23 ஜனவரி 2014

காப்பாற்றுமாறு கெஞ்சினார் மரணதண்டனைக்குள்ளான வாலிபர்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மட்டக்களப்பு, கொம்மாதுறையை சேர்ந்த 32 வயதான கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் என்பவரின் சடலத்தை பெற்றுத்தர உதவுமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு கட்டார் நாட்டு பிரஜை ஒருவரை வாகனத்தால் மோதி கொலை செய்ததாக ரவீந்திரன் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அவருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அந்த நாட்டு சிறைச்சாலையொன்றில் ரவீந்திரன் மரண தண்டனைக் கைதியாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகள் ரவீந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரை பார்வையிடுவதற்கு அவரது தாயாரை அழைத்திருந்தது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டவுடன் முதல் நாள் இரவு தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரவீந்திரன் கொம்மாதுறையிலுள்ள அவரது குடும்ப உறவுகளுடனும் உரையாடியதாக அவரது சகோதரர்களில் ஒருவரான விஜேந்திரன் குறிப்பிட்டார்.
மரண தண்டனைக்குள்ளான ரவீந்திரனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும் தற்சமயம் தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே தங்கியுள்ளார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் அந்நாட்டு பொலிஸாரினால் தான் அழைக்கப்பட்டதாகவும் மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை இறுதியாக சந்தித்து பேச அவர்கள் வாய்ப்பளித்ததாகவும் ரவீந்திரனின் சகோதரி ஆனந்தி கூறினார்.
அவ்வேளையில் தன்னை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடிந்த முயற்சிகளை எடுக்குமாறும் மரண தண்டனைக்குள்ளான தனது சகோதரன் கெஞ்சியதாகவும் தெரிவித்த ஆனந்தி அவரைக் காப்பாற்றும் முயற்சி தங்களால் முடியாமல் போனதாகவும் வேதனை வெளியிட்டார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் சடலத்தை பார்வையிட தனக்கும் அவரது மனைவிக்கும் சில நிமிடங்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டதாக கூறும் ஆனந்தி சடலத்தை எப்படியாவது இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதற்கு மனிதாபிமான சேவையிலுள்ளோர் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக