28 பிப்ரவரி 2014

ஈ.பி.டி.பி.தொடர்ந்து குற்றம் செய்கிறது-அமெரிக்கா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
ஈ.பி.டி.பி. கட்சி வடக்கில் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவத்துள்ளது.
கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பல் கோரல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமை விவகார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி. போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கப் படையினருக்கும் தொடர்புகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினருடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்கள், யுத்த நிறைவின் பின்னரும் துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், பிரதேசத்தில் ஆதிக்கத்தை செலுத்தவும் இவ்வாறு துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் வேட்பாளர் அனந்த சசிதரனின் வீட்டின் மீது ஈ.பி.டி.பி.யினர் இராணுவ சீருடையில் சென்று தாக்கியிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

26 பிப்ரவரி 2014

காங்கிரஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதல்!

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற போது நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200 பேர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கண்டித்தும், தமிழர்கள் ஏழு பேரின் விடுதலைக்கு தடை போடும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று கூறி முழக்கமிட்டனர்.அத்துடன், அவர்களின் உருவபொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். அப்போது, காங்கிரஸ் பேனர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் இருந்த தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, நாம் தமிழர் கட்சியினரைக நோக்கி காங்கிரசார் கற்களை வீசினர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரையும் காவல்துறையினர் தடுத்தனர்.
இந்நிலையில், காங்கிரசாரிடம் சிக்கிக் கொண்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவரை காங்கிரசார் அடித்து உதைத்தனர். அவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சமூல நல கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சியினரும், காங்கிரசாரும் மோதிக் கொண்டதால் சத்தியமூர்த்தி பவன் முன்னால் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

காங்கிரசார் சாலை மறியல்- காவல்துறையினர் தடியடி!
இதனிடையே, கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரசார் சத்தியமூர்த்தி பவன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராயப்பேட்டை திரு.வி.க சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டனர்.

மீண்டும் தாக்குதல்!
இந்நிலையில், இந்த களேபரம் ஓய்வதற்குள் தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் 300 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், திடீரென சத்தியமூத்தி பவனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.பதிலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் உருட்டுக்கட்டை, செங்கல், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி கலைத்தனர்.

25 பிப்ரவரி 2014

சர்வதேச விசாரணை அவசியம்-மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த கோரும், ஐ.நாவின் புதிய வலுவான அறிக்கையின்படி, அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது.
சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்காதிருப்பது முற்றிலும் வெட்கக்கேடான செயல்.
நவநீதம்பிள்ளையின் சமீபத்திய அறிக்கை, மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு இனியும் காத்திருக்க முடியாது என்ற மற்றொரு அவசரமானதும் மற்றும் கசப்பான நினைவூட்டல் ஆகும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்.
“அனைத்துலக சமூகத்தின் கண்களில் மண்ணை தூவி, கடந்த மனிதஉரிமை மீறல்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் முயற்சிகளை தடுப்பதற்காக சிறிலங்கா எல்லாவற்றையும் செய்தது.
இந்த அறிக்கை ஒரு கண் திறப்பதாக இருக்கும் என்பதுடன், வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக விசாரணை கோரும் ஒரு வலுவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
நவநீதம்பிள்ளையின் கண்டறிவுகள் எமது கருத்தை எதிரொலிக்கின்றன.
நாம் இன்னும் புதிய, நேரில் கண்ட சாட்சிகள் மற்றும், அரச படைகள் மற்றும் விடுதலை புலிகளின் பயங்கரமான மீறல்கள் குறித்த ஏனைய குற்றச்சாட்டுக்களையும் பெற்று வருகிறோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

24 பிப்ரவரி 2014

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஆசிரியை மரணம்!

வவுனியாவில் இருந்து பளை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதப் பணியில் ஈடுபடும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் பாடசாலை விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த இளம் ஆசிரியையின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த ஆசிரியை வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா புதிய சின்னக்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஒரு வயது குழந்தையின் தாயான சுகன்யா அகிலன் (வயது 38) என்பவரே உயிரிழந்தார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அப்பகுதி மக்கள் விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கலவரத்தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வருகை தந்து வவுனியா பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

22 பிப்ரவரி 2014

சோனியா, ராகுல் கொடும்பாவிகளுக்கு தீ!

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் இன்று தமிழகம், புதுவையில் எரிக்கப்பட்டன.ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. மூன்று தமிழரின் தூக்கை ரத்து செய்ததை எதிர்த்தும் மத்திய அரசு மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்தது.இதனைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் உருவபொம்மைகள் இன்று தமிழகம், புதுவையில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினரால் எரிக்கப்பட்டன.சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் மின் ரயில்களை எதிர்த்து சோனியா- ராகுல் கொடும்பாவிகளை கொளுத்தினர். இதேபோல் பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே நாம் தமிழர் கட்சியினர் சோனியா, ராகுல் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் காமராசர் சிலை அருகே கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கடலூர், கோவையிலும் இதேபோல் கொடும்பாவி உருவங்கள் எரிக்கப்பட்டன.

21 பிப்ரவரி 2014

தமிழர் விடுதலையை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்-ஜெத்மலானி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக்கக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார்.ராஜிவ்காந்தி வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ஜெத்மலானி. மூன்று தமிழரின் தூக்கு ரத்தானபோது ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்.இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வைகோ தலைமையில் உற்சாகர வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோர் விடுவிக்கப்படக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர்.ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் போதுமான தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டனர். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவும் மேற்கொண்ட அணுகுமுறையும் சரியானதே.உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் விடுதலையில் தாமதமாகலாமே தவிர அவர்கள் விடுதலையாவதில் எந்த ஒரு சிக்கலுமே இல்லை என்றார்.

20 பிப்ரவரி 2014

காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் தே.மு.தி.க அம்போதான்!

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகியோர் இந்த விவகாரத்தில் சற்றே நிதானமாக கருத்து தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார்.ராகுலே கருத்து தெரிவித்துவிட்டாரே என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் தம் பங்குக்கு இப்போது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது.ஒட்டுமொத்த தமிழகமே அதிமுக, திமுக, மதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, பாமக என கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் இந்த பிரச்சனையில் ஓரணியில் திரண்டுள்ளனர்.ஆனால் தமிழர்களிடம் அன்னியப்பட்டுப் போன காங்கிரஸ் கட்சி மட்டும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது.இதுநாள் வரை காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருந்த தேமுதிக இனி காங்கிரஸ் குதிரையில் ஏறினால் பலத்த அடிதான் விழும் என்பதை உணர்ந்திருக்கும்.இதனால் திமுக அல்லது பாரதிய ஜனதாவிடம்தான் தேமுதிக அடைக்கலமாக வேண்டிய நிலை இருக்கிறது.மேலும் பாரதிய ஜனதா தொகுதியில் 16 தொகுதிகளையும் திமுகவிடம் 14 தொகுதிகளையும் கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த தேமுதிக, இனி தன் இறுக்கத்தை தளர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தமிழக அரசியலில் நீடித்து வந்த கூட்டணி குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

19 பிப்ரவரி 2014

என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்!

எனது மகன் பேரறிவாளன் மட்டுமல்லாது 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருப்பது தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததால் சந்தோஷத்தில் திக்கு முக்காடிய அற்புதம் அம்மாள், தற்போது தனது மகன் விடுதலையாகப் போவது பற்றி இரட்டிப்பு சந்தோஷத்தில் திளைத்து போயிருக்கிறார்.பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது பற்றிய தமிழக அரசின் அறிவிப்பு வெளியான உடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:எனது ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் இத்தனை சீக்கிரமாக முதல்வர் ஜெயலலிதா புரிந்து கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.பேரறிவாளன், சாந்தன், முருகன் மட்டுமின்றி, ஆயுள் தண்டனை கைதியாக இருந்த நளினி உள்ளிட்ட 4 பேரையுமே விடுதலை செய்து அவர் அறிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.இந்த நேரத்தில் முதல்வருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவருக்கு எத்தனை முறை நன்றிகள் கூறினாலும் போதாது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். எனது வாழ் நாளிலேயே மகிழ்ச்சியான தருணமாக இதனை பார்க்கிறேன் என்று ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்தார்.

18 பிப்ரவரி 2014

தூக்கு ரத்து தமிழர்கள் மகிழ்ச்சியில்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக் கக்கோரும் வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.மூவரின் தூக்குத்தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை உயர் நீதிமன்றில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4–ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் இவர்களது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.தூக்கு ரத்து செய்தி பரவியதும் தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

17 பிப்ரவரி 2014

மகிந்தவின் ஏமாற்று வேலையே ஜனாதிபதி ஆணைக்குழு!

மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சர்வதேசத்தினை ஏமாற்றுமொரு கண்துடைப்பென மீண்டும் அம்பலமாகியுள்ளது. அவ்வகையில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியத்தில் இதுவரையில் சுமார் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களது வாக்குமூலங்களையே ஆணைக்குழு பதிவு செய்துள்ளது. எஞ்சியவர்கள் பற்றி எந்தவொரு அறிவிப்புமின்றியே ஆணைக்குழு திரும்பவுள்ளது.இதுவரையினில் யாழ்.மாவட்டத்தினில் 175பேர் சாட்சியமளித்துள்ள நிலையில் 795பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக விண்ணப்பித்திருக்கின்றனர்.
கடந்த 14ஆம் திகதி தொடக்கம் காணாமல் போனோர் தொடர்பிலான யாழ்.மாவட்டத்திற்கான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.முதலாம் நாள் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 10 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கான சாட்சியங்கள் யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. நிகழ்வில் 66பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் 48பேர் சாட்சியமளித்திருந்தர். அதேவேளை 103பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டனர்.அதேபோல சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சியங்கள் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 13 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 59பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 48 பேர் சாட்சியமளித்திருந்தனர். அதேவேளை 170 பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இறுதி இருநாட்கள் சாட்சியமளிப்புக்கள் யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றன. நேற்றைய நாள் பதிவு நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. 04 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 67 பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் 54 பேர் சாட்சியமளித்தனர். அதேவேளை 244 பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டனர்.
இன்று யாழ்.அரச செயலகத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 04 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 52 பேர் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 1.30 மணிவரையில் 25பேர் சாட்சியமளித்திருக்கின்றனர். அதேநேரம் 278 பேர் புதிதாக சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

16 பிப்ரவரி 2014

அவகாசம் கேட்கப் போகிறாராம் பீரிஸ்!

அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு சிறிலங்கா அரசாங்கம், உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா குழுவுக்கு,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கிச் செல்வார் என்றும், அவர்,ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் கழித்து – மார்ச் 5ம் நாள் பேரவையில் உரையாற்றுவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா குழுவில் இடம்பெறும் ஏனைய உறுப்பினர்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குழுவில், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன, சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோ, மற்றும் அவரதும், வெளிவிவகார அமைச்சினதும் அதிகாரிகள் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்லும், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், 20 நிமிடங்கள் உரையாற்றுவார்.
இதன்போது அவர்,நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, 2012 ஜுலை தொடக்கம் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா, மார்ச் மூன்றாவது வாரமே தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

15 பிப்ரவரி 2014

ஐ.நா. வின் உயரதிகாரி இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் உயரதிகாரியொருவர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் டெனிஸ் ஜே. ஹால்லிடே (Denis J. Halliday) இவ்வாறு இலங்கைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு, ஆதரவு திரட்டும் நோக்கில் ஹால்லிடே கனடாவிற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு, கனடாவின் முக்கிய கட்சிகளிடம் ஹால்லிடே கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் ஹால்லிடேயின் சேவையை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு கனடாவின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்கள் பல நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

13 பிப்ரவரி 2014

பாலுமகேந்திரா மறைவு!பாரதிராஜா கதறி அழுதார்!


தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களும், திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்னம்,பாலா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, அமீர், சேரன், சீமான், ஆர்.சி.சக்தி, ராம், விக்ரமன், வி.சேகர், வசந்த், தங்கர்பச்சான், கேயார், பாண்டிராஜ், சிம்பு தேவன், சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர்கள் விவேக், பார்த்திபன், பாண்டியராஜன், கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், ரமேஷ்கண்ணா, ஸ்ரீகாந்த், வையாபுரி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப் பாளர்கள் கணேஷ்(சங்கர்), எஸ்.ஏ.ராஜ்குமார், கவிஞர்கள் வைரமுத்து, பழனிபாரதி, சினேகன், மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், நீங்கள் கேட்டவை படங்களில் நடித்த நடிகை அர்ச்சனா, பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கேயே இருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜா, துக்கம் தாளாமல் கதறி அழுதார். அவரை மகேந்திரன், சேரன், ராம், ஜி. ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் தேற்றினர்.

நன்றி:நக்கீரன்.

12 பிப்ரவரி 2014

தமிழ் தம்பதிகள் தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் விசாரணை!

பிரித்தானிய பிரஜைகளான தமிழ்த் தம்பதிகள், சென்னையில் கடத்தப்பட்டது தொடர்பாக, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் சென்னையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி சென்னை விமான நிலையத்தில் தவராஜ் (59), சலஜா(55) ஆகிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ் தம்பதியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். இவர்களை விடுவிப்பதற்கு 2.5 கோடி ரூபாய் பணயத் தொகை கேட்கப்பட்டது. இந்தக் கடத்தல் தொடர்பாக தமிழக பொலிஸார் 13 பேரைக் கைது செய்துள்ளனர். அதேவேளை, இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய அஜந்தன் மற்றும் ரமேஷ் ஆகிய இலங்கைத் தமிழர்களைஇங்கிலாந்தின் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க ஸ்கொட்லன்ட்யார்ட் சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த கிரெய்க் மேகி, மார்க் ஹியுக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவின் சஞ்சய் மெய்னி ஆகிய மூவரும் புதுடெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதிநிதி ஒருவருடன் இணைந்து நேற்று தமிழக பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஜார்ஜை சந்தித்தனர். இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகள், மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்காக இவர்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 பிப்ரவரி 2014

நளினியை பரோலில் விட தமிழக அரசு எதிர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.22 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, தனது வயதான தந்தையை பார்த்து கொள்ளவதற்காக, ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதியளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.அதனை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் நளினியின் மனு மீது பதிலளிக்குமாறு வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.அதன்படி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அவரை பரோலில் விடுவித்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிறையில் பல்வேறு போராட்டங்களில் நளினி ஈடுபட்டதாகவும், கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரும் நளினியை பரோலில் விடுவிக்க பரிந்துரை செய்யவில்லை.நளினியின் தந்தை சங்கர நாராயணன் தற்போது நெல்லையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 பிப்ரவரி 2014

காணொலி மூலம் கலந்துரையாடுகிறார் அமெரிக்க அதிகாரி!

சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின் ருசெல் அம்மையார், சிறிலங்காவில் உள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்களுடன் இன்று காணொலிக் கலந்துரையாடலை நடத்தவுள்ளார்.
கத்தரின் ருசெல் அம்மையார், தெற்காசியாவுக்கான சுற்றுப் பயணத்தை கடந்த 4ம் நாள் ஆரம்பித்துள்ளார்.
அவர், சிறிலங்கா, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இன்றும் நாளையும் (பெப்ரவரி10,11) சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளுடனும், கலந்துரையாடவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அவருக்கு நுழைவிசைவு வழங்க மறுத்ததால், சிறிலங்காவில் உள்ள பெண்உரிமை அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், காணொலிக் கலந்துரையாடல் ஒன்றை நடத்த கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
நேபாளத்தில் இருந்தவாறு கத்தரின் ருசெல் அம்மையார் இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக அமெரிக்க தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 பிப்ரவரி 2014

இரசாயன ஆயுதம் பயன்படுத்தியமை உண்மை!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என இலங்கை அரசு கூறிவரும் நிலையில்,இலங்கை ராணுவத்தின் படைவீரரே தாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் லண்டனில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பாக 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உள்பட உலகளவில் பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டில், சமீபதத்தில் இலங்கை சென்று தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்து, இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப்படத்தை வெளியிட்டார்.இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்தான் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது '(This Land Belongs to the Army) என்ற பெயரில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார் மகா தமிழ்ப்பிரபாகரன்.இதில் வன்னிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் கொன்று குவித்ததையும்,இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களையும்,போர் முடிந்து இன்றும் இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளது என்பதையும் இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டியுள்ளது.அவரின் இந்த நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும், போரில் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள் குறித்த குற்றசாட்டையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கிறது ஆனால்,ரசாயன ஆயுதங்கள் விசயத்தை பற்றியும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் ரசாயன தாக்குதல் பற்றியும் போரில் பங்கேற்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தான் இப்படத்தில் வெளியாகியுள்ள பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.தவறுகள் உள்ள இடத்தில் தான் தடைகளும் கட்டுப்பாடுகளும் பயமும் அதிகமாக இருக்கும். அந்த தடைகளுக்கு பின்னால் உள்ள காட்சிகளையும், இன்றைய வடகிழக்கு நிலத்தின் எதார்த்தத்தையும், போரின் போது இசைப்பிரியாவை போன்று இன்னும் பிற தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' என்ற ஆவணப்படத்தின் மூலம் மனிதத்தையும்,மனிதர்களையும் நேசிக்கும் மக்கள் முன்வைத்துள்ளார் தமிழ்பிரபாகரன்.மகா தமிழ் பிரபாகரன் ஏற்கனவே 'புலித்தடம் தேடி- இரத்த ஈழத்தில் 25 நாட்கள்' என்ற தொடரை எழுதி அதை அண்மையில் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

08 பிப்ரவரி 2014

தென்கொரியா, ஜப்பானுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராஜதந்திர வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆசிய, பசுபிக் பிராந்திய குழுவில் சிறிலங்காவின் நிலையை மேலும் பலவீனப்படுத்துவதில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் நடுநிலை வகித்தது. தென்கொரியா ஆதரவு அளித்தது.
மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவளித்தன.
13 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. ஒரு நாடு சமூகமளித்திருக்கவில்லை.
2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, 24 நாடுகள் ஆதரித்தன, 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன.
அப்போது தென்கொரியாவும், ஜப்பானும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளாக இருக்கவில்லை.
ஆசிய,சுபிக் குழுவில் இடம்பெற்றிருந்த இந்தியா இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்திருந்தது.
கடந்த ஆண்டுகளில் தீர்மானத்தை எதிர்த்த சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா ஆகிய ஆசிய பசுபிக் குழு நாடுகள், இம்முறையும் அதேகுழுவில் இருக்கின்றன.
இம்முறை, இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.
ஆசிய பசுபிக் குழுவில் இம்முறை வியட்னாம் இடம்பெற்றுள்ளது சிறிலங்காவுக்கு சாதகமான விடயம் என்று சிறிலங்கா அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, புதிதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ள தென்னாபிரிக்காவுக்கும், தீர்மானத்தை ஆதரிக்கும்படி கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படும்.
தென்கொரியா மற்றும் ஜப்பான் மீது விடுதலைப் புலிகளால் அழுத்தங்கள் கொடுக்க முடியாது போனாலும், தென்னாபிரிக்கா மீது அவர்களால் அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

07 பிப்ரவரி 2014

கைதாகிய சிறுவர் போராளிக்கு 38வயதில் மரணதண்டனை!

விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக இன்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா சிவகந்தராசா (38வயது)என்பவருக்கே இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சீனன் குடா கடற்படை தளத்தினை அண்மித்த பகுதியில் அவர் சிறைப்பிடிக்கப்பட்ட வேளை அவரது வயது வெறும் 14 மட்டுமேயாகும். சுமார் 14 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிட பணிக்கப்பட்டுமிருந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போதே அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கைதாகிய சிறுவர் போராளிக்கு 38வயதில் மரணதண்டனை!

06 பிப்ரவரி 2014

இலங்கையரை புறம்தள்ளியது இந்தியா!

இந்தியாவில் தற்போது இருந்து வரும் வரையறுக்கப்பட்ட ‘வந்த பின் விசா’ திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும்180 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டதை அமல்படுத்தலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இது சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளை ஊக்குவிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் குடிமக்கள் மட்டும் இந்த திட்டத்தை உபயோகப்படுத்த முடியாது.
இந்த திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அமல்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது பின்லாந்து, சிங்கபூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளின் குடிமக்களுக்கு இந்த வசதியை இந்தியா வழங்கி வருகிறது.
இந்த 'வந்த-பின்-விசா திட்டத்தை 180 நாடுகளுக்கு விரிவுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கு தேவையான உள்கட்டமைப்பை தயார் செய்ய அந்தந்தத் துறைகளுக்கு ஐந்திலிருந்து 6 மாத காலம் வரை பிடிக்கலாம். அடுத்த சுற்றுலா காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் இந்த திட்டத்தை அமல்படுத்தமுடியும் என்று நம்புகிறோம்", என்றார் திட்டத் துறை அமைச்சர் ராஜிவ் ஷுக்லா.
மின்னணு வழி செயல்படும் 'வந்த-பின்-விசா' திட்டம் இந்தியாவின் 26 முக்கிய விமான நிலையங்களில் அமல்படுத்தப்படும். இந்த விசா அந்த சுற்றுலா பயணி வந்தடையும் தேதியிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.இணையம் மூலம் சுற்றுலாப் பயணிகள் விசா விண்ணப்பிக்கவும், விசா கட்டணத்தை செலுத்தவும் ஒரு இணையதளத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. பின் மூன்று நாட்களுக்கு பிறகு அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.
பாகிஸ்தான், சுடான், ஆப்கானிஸ்தான், இரான், இராக், நைஜீரியா, இலங்கை மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் ஏன் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து ராஜிவ் ஷுக்லா எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.

05 பிப்ரவரி 2014

போர்க்குற்றங்களுக்கு இலங்கை படையினரே பொறுப்பு!

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பு என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரச படைகள் போரின் இறுதிக்கட்டங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயத்தில், பொதுமக்கள் மீது திட்டமிட்டு, கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதும், இந்த ஆட்டிலறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதும் குறித்து இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.
பொது நல ஆலோசனை மையத்தின், அனைத்துலக குற்றவியல், ஆதாரத் திட்டத்தினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உள்ளிட்ட சரணடைந்த விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான பாலியல் வல்லுறவு, சித்திரவதை, மருத்துவமனைகள் மீதான பீரங்கித் தாக்குதல், பொதுமக்களுக்கு உணவு, மருந்து கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டமை, குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பொதுமக்களும் சிறார் போராளிகளும் புலிகளால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
எல்லா சந்தர்ப்பங்களிலும், போர்க்குற்றங்களும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்துள்ள இந்த அறிக்கை, இதுகுறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இருதரப்பினாலும், வன்முறைகள் இழைக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆய்வு நடத்தப்பட்ட, 2008 செப்டம்பர் தொடக்கம். 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பாக இருந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்ட்டுளை மறுத்தாலும், சர்வதேச விசாரணையை நடத்துவதன் மூலம், இலங்கையின் மிக மூத்த அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வழிவகுக்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், குற்றச்சாட்டுகள் குறித்து ஒளிப்படங்கள் தொடர்பான தடயவியல் ஆய்வு, செய்மதிப்படங்கள், சுதந்திரமான இராணுவ ஆய்வாளர்களின் கருத்துகள், புதிய சாட்சிகளின் பதிவுகள் என்பனவற்றை கொண்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் புதைக்கப்பட்டது, பதிவு செய்யப்பட்டது தொடர்பான மூன்று வௌ;வேறு சாட்சிகளின் சாட்சியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அரச படைகள், போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை திட்டமிட்டு அழித்து விட்டதாக ஒரு சாட்சி, குற்றம்சாட்டியுள்ளார்.

04 பிப்ரவரி 2014

பிரித்தானியாவுடன் அமெரிக்கா பேச்சு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் பேச்சு நடத்தியுள்ளன. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயரை சந்தித்துள்ளார். லண்டனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தது என ஸ்வார் தெரிவித்துள்ளார். எவ்வாறான தீர்மானம் கொண்டு வருவது நாடுகளின் ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

03 பிப்ரவரி 2014

தூதுவர்களை சந்திக்கும் பீரிசின் முயற்சி தோல்வி!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிராக, ஆதரவு திரட்டும் நோக்கில், புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், கொழும்பில் தூதரகத்தை கொண்டிராத நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு கோரத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுடனான இந்தச் சந்திப்புக்கு, புதுடெல்லியில் உள்ள பெரும்பாலான நாடுகளின் தூதரகங்களில் இருந்து, இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை அதிகாரிகள் தான் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தை, பெரும்பாலான நாடுகளின தூதுவர்கள் புறக்கணித்து விட்டது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் மேலும் தெரிவித்துள்ளது.

02 பிப்ரவரி 2014

பெண் ஊடகவியலாளர் படுகொலை!

ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளரான 46 வயதுடைய மெல் குணசேகர பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் தாக்குதலுக்குள்ளாகி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெற்றோர்கள் தேவாலயத்திற்கு சென்று வீடு திரும்பிய போது மெல் குணசேகர வீட்டில் சடலமாக கிடந்துள்ளதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெற்றோர் பத்தரமுல்லை பொலிஸாருக்கு அறிவித்ததோடு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மெல் குணசேகர தனிமையில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகைதந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பத்தரமுல்லையில் அவரது வீட்டுக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டார்.இந்த நிலையில் மெல் குணசேகரவின் சடலம் சற்று முன்னர் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கொலைக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை என கூறிய பொலிஸார். மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தில் கொழும்பு செய்தியாளராக கடமையாற்றிய மெல் குணசேகர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தில் இருந்து வலிகியிருந்தார். இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராகவும் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக இறக்கும் பொது பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே கடைமாற்றியுள்ளார்.
இதேவேளை சிரேஷ்ட ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.கொலையாளி அல்லது கொலையாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நுகேகொடை பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த 'ரோஹி' என்றழைக்கப்படும் மோப்பநாய் ஒரு கிலோமீற்றர் தூரம் மோப்பமெடுத்துச் சென்று அசோக சுற்றுவட்டத்திற்கு அருகில் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துளையிடும் ஆயுதமான, கத்தியின் கைப்பிடி வேறாகவும் கத்திவேறாகவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

01 பிப்ரவரி 2014

பீரிஸ்,நிஷா பிஸ்வால் சந்திப்பு!

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் செயற்பாடுகள் 'அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைப்பதாகவும், போதனை செய்வதாகவும்' இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று நாள் விஜயமாக, இலங்கை சென்றுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வாலிடம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் இந்த நிலைப்பாட்டைக் கூறியுள்ளார்.
'யுத்தத்தின் பின்னரான சூழலில் கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பத்தை இலங்கை இழந்துவிடும் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் அச்சம் அதிகரித்துவருவதாக' அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வால், தம்மிடம் கூறியதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரின் வடுக்களை ஆற்றுவதில் இலங்கை வேகமாக இயங்கவில்லை என்றும், இந்த ஆறாத வடுக்கள் மீண்டும் மோதல்களை தோற்றுவிக்கக்கூடும் என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் சுட்டிக்காட்டியதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கையில் மீண்டும் மோதல் ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை என்றும் 'அமெரிக்காவின் செயற்பாடு அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைக்கும் வேலை என்றும், ஊருக்கு உபதேசம் செய்வது என்றும்' கூறியுள்ளார்.
இலங்கைக்காக சுட்டிக்காட்டப்படும் ஏற்பாடுகள் மற்ற நாடுகளின் விவகாரத்தில் கைக்கொள்ளப் படுவதில்லை என்றும், இலங்கை சமமாக நடத்தப்படவில்லை என்றும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஆனால், 'இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் எதனையும் அமெரிக்கா கைக்கொள்ளவில்லை' என்றும், 'அமெரிக்க அரசு அடித்தளமாகக் கொண்டுள்ள சில விடயங்களில் அமெரிக்கா உறுதியாகத்தான் நின்றாக வேண்டும்' என்றும் பிஸ்வால் இலங்கை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
'முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இலங்கையின் சொந்த பொறிமுறையைக் கையாளுமாறு அமெரிக்கா கோரிவந்தது. ஆனால், இலங்கை அதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கவலைகள் உள்ளன' என்றும் அமெரிக்க பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மீது விழுந்துள்ள சர்வதேசத்தின் பார்வை பரந்துபட்ட பொதுநலனையோ அல்லது விழுமியங்களையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் அது அதிகாரம், பணம் மற்றும் வாக்குகளை நோக்காகக் கொண்டது என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலரிடம் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் ஒத்துழைத்துச் செயற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார்.
அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொண்டு இலங்கை வருபவர்கள், கடந்த காலங்களைப் போல, ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுவந்து நிறைவேற்றப் பார்க்கமாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஜீ.எல். பீரிஸ் நிஷா பிஸ்வாலிடம் கூறியுள்ளார்.
அமெரிக்கா தனது அணுகுமுறையில் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஜீஎல் பீரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.