26 பிப்ரவரி 2014

காங்கிரஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதல்!

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற போது நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200 பேர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கண்டித்தும், தமிழர்கள் ஏழு பேரின் விடுதலைக்கு தடை போடும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று கூறி முழக்கமிட்டனர்.அத்துடன், அவர்களின் உருவபொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். அப்போது, காங்கிரஸ் பேனர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் இருந்த தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, நாம் தமிழர் கட்சியினரைக நோக்கி காங்கிரசார் கற்களை வீசினர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரையும் காவல்துறையினர் தடுத்தனர்.
இந்நிலையில், காங்கிரசாரிடம் சிக்கிக் கொண்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவரை காங்கிரசார் அடித்து உதைத்தனர். அவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சமூல நல கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சியினரும், காங்கிரசாரும் மோதிக் கொண்டதால் சத்தியமூர்த்தி பவன் முன்னால் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

காங்கிரசார் சாலை மறியல்- காவல்துறையினர் தடியடி!
இதனிடையே, கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரசார் சத்தியமூர்த்தி பவன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராயப்பேட்டை திரு.வி.க சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டனர்.

மீண்டும் தாக்குதல்!
இந்நிலையில், இந்த களேபரம் ஓய்வதற்குள் தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் 300 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், திடீரென சத்தியமூத்தி பவனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.பதிலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் உருட்டுக்கட்டை, செங்கல், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி கலைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக