02 ஜனவரி 2014

வடக்கில் மக்கள் காணியில் உல்லாச தங்குமிடம்!

கீரிமலை பிரதேசத்தில் J/ 226 கிராமசேவையாளர் பிரிவில் கிருஷ்ணன் கோவிலடியில் உள்ள மக்கள் காணியிலேயே குறித்த தங்குமிடம் கட்டப்பட்டு வருகின்றது.வடக்குக்கு ஜனாதிபதி செல்லும் போது தங்கி செல்வதற்காகவே குறித்த இந்த தங்குமிடம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.நவீன வசதிகளுடன் கட்டப்படும் தங்குமிடத்தில் நடுவினில் அதிநவீன வசதிகளுடனான பெரிய வீடு ஒன்றும் அதனை சுற்றி நவீன வசதிகளுடனான 7 சிறிய வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.இந்த தங்குமிடத்தை சுற்றி அதிவேக நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தப்படும் தரம் உயர்ந்த காப்பற் மூலம் வீதிகள் போடப்பட்டுள்ளன.இந்த தங்குமிடத்தை சுற்றி உள்ள காணிகளில் இருந்து கல் அகழ்ந்ததினால் பாரிய குழிகள் காணப்படுகின்றன. அக் குழிகளுக்குள் கடல் நீரை உட்புகுத்தி தங்குமிடத்தை சுற்றி (அகழி போன்று) தண்ணீர் ஓடக்கூடியவாறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.வலி வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நலன்புரி முகாம்களிலும் உறவினர் ,நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.இம்மக்களின் சொந்த இடமான வலி வடக்கில் 24 கிராமசேவையாளர்கள் பிரிவில் உள்ள 6 ஆயிரத்து 382 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் கையகபடுத்தி உள்ளனர்.
அக் காணிகளில் இராணுவத்தினரால் யோக்கட் தொழிற்சாலை ,கோல்ப் விளையாட்டு மைதானம், நட்சத்திர விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன் விவசாய செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன இந் நிலையில் தற்போது ஜனாதிபதிக்கான தங்குமிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் உள்ள வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு தற்போது இராணுவத்தினரால் இலகுவில் தழைத்து பெருக கூடிய மரவகையான 'கிளிசொரியா' (ஒருவகை மரம் ) தடிகள் நடப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக