02 பிப்ரவரி 2014

பெண் ஊடகவியலாளர் படுகொலை!

ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளரான 46 வயதுடைய மெல் குணசேகர பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் தாக்குதலுக்குள்ளாகி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெற்றோர்கள் தேவாலயத்திற்கு சென்று வீடு திரும்பிய போது மெல் குணசேகர வீட்டில் சடலமாக கிடந்துள்ளதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெற்றோர் பத்தரமுல்லை பொலிஸாருக்கு அறிவித்ததோடு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மெல் குணசேகர தனிமையில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகைதந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பத்தரமுல்லையில் அவரது வீட்டுக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டார்.இந்த நிலையில் மெல் குணசேகரவின் சடலம் சற்று முன்னர் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கொலைக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை என கூறிய பொலிஸார். மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தில் கொழும்பு செய்தியாளராக கடமையாற்றிய மெல் குணசேகர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தில் இருந்து வலிகியிருந்தார். இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராகவும் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக இறக்கும் பொது பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே கடைமாற்றியுள்ளார்.
இதேவேளை சிரேஷ்ட ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.கொலையாளி அல்லது கொலையாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நுகேகொடை பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த 'ரோஹி' என்றழைக்கப்படும் மோப்பநாய் ஒரு கிலோமீற்றர் தூரம் மோப்பமெடுத்துச் சென்று அசோக சுற்றுவட்டத்திற்கு அருகில் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துளையிடும் ஆயுதமான, கத்தியின் கைப்பிடி வேறாகவும் கத்திவேறாகவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக