16 பிப்ரவரி 2014

அவகாசம் கேட்கப் போகிறாராம் பீரிஸ்!

அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு சிறிலங்கா அரசாங்கம், உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா குழுவுக்கு,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கிச் செல்வார் என்றும், அவர்,ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் கழித்து – மார்ச் 5ம் நாள் பேரவையில் உரையாற்றுவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா குழுவில் இடம்பெறும் ஏனைய உறுப்பினர்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குழுவில், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன, சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோ, மற்றும் அவரதும், வெளிவிவகார அமைச்சினதும் அதிகாரிகள் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்லும், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், 20 நிமிடங்கள் உரையாற்றுவார்.
இதன்போது அவர்,நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, 2012 ஜுலை தொடக்கம் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா, மார்ச் மூன்றாவது வாரமே தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக