06 ஜனவரி 2014

மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி கோரிக்கை!

கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்ள கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்‌சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினிசிறிலங்கா அதிபருக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (48 வயது) என்பவரின் மகனான நிதர்ஷனே நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மரணத்தைச் சந்தித்திருக்கின்றார்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் கைதான சுப்பிரமணியம் வீரலிங்கம் கடந்த ஐந்தாண்டு காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த மகனான நிதர்சனே ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இவரது ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது மூத்த மகனும் மரணமடைந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள்.
“என்னுடைய 14 வயதான மகனைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல ஆண்டுகாலமாக தவித்துக்கொண்டு இருந்தவர். திடீரென தலைசுற்றி விழுந்து ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இதனால் எமது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்வதற்காவது எனது கணரை விடுதலை செய்யுங்கள்” என மனைவி சிறிலங்கா அதிபரிடம் உருக்கமாகக் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக