார்த்துள்ளோம். அதானால் தான் இந்த சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான நம்பகமான, உறுதிப்படுத்தக்கூடிய விசாரணையை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம். இந்த விசாரணைகள் அவசியமானவை.
அத்துடன் போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்பின் பயணம் இதற்குச் சிறந்த சந்தர்ப்பம்.
சிறிலங்காவின் நல்லிணக்க நகர்வுகள் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இவரது பயணம் அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று நம்புகின்றோம். அனைத்து விசாரணைகளும் சுதந்திரமானதாகவும் நம்பகத்தன்மைமிக்கதாகவும் உண்மையானதாகவும் அமைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக