03 ஜனவரி 2014

மகிந்தவைக் காப்பாற்றும் முயற்சியில் களம் இறக்கப்படுகிறாரா விக்னேஸ்வரன்?

இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருந்த ஒரு புகைப்படம் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் என்று நம்பலாம்.
புகைப்படத்தின் ஒரு பக்கத்தில், நிமிர்ந்த வெற்றிச் சிரிப்புடன் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், மறு பக்கத்தில், குனிந்த பணிவுடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனும் நின்றிருந்தார்கள். ரொம் அன்ட் ஜெரி பாத்திரங்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னி அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இந்தப் படத்தின் இருவரது பொருத்தங்களைக் கண்டு அசந்திருப்பார்.
வால்ட் டிஸ்னி அவர்களது ரொம் அன்ட் ஜெரி கதாபாத்திரங்களாக வரும் பூனையும், எலியும் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்ளும். இடையே இரண்டுமே வெள்ளைக் கொடியுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளும். பின்னர், ஒன்றை ஒன்று குழிபறிக்கும் வேலைகளில் ஈடுபடும். பார்ப்பதற்கு மிகுந்த வேடிக்கையாக இருக்கும். இந்தக் கதாபாத்திரங்கள் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை வசியப்படுத்தி, இன்னுவரை வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிறுவர்களைச் சிரிக்க வைக்க வால் டிஸ்னி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கதாபாத்திரங்களை இன்று திடீரென அடம்பெற்ற மகிந்த – விக்னேஸ்வரனது சந்திப்பும், அது குறித்து வெளியான புகைப்படமும் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளது. மகிந்தவின் சிரிப்புக்குப் பின்னால், சிங்கள இனவாதத்தின் நிமிர்வும், விக்னேஸ்வரனின் குனிவுக்குப் பின்னால், தமிழ்த் தேசியத்தின் தடுமாற்றமும் இருக்கும் என்பது நிச்சயம்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஒவ்வொரு கணமும் ஈழத் தமிழர்களது எதிர்காலம் திசை நிர்ணமமற்ற வகையில் சுழலுக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தென்படும் மிதவைகளைக் கொண்டு கரையேறத் துடிக்கும் தமிழ் மக்களை அவர்கள் நம்பிய மிதவைகளே கல்லாக மாறி, அவர்களைப் புதையுண்டு போகச் செய்கின்றன.
ஒரு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னர், இன்னொரு புயலே வந்த தமிழ்த் தேசியத்தை ஆட்டம் காணச் செய்கின்றன. இறுதிப் போரின் பின்னரான ஈழத் தமிழர்களது அரசியல் தலைவிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒவ்வொரு கட்டத்திலும் இருளுக்குள் புதைக்கப்படுவதாகவே உள்ளது. அரசியல் விவேகமற்ற சுயநலமிகளால் கொண்டு செலுத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு முடிவும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களது பெறுமதிகளைச் சிதறடிப்பதாகவே உள்ளது.
சிறிலங்காவுக்கான ஜனாதிபதி தேர்தலில், இன்னொரு போர்க் குற்றவாளியான சரத் பொன்செகாவுக்கு ஆதரவு வழங்குவதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவித்தல் மகிந்த ராஜபக்ஷேவை இன்னும் பலப்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன், மேடையில் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து சம்பந்தன் ஈழத் தமிழர்களது உணர்வினைக் காயப்படுத்தினார். சிங்கள இனவாதிகளின் கைதட்டல்களுக்காக, விடுதலைப் புலிகளையும், தேவியத் தலைவர் அவர்களையும் கறை படுத்த முயன்ற சம்பந்தன் உலகத் தமிழர்கள் மத்தியில் தரம் தாழ்ந்து போனார்.
இப்போது விக்கினேஸ்வரன் முறை. கருத்துக்களால் தமிழ் உணர்வினைக் காயப்படுத்திய வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன், இப்போது சம்மந்தி உறவுடன் சிங்களத்திற்குத் தலை குனிந்து தமிழினத்தை அவமானப்படுத்தியுள்ளார்.
ஒரு மாகாணத்தின் முதல்வர் என்ற வகையில் விக்னேஸ்வரன் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை சந்திப்பது என்பது தோஷமான விடயம் அல்ல. ஆனால், நிமிர்ந்தே நின்ற தமிழீழ மக்களை முள்ளிவாய்க்காலில் சின்னாபின்னமாக்கி, நீதி கேட்கவும் முடியாதவர்களாக இராணுவ ஆக்கிரமிப்புக்குள் முடக்கப்பட்ட தமிழீழ மக்களது அவல வாழ்வுக்கு முடிவு கட்டாமல், அது குறித்துத் தெளிவான தகவல்கள் எதையும் தமிழ் மக்களிடம் தெரிவிக்காமல் விக்னேஸ்வரன் சிங்கள ஆட்சித் தலைவரைச் சந்தித்தது குறித்தே தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளார்கள்.
இன்னமும் இரண்டே மாதங்களின் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையில் தமிழீழ மக்களுக்கான நீதி கோரும் குரல்கள் ஓங்கி ஒலிக்கவிருக்கும் நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களின் சந்தேகத்திற்குரிய பின்கதவு அரசியல்வாதியான சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டது மிகுந்த எச்சரிக்கைக்குரிய நிகழ்வாகும். போர்க் குற்றச்சாட்டிலிருந்து மகிந்த ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதற்காக சுமந்திரன் எடுத்துவந்த முயற்சிகள் தமிழுலகம் அறியாதது அல்ல. சம்பந்தரை பின்றநின்று இயக்கி, தமிழ்த் தேசியப் படகின் ஓட்டைகளை உருவாக்கிவரும் சுமந்திரனே விக்னேஸ்வரனையும் பின்நின்று இயக்குகின்றார்.
விக்கினேஸ்வரனின் சம்மந்தி வாசுதேவ நாணயக்காரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நிச்சயம் ஈழத் தமிழர்களது அவலங்களைப் போக்குவதற்கானதாக இருந்திருப்பதற்குச் சாத்தியமே இல்லை. ஏனெனில், வாசுதேவ நாணயக்கார அமைச்சராகப் பதவியிலிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பு நிகழ்ந்தேறியது. அதன் பின்னரான, ஈழத் தமிழர்களது அத்தனை அவலங்கள் நடைபெற்று வருகின்ற காலத்திலும் வாசுதேவ நாணயக்கார சிங்கள ஆட்சி பீடத்தில் மந்திரியாகவே பதவி வகித்து வருகின்றார். எனவே, தனது சம்மந்தி உறவைப் பயன்படுத்தி, வாசுதேவ நாணயக்கார மகிந்தரை போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்ப வைக்கவே முயற்சிப்பார். அடுத்த சந்திப்புக்களில், விக்னேஸ்வரனின் சால்வை நிறம் மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சுவிசிலிருந்து கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக