05 ஜனவரி 2014

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு நாள் இன்று!

புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து " இவன் தந்தை எந்நோற்றான் கொல் ' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார் . தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார் . மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் . சிங்கள இராணுவம் , சிறப்பு அதிரடிப்படை , சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார் . அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும் .தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார் . செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார் . சிறைகளில் சித்திரவதை , கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல் , சட்டவிரோதமான படுகொலைகள் , காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார் . பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றம் , இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார் .
இதன் விளைவாக சந்திரிகாவின் கடுங்கோபத்திற்கு ஆளானபோதிலும் இறுதிவரை உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும் யாருக்கும் அஞ்சாமலும் தமிழர்களுக்காகத் தொண்டாற்றினார் .

ஆங்கிலத்தில் வெளிவந்த நினைவுரையின் மொழிபெயர்ப்பு.

மர்மமான துப்பாக்கிதாரிகளால் சுடப்படவேண்டியிருந்ததானது குமார் பொன்னம்பலத்திற்கு இந்த வேளையில் எள்ளளவும் எதிர்பார்க்கப்பட்டிராத செய்தியாகும் . ஏனெனில் , குறிப்பாக அவர் தனது நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான காலகட்டத்திற்கும் மிகப்பிந்திய காலத்திலேயே இது நிகழ்ந்தது .
தலைகவிழ்ந்து மரணித்த நிலையில் இருக்கும் பொன்னம்பலத்தின் படம் எமது மனங்களில் எப்போதுமே பதிந்திருக்கும் . ஆனால் நாம் அறிந்துள்ள குமார் பொன்னம்பலமோ எமது அலுவலகங்களில் பிரவேசித்து அனைவருடனும் ஏன் ஒவ்வொருவருடனும் கூட சிநேகபூர்வமாக அளவளாவும் குமார் பொன்னம்பலமாகத் தானிருப்பார் . தீங்கே தராதஇ அன்பு நிறைந்தஇ இரக்கம் நிறைந்த மனிதர் ஒருவரின் சோகமான முடிவு அது .
அவர் கொல்லப்படவேண்டுமென விரும்பிய அவருக்கிருந்த இந்தக் கசப்பான எதிரி யார் ? அதை எமக்கு நினைத்துப் பார்க்கவே இயலாதுள்ளது . செய்தியாளர்களுக்குக் குமார் பொன்னம்பலம் ஒரு இரட்சகர் . ஏனெனில் எவருக்கும் செய்திப் பஞ்சம் ஏற்படுவதுண்டு . ஆனால் குமாருடன் ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கவலையெல்லாம் ஒழிந்துவிடும் . பல விடயங்களில் , குறிப்பாகச் சிறுபான்மையினர் விடயங்களில் குமாரின் கண்ணோட்டங்கள் மிக ஆழமானதாகவும் இருந்தன . ஆனால் வனப்பு மிக்க அவரது ஆளுமையிலிருந்து வெளிப்படும் மேற்கோள் ஒன்றின் காரணமாகச் செய்தியின் பிரதி எப்போதும் மகிழ்விப்பதாகவே இருக்கும் .
மனித முகங்களை மறக்காதவர் குமார் . அவர்களிடமிருந்து செய்தியொன்றைப் பெற்றுக்கொண்ட புதிதாய் நியமனம் பெற்ற , அனுபவமில்லாத ஒரு செய்தியாளர் கூட அடுத்த தடவை குமாரைச் சந்திக்கும் போது அடையாளம் காணப்பட்டதன் அறிகுறியாக இலேசான ஒரு புன்முறுவலை நிச்சயமாக அவரிடம் காணலாம் . உறவு வளர்ந்து வருகையில் குமாரே பல செய்திகளுடன் பெரும்பாலும் புத்தகங்கள் பற்றிய விளம்பரச் செய்திகளுடன் தொலைபேசியில் அழைப்பார் . அவர் கூறும் விடயங்கள்இ செய்தியாளர் விவேகமானவராயிருந்தால் நன்கு பயன்படும் .
1980 களின் பிற்பகுதியில் குமார் தனது இறுதிக்காலத்தில் காணப்பட்டதை விட வேறுபட்ட ஒரு நபராகக் காணப்பட்டார் . இறுதிச் சில வருடங்களின் போது நிச்சயமாக இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவரெடுத்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தோன்றிய வெறுப்புணர்வொன்று அவரிடம் காணப்பட்டது . 1980 களின் பிற்பகுதியில் அரசியல் முன்னேற்றம் கருதி அவர் எடுத்த முயற்சிகள் தோல்விகண்ட போது , தான் ஆதரிக்கும் அரசியல் சித்தாந்தம் இறுதியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு அத்தோல்விகளை அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டார் .
நம்பமுடியாத அளவு செல்வம் படைத்தவர் எனக் குமார் அறியப்பட்டிருந்தார் . சில மேர்ஸிடஸ் வகைக் கார்களை அவர் சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும் , அவரணிந்த தங்கக் கைச்சங்கிலியைத் தவிர , அவரது ஆடையணிகள் கிட்டத்தட்ட அக்கறை எடுத்துத் தேர்ந்து அணியப்படாத எளியனவாகவே இருந்தன . முன்னோடி வடிவமைப்புக்கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வருவதன் மூலமோ தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் ஒருபோதும் நாடவில்லை .
தமிழன் என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதே குமாரின் நோக்கமாக இருந்தது . வேட்டியொன்றை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறையும் அணிந்து கொள்வார் அவர் . இராணி வீதியில் உள்ள தனது வீட்டின் மதிற்சுவர் மீது சுவாமி அறையொன்றை நிருமாணித்திருப்பதோடு தனது கடிதத் தலைப்பிலும் ' ஓம் ' எனும் அடையாளத்தைப் பொறித்திருந்தார் அவர் . ஒரு வகையில் பார்த்தால் தனது தமிழ்த் தன்மையைப் பறைசாற்ற அவர் எடுத்த தளராத முயற்சிக்கே அவர் உயிர் விலையாகிப் போனது .
தன்னைக் கொலை செய்யக்கூடிய பகைவர்கள் தனக்கில்லையென்றே அவர் நம்பினார் . தமது பிரதிநிதியாக இருக்கக் கூடிய அளவுக்கு அவரின் செயற்பாடுகளைப் புலிகள் தமக்குகந்தவையாக ஏற்றிருக்காவிடினும் புலிகளோடு அவர் ' நல்லுறவையே பேணிவந்தார் . அவரது கருத்துகளுக்காகத் தெற்கு அரசியல்வாதிகள் அவரைக் கொல்லப் போவதில்லையெனத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களுள் பெரும்பாலானோரைப் போதுமான அளவு நெருக்கத்தோடு அவர் அறிந்திருந்தார் . அவரது அபிப்பிராயங்களைவிட்டு அவர்கள் அவரைப் பகிரங்கமாகத் திட்டக் கூடுமேயொழிய நிச்சயமாகக் கொல்ல நினைத்திருக்க மாட்டார்கள் .பணமும் அந்தஸ்தும் இருந்தால்தான் அதிகாரம் வரும் என்று சொல்லக்கூடிய வேறொரு யுகத்தில் அவரது கூர்மதிக்குப் பொருந்திவரும் விதத்தில் அதிகார உயர் வர்க்கக் குழாமில் தனக்கெனத் தனியானதோர் இடத்தை அவர் பிடித்திருக்கக் கூடும் . ஆனால் பாராளுமன்ற அரசியலின் இன்றைய முரட்டுத்தன்மை வாய்ந்த குளறுபடியான உலகத்தில் அவருக்கு இடமிருக்கவில்லை .
அவரது கருத்துகள் எதுவாயிருப்பினும் , குமார் பொன்னம்பலத்தைப் போன்ற ஓர் அரசியல் வாதி பாராளுமன்றத்திற்கே அழகூட்டுபவராய் இருந்திருப்பார் . மக்களின் செல்வாக்குக் கிடையாத விடயங்களுக்கு ஆதரவளிப்பவராக தோல்வியுற்ற விடயங்களுக்கு உயிரூட்டி முன்கொண்டு வருபவராக இருந்திருப்பார் . கட்சியின் கைப்பாவையாகத் தரந் தாழ்ந்து போயிருக்கும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உயர்வாய் மதிக்கப்படுகின்ற ஒரு துடிப்பான நிறுவனமாக சட்டசபையை மாற்றியமைக்கும் தனிவழி செல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருப்பார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக