முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.22 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, தனது வயதான தந்தையை பார்த்து கொள்ளவதற்காக, ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதியளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.அதனை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் நளினியின் மனு மீது பதிலளிக்குமாறு வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.அதன்படி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அவரை பரோலில் விடுவித்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிறையில் பல்வேறு போராட்டங்களில் நளினி ஈடுபட்டதாகவும், கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரும் நளினியை பரோலில் விடுவிக்க பரிந்துரை செய்யவில்லை.நளினியின் தந்தை சங்கர நாராயணன் தற்போது நெல்லையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக