01 பிப்ரவரி 2014

பீரிஸ்,நிஷா பிஸ்வால் சந்திப்பு!

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் செயற்பாடுகள் 'அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைப்பதாகவும், போதனை செய்வதாகவும்' இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று நாள் விஜயமாக, இலங்கை சென்றுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வாலிடம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் இந்த நிலைப்பாட்டைக் கூறியுள்ளார்.
'யுத்தத்தின் பின்னரான சூழலில் கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பத்தை இலங்கை இழந்துவிடும் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் அச்சம் அதிகரித்துவருவதாக' அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வால், தம்மிடம் கூறியதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரின் வடுக்களை ஆற்றுவதில் இலங்கை வேகமாக இயங்கவில்லை என்றும், இந்த ஆறாத வடுக்கள் மீண்டும் மோதல்களை தோற்றுவிக்கக்கூடும் என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் சுட்டிக்காட்டியதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கையில் மீண்டும் மோதல் ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை என்றும் 'அமெரிக்காவின் செயற்பாடு அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைக்கும் வேலை என்றும், ஊருக்கு உபதேசம் செய்வது என்றும்' கூறியுள்ளார்.
இலங்கைக்காக சுட்டிக்காட்டப்படும் ஏற்பாடுகள் மற்ற நாடுகளின் விவகாரத்தில் கைக்கொள்ளப் படுவதில்லை என்றும், இலங்கை சமமாக நடத்தப்படவில்லை என்றும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஆனால், 'இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் எதனையும் அமெரிக்கா கைக்கொள்ளவில்லை' என்றும், 'அமெரிக்க அரசு அடித்தளமாகக் கொண்டுள்ள சில விடயங்களில் அமெரிக்கா உறுதியாகத்தான் நின்றாக வேண்டும்' என்றும் பிஸ்வால் இலங்கை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
'முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இலங்கையின் சொந்த பொறிமுறையைக் கையாளுமாறு அமெரிக்கா கோரிவந்தது. ஆனால், இலங்கை அதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கவலைகள் உள்ளன' என்றும் அமெரிக்க பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மீது விழுந்துள்ள சர்வதேசத்தின் பார்வை பரந்துபட்ட பொதுநலனையோ அல்லது விழுமியங்களையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் அது அதிகாரம், பணம் மற்றும் வாக்குகளை நோக்காகக் கொண்டது என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலரிடம் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் ஒத்துழைத்துச் செயற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார்.
அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொண்டு இலங்கை வருபவர்கள், கடந்த காலங்களைப் போல, ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுவந்து நிறைவேற்றப் பார்க்கமாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஜீ.எல். பீரிஸ் நிஷா பிஸ்வாலிடம் கூறியுள்ளார்.
அமெரிக்கா தனது அணுகுமுறையில் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஜீஎல் பீரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக