20 பிப்ரவரி 2014

காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் தே.மு.தி.க அம்போதான்!

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகியோர் இந்த விவகாரத்தில் சற்றே நிதானமாக கருத்து தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார்.ராகுலே கருத்து தெரிவித்துவிட்டாரே என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் தம் பங்குக்கு இப்போது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது.ஒட்டுமொத்த தமிழகமே அதிமுக, திமுக, மதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, பாமக என கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் இந்த பிரச்சனையில் ஓரணியில் திரண்டுள்ளனர்.ஆனால் தமிழர்களிடம் அன்னியப்பட்டுப் போன காங்கிரஸ் கட்சி மட்டும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது.இதுநாள் வரை காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருந்த தேமுதிக இனி காங்கிரஸ் குதிரையில் ஏறினால் பலத்த அடிதான் விழும் என்பதை உணர்ந்திருக்கும்.இதனால் திமுக அல்லது பாரதிய ஜனதாவிடம்தான் தேமுதிக அடைக்கலமாக வேண்டிய நிலை இருக்கிறது.மேலும் பாரதிய ஜனதா தொகுதியில் 16 தொகுதிகளையும் திமுகவிடம் 14 தொகுதிகளையும் கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த தேமுதிக, இனி தன் இறுக்கத்தை தளர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தமிழக அரசியலில் நீடித்து வந்த கூட்டணி குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக