14 செப்டம்பர் 2011

நான் பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதை துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி தடுத்தது!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, வடக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இலங்கைக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச்செயலர் ரொபட் ஓ பிளெக் இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்தார்.வடக்கில் வலுவான துணை இராணுவ பிரசன்னத்தைக் கொண்ட அமைப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈபிடிபி) ரொபட் பிளேக் குறிப்பிட்டார். ‘துணை இராணுவக் குழுக்கள் பகிரங்கமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்’ என அவர் கூறினார்.
‘மனித உரிமைகள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன். துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணியாக்குவதன் அவசியம், இதில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். வடக்கில் தமிழ் பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது அவசியம். அதனால் இராணுவம் இப்பணிகளை செய்ய வேண்டியிருக்காது’ என அவர் கூறினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்குவிதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன இன்னும் அமுலில் உள்ளதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை நடைமுறையில் குறைந்தளவு விளைவையே ஏற்படுத்தும் என தனக்கு தெரிவிக்கப்பட்டப்பட்டதாகவும் ரொபர்ட் பிளெக் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தீவிரமாக கருத்திற்கொள்வது தமக்கு ஊக்கமளிப்பதாக ரொபட் பிளெக் கூறினார்.
அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்த தமது முக்கிய பேச்சுவார்த்தையை தாம் மீள ஆரம்பிப்பகவுள்ளதாக அரசாங்கம், த.தே.கூ. ஆகிய இருதரப்பினரும் கூறியதில் நான் மிக மகிழ்வடைந்தேன்’ என அவர் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கருத்துத்தெரிவிக்கையில் , அதன் அறிக்கை வெளிவருதற்குமுன் அந்த ஆணைக்குழு தொடர்பில் தீர்ப்புகூறுவது காலத்திற்கு முந்திய நடவடிக்கையாக அமையும் என்றார்.
எனினும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை போதாததாக இருந்தால் சர்வதே அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.
‘நாம் நண்பர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்களுக்காக நம்பகமான பொறுப்புடைமை செயன்முறையொன்று அவசியம். அது நடைபெறுவதை உறுதிப்படுத்துவத்றகான சில பொறிமுறைகளுக்கான அழுத்தம் இருக்கலாம். ஆனால் அது (அத்தகைய அழுத்தம்) தேவையில்லை என நான் எண்ணுகிறேன்’ என அவர் கூறினார்.

13 செப்டம்பர் 2011

வடக்கு இராணுவ மயப்படுத்தப்படவில்லை என பிளேக்கிற்கு மகிந்த தெரிவிப்பு!

வடக்கில் இராணுவ மயப்படுத்தல் இல்லை. ஏனைய இடங்களைப் போன்றே வடக்கிலும் இராணுவ முகாம்களே உள்ளன என மகிந்த தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் ரொபேர்ட் ஓ பிளேக் ஜனாதிபதியிடம் கேட்டறிந்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். நவம்பர் மாத நடுப்பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் என உறுதியளித்த ஜனாதிபதி, குறித்த அறிக்கைக்கிணங்க அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார். வடக்கில் இராணுவ மயப்படுத்துவதாக பிளேக் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார். ஏனைய பகுதிகளை போன்று வட பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றன.
இது ஏனைய நாடுகளை போன்றே அது தேவையானது என நாம் கூறினோம் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வரவுள்ள ரொபேர்ட் ஓ பிளேக் அரச மற்றும சிவில், சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது. யாழிலிருந்து கொழும்பு திரும்பும் ரொபேர்ட் ஓ பிளேக், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்..

ஐ.நாவில் நவநீதம்பிள்ளையுடன் போர் தொடுத்த சிங்கள அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் 18ஆவது கூட்டத் தொடரில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்கத்தின் தரப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரின் பின்னணியில் மனிதவுரிமைகளைப் பேணத் தவறிய நாடுகளுக்கு இலங்கை ஒரு உதாரணம் என நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்திய நிலையில் இவ்விருதரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீவிரவாதத்தை எதிர்த்து மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளின் போது அரசாங்கங்களால் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் மனிதவுரிமை விவகாரங்களை பெரிதும் பாதிக்கின்றன.
போரின் போது அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனிதவுரிமைகள் விவகாரங்களைப் பொறுத்தவரை போதாதவையாக இருந்தன. இவை அனைத்தும் அடிக்கடி மனிதவுரிமை விவகாரங்களை பாதித்ததுடன் வித்தியாசம் மற்றும் பாகுபாட்டு கலாசாரம் ஒன்றையும் ஏற்படுத்தின. இவை வன்முறை மற்றும் பழிவாங்கல் சுழற்சிகள் ஏற்பட வழிவகுத்தன. இலங்கை அத்தகையதொரு வகையைச் சேர்ந்தது என நவநீதம்பிள்ளை கூறினார். அத்துடன், முப்பதாண்டுகளில் தீவிரவாதத்தினால் மட்டும் இலங்கை பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், அவசர காலச் சட்டத்தை நீக்கினால் மட்டும் போதாது என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சட்டங்களையும் அரசாங்கம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமரசிங்க விமர்சனம்
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கருத்துக்களை மகிந்த சமரசிங்க கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றும் போது, நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு கையளிக்க செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இம்மாதம் 9ஆம் திகதி மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம். உங்களுடன் இடம்பெற்ற முன்னைய கலந்துரையாடலின் போது நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு கையளிப்பது குறித்து நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 29 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிந்து கொள்ள நேர்ந்தமை என்பது உங்களுக்கும் எனக்கும் அசெளகரியமானதாகும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதனிடையில், இக்கூட்டத் தொடரில் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் தரப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, நியாயமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறுவதை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உருவாக்கும் புதிய இலங்கைக்கு விரோதமான சில குழுக்கள் அல்லது தனிநபர்களினால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற நியாயமற்ற பரப்புரைகளை, தம்மிடமுள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி வெற்றி கொள்வோம் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். நாம் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம். எமது அனைத்து நண்பர்களுடனும் திறந்த மனதுடனும் பரஸ்பர மதிப்புடனும் இணைந்து செயற்படுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்பதையும் நியாயமான எண்ணம் கொண்ட எந்த நபரும் ஏற்றுக் கொள்வர்.
இவற்றுக்கான பிரதியுபகாரமாக எமது நல்லெண்ணத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பை எமக்கு வழங்குமாறு நாம் கோருகிறோம் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளார்.

லண்டனிலும் துரோகத்தனத்தை தொடரும் ஸ்ரீலங்கா தூதர் அம்சா!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது.
தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாகவும் இந்திய அரசின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு தூண்டுகோலாக இருந்தார்.
இப்போது லண்டனிலும் அதே வேலையைச் செய்து வருகிறார். முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருவதால், அங்கிருந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவதகாவும் இங்கிலாந்து அரசுக்குத் தெரிவித்திருக்கிறார் அம்சா.
இது பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி, முத்துமாரியம்மன் கோவிலையும் அங்குள்ள மாவீரர் நினைவுத்தூணையும் அப்புறப்படுத்திவிடவேண்டும் என்பதுதான் அம்சாவின் கொடூர எண்ணமாகும்.
ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள நாடு இங்கிலாந்து. அதன் போக்கை மாற்றும் வகையில் இலங்கைத் தூதர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் லண்டனில் உள்ள அனைத்துத் தமிழர்களின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் தமிழகத்திலும் இது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இதுபற்றி இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன், “தமிழர்களின் கலாச்சார சின்னமாக விளங்கும் லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை அகற்றுவதற்கு சிங்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்வரும் தமிழக அரசியல் கட்சித்தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

12 செப்டம்பர் 2011

கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் மகிந்த பரவாயில்லை என்று தலைவர் சொன்னதாக சீமான் தெரிவிப்பு!

தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.
மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முரு கனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத் திய அரசுக்கு நினைவூட்டல் கடி தங்களும் எழுதியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசரவசரமாக கடந்த 9 ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?
இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான்.
மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையிலிருந்து ஐ.நாவை வெளியேற்ற முயன்ற கோத்தபாய!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முடிபுக்கு வந்தவுடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தையும் இலங்கையிலிருந்து வெளியேற்றுவதில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ‌­ தீவிரமாக இருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையில் தனது பணிகளை முடித்து வெளியேறும் போது கோத்தபாய ராஜபக்­ஷ‌வை இறுதியாக சந்தித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட மறுநாள் இவர்கள் இருவருக்கும் இடையிலான இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அப்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கோத்தபாய ராஜபக்­ஷ‌ முன்வைத்ததாக றொபேர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது போர் முடிபுக்கு வந்து விட்டதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கையில் இனி வேலையில்லை என்றும் கோத்தபா ராஜபக்­ஷ‌ கூறியுள்ளார். களமுனையில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் அவர்களின் எதிர் மறையான அணுகு முறையே அதற்குக் காரணம் என்றும் கோத்தபாய ராஜபக்­ஷ‌ இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் அறிக்கைகள் உணர்வுகளை கொந்தளிக்க வைத்து பிளவுகளை அதிகமாக்கி விடுவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கெடுத்து விடும் எனவும் கோத்தபாய ராஜபக்­ஷ‌ தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்­ஷ‌வின் இக் கூற்றை கடுமையாக நிராகரித்த றொபேர்ட் ஓ பிளேக் மனிதாபிமான நெருக்கடிகளின் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையோ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகள் எதனையும் வழங்கவில்லை என கோத்தபாய ராஜபக்­ஷ‌ பதிலளித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தரப்பில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட கோத்தபாய ராஜபக்­ஷ‌ சர்வதேச அமைப்புகளில் ஆசியர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவர்களால் தான் அரசாங்கத்தையும் படைத்தரப்பினரையும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என கோத்தபாய ராஜபக்­ஷ‌ றொபேர்ட் ஓ பிளேக்கிக்கு கூறிய தாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

11 செப்டம்பர் 2011

மர்ம மனிதனுக்கு அடைக்கலம் கொடுத்த படையினரை சிறைப்பிடித்த வலிகாமம் மக்கள்!

வலிகாமம் மேற்குப் பகுதியில் கிறிஸ் மனிதனின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி இளைஞர்களிற்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து கிறிஸ் மனிதனைப் பிடிக்கச் சென்றபோது அதனைத் தடுக்க முற்பட்ட இரண்டு இராணுவத்தினரை மக்கள் பிடித்து அடைத்து வைத்தனர்.
பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட இழுபறியின் பின்னர் குறிப்பிட்ட இரு இராணுவத்தினரை விடுவித்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் மேற்கு தொல்புரம் பாணாவெட்டிப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்ட வேளை அப்பகுதியில் இரு மர்மமனிதர்களின் நாடமாட்டத்தை அவதானித்த மக்கள் பிடிப்பதற்காகத் துரத்திச்சென்ற வேளை அப்பகுதிக்கு உடனடியாக வந்த இராணுவத்தினர் மர்ம மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்ல முற்பட்டனர். எனினும் பொது மக்கள் அதிகமாகக் கூடி இரண்டு படையினரை பிடித்து ஒரு வீட்டிற்குள் வைத்துப் பூட்டியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பிடிக்கபட்டவர்களை மீட்டுக் கொண்டு செல்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுடனான வாக்குவாதத்தின் பின்னர் தம்முடன் அழைத்துச் சென்றனர். பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இராணுவத்தினரை மீட்டுக் கொண்டு செல்வதற்கு பொது மக்களுடன் வாக்குவாதப்பட்டு நீண்ட இழுபறியின் பின்னர் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை அழைத்துச் சென்றனர். அத்துடன் இச்சம்பவத்தில் முன்னின்று செயற்பட்ட பொதுமக்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வலி மேற்கு, அராலி தெற்கு, மேற்குப் பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதுடன் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் வீட்டிற்கும் மர்ம மனிதர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இமெல்டாவுக்கு ஒரு பகிரங்க மடல்!

மாண்புமிகு இமெல்டா அம்மையாருக்கு வணக்கம்! உங்களுக்கு பகிரங்க மடல் எழுதும் நிர்ப்பந்தம் எழுந்தமை தவிர்க்கப்பட முடியாதது என்ற நிலையில் தான் எழுதுகின்றோம். வணக்கம் நீங்கள் மக்களுக்காக ஆற்றுகின்ற பணிகள் (!) அளவிட முடியாதவை தான்.
இன்று கூட ஊடகங்களில் எமது தமிழ் மக்கள் மீது எனக்கு அக்கறை உண்டு. சாவின் மத்தியில் நின்று நான் பணிபுரிந்தவள். அந்த வேதனை எனக்குத்தெரியும். மக்களுடன் 8 வருடம் பணியாற்றியவள். அதனால் அந்த மக்களுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும்.
30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் நாங்கள் பலவற்றினை இழந்துவிட்டோம். அவற்றை மீளக்கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.தமிழ் அரச அதிபர் என்ற ரீதியிலேயே ஜெனீவாவுக்கு நான் அழைக்கப் பட்டிருக்கின்றேன்.
எனினும் நடந்து முடிந்த போரைப்பற்றி அங்கு சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.அவ்வாறு சாட்சி சொல்வதற்காகவும் நான் அழைக்கப்படவில்லை. எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு மீள் குடியமர்வும் அபிவிருத்தியுமே. யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியமர்வு மற்றும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் தொடர்பான தகவல் திரட்டியுள்ளேன். இன்னும் செய்யப்பட வேண்டியுள்ள பணிகள் குறித்தும் தகவல்கள் ஜெனீவாவில் தரப்படும்.யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் ஜெனீவாவில் தெரிவிக்கவுள்ளேன் என்று நீங்கள் தெரிவித்திருக்கின்ற கருத்து எங்கள் மனதை பிழிந்தெடுத்திருக்கிறது.
நீங்கள் ஊடகங்களில் சொல்லியிருக்கின்ற கருத்தினை ஜெனீவாவில் ஒப்புவிப்பீர்களா? என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவர் மனங்களிலும் அலை மோதுகின்றது.
முல்லைத்தீவில் இருந்து நீங்கள் சொல்லிய செய்தி உலகை எட்டியதே?!
போர் நடைபெற்ற போது அங்கு நீங்கள் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதிகளில் எறிகணைத் தாக்குதல் நடைபெற்ற போது அதில் பாதிக்கப்பட்ட நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் உடனடியாகவே உலகை எட்டியிருந்தன. ஒரு அரச அதிகாரி இவ்வாறு மக்களுக்காக துணிந்து நின்று கதைப்பது பெரியவிடயம் தான் என்று புலத்தில் உள்ள மக்களும் பேசிக் கொண்டார்கள்.
முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கும் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கும் செப்பனிடப்படாத வீதிகளில் ஆழஊடுருவும் படையணியின் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் நீங்கள் பயணித்து மக்களுக்காக பணியாற்றிய சம்பவங்கள் இன்னமும் பசுமையாக உள்ளன. ஒரு பெண், ஆண்களுக்கு நிகராக அசாத்திய திறனுடனும் அசையாத மனதுடனும் மக்களுக்காக பணி செய்திருந்தீர்கள். இந்தப் பணிகளும் அதற்காக நீங்கள் கொடுத்த விலைகளும் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மக்களாலும் உங்களுக்கு கீழ் பணி புரிந்த அதிகாரிகளாலும் பெரிதாகப் பேசப்பட்டிருந்தன.
2009 ஜனவரியின் பின்னர் உங்கள் செயற்பாடுகள் முற்றிலும் மாற்றங்கண்டனவே?!
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக உங்களையும் அரச அதிகாரிகளையும் முல்லைத்தீவில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்தது உங்களுக்கு இன்றும் நினைவிருக்கும் என்று நம்புகின்றோம். அழைப்புக் கிடைத்தவுடன் உங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகளுக்குக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் வன்னியில் இருந்து வெளியேறி ஒரே மூச்சாக மதவாச்சியில் உள்ள சிற்றுண்டிச் சாலை ஒன்றில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து உங்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கோத்தா அழைத்த விடயத்தினைச் சொல்லியிருந்தீர்களே? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
நீங்கள் வெளியேறிய போது உங்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பார்த்தீபன் உங்கள் பணியினையும் தனது பணியினையும் ஒன்று சேர்ந்து தனது தலையில் போட்டுக்கொண்டு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 2009 மே 16ஆம் திகதி வரையில் இடையறாது பணியாற்றியிருந்தாரே அவரைப் பற்றியோ அவரது பணி பற்றியோ எங்காவது குறிப்பிட்டிருந்தீர்களா?
முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் முள்ளிவாய்க்காலில் இருந்து மக்களின் தொகை குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவல்கள் தொடர்பில் நீங்கள் தொலைபேசியில் கடிந்து கொண்டதாக அப்போதே அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்குத் தெரியவந்திருந்தது.
மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் உங்களுக்கு குறைந்த அளவிலான சேவை செய்திருந்தால் ஏன் மேற்குலகிடம் அரசியல் தஞ்சம் பெற்றிருக்க வேண்டும்? மேற்குலகும் ஏன் அவருக்கு அரசியல் தஞ்சத்தினை வழங்கியிருக்க வேண்டும்? அவரே அங்கு செல்லும் போது உங்களால் எப்படி சாதாரணமாக இலங்கையில் இருந்து பணியாற்ற முடியும் என்பதிலிருந்தே உங்களின் உண்மை முகமும் வெளிப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
டக்ளஸை மிரட்டினீர்களாமே?!
யாழ்.மாவட்ட அரச அதிபர் கதிரையில் இருந்த அன்றைய அரச அதிபரும் தற்போதைய ஈபிடிபியின்ஆலோசகர் சபையின் முக்கியஸ்தருமான கே.கணேஸ் ”ஏலுமெண்டால் நீ யாழ்ப்பாணத்திற்கு அரச அதிபராக வந்து பார்” என்று சவால் விட்டதும் அதனை அடுத்து நீங்கள் தனிமையில் இருந்து கண்ணீர் விட்டதும், ”ப(B)வா அக்கா” என்று நீங்கள் செல்லமாக அழைக்கின்ற உங்கள் உறவினரான யோகேஸ்வரி பற்குணராஜாவே உங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகக் கவலைப்பட்டதும் உங்களுக்கு இன்னமும் நினைவிருக்கலாம்.
ஆனாலும் கூட காதலி காதலனை மிரட்டுவது போன்று “நான் சாகப்போகிறேன், எனது மரணத்திற்கு நீர் தான் காரணம் என்று கடிதம் எழுதிவிட்டுத் சாகப் போகின்றேன்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரடியாகவே நீங்கள் மிரட்டியிருந்தீர்களாம். இதனையும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொல்லியிருந்தீர்களாம். இவை நடந்த போதெல்லாம் உங்கள் தற்துணிவையும் ஆளுமையையும் உங்களுக்கு உங்கள் மீது இருந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றீர்கள் என்றல்லவா தமிழ் மக்கள் எண்ணியிருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மிரட்டலையும் மீறி யாழ்.மாவட்ட அரச அதிபராக கதிரையில் குந்திய நீங்கள் அதி வேகமாக அரச இராணுவப் பேச்சாளராக மாறியது எவ்வாறு?
போர் தொடர்பான அனுபவப் பகிர்வில் திருவாய் மலர்ந்தீர்களாமே?!
கொழும்பில் போர் தொடர்பான அனுபவப் பகிர்வில் நீங்கள் திருவாய் மலர்ந்தவற்றை சில நாட்களுக்கு முன்னர் சில ஊடகங்கள் மீள் பிரசுரம் செய்திருக்கின்றன அவற்றினை மீட்டிப்பார்க்கின்றோம்.
முல்லைத்தீவில் அரச அதிபராக நான் செயலாற்றிய காலப்பகுதியில் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர்.போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங் களில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகள் என்ற வகையில் நாங்கள் பெரும் சிரமப்பட்டோம்.
இந்தக் காலப்பகுதியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசிடம் கோரிக்கைகளை முன் வைக்கும் போதும் நான் விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளானேன்.வடபகுதி மக்களை விடுதலைப் புலிகள் பணய மாக வைத்துக் கொண்டே போரை நடத்தினர். இந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப் புப் படையினர் எவ்விதத்திலும் பொதுமக்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்த வடபகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
அவர்கள் சட்டரீதியாகவும், நாகரிகமான முறையிலும் தமது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக இருந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் அச்_றுத்தலில் இருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எந்தளவுக்குப் பொதுமக்களைத் துன்புறுத்தினார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். தற்போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வடபகுதியில் தமிழ் மக்கள் சகல வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர். போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமாணங்கள் அனைத்தும் அரசால் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள், பாதுகாப்புப் படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை மறந்து விடமுடியாது”
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலான சாட்சியங்களிலும் இதனைப் போன்றே கருத்துத் தெரிவித்திருக்கின்றீர்கள். ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் போதும் அப்பழுக்கற்ற இராணுவம் என்றும் அரசு என்றும் தெரிவிக்கும் உங்கள் கருத்துக்கள் தமிழ் மக்களை இன்னமும் சினத்தில் ஆழ்த்துவதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை.
பதவியை விடுமாறு உங்கள் பிள்ளைகள் வலியுறுத்தினராமே?!
உங்கள் பிள்ளைகள் உங்களை அரச அதிபர் பதவியினைத் திறந்துவிட்டு வாருங்கள். புலத்தில் உள்ள மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று உங்களை வற்புறுத்துவதாகவும் நீங்கள் தானே சொல்கின்றீர்களாம். அப்போ எதற்காக இந்த நன்றிக்கடன்.
தமிழினம் சிந்திய இரத்தம், கொடுத்த இலட்சக்கணக்கான உயிர் விலைகளுக்கான அறுவடைக்கான நாள்நெருங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி வரலாற்றில் உங்களை தனித்துக்காட்டாதா? இவ்வளவு அனுபவம் வாய்ந்தவரான நீங்கள், வடக்கில் இருக்கின்ற அரச அதிபர்களிலேயே தகுதியும், அனுபவமும் மிக்கவர் என்று தெரிவிக்கின்ற நீங்கள் உலக மனச்சாட்சியினை மீறி இனத்துரோகத்தினை இழைக்கப் போகின்றீர்களா? என்பதை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் சாட்சியமளிப்பதாக இருந்தால் உள்ளதை உள்ளவாறே சொல்லுங்கள். அது விடுதலைப்புலிகளாக இருக்கலாம், இராணுவமாக இருக்கலாம் யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் அதில் ஒளிவு மறைவுகளை தயவு செய்து நீங்கள் செய்துவிடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஜெனீவாவில் நீங்கள் கதைக்கவுள்ளது மீள்குடியமர்வும் அபிவிருத்தியும் பற்றியாமே?!
”மீள் குடியமர்வும் அபிவிருத்தியும்” உங்கள் ஜெனீவா கருத்தரங்கின் கருப்பொருள் என்று நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள். மீள்குடியேற்றம் ஏன் செய்யப்பட வேண்டும்? அந்த மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். உண்மையில் மீள்குடியேற்றம் அபிவிருத்தி என்பன பெயரளவில் மட்டும் தான் உள்ளன என்பதை உங்களால் சொல்லமுடியுமா? இவற்றை விட்டு அரசாங்கத்தினையும், இராணுவத்தினையும் தூக்கி நிறுத்துகின்ற பணியினைத்தான் செய்யப் போகின்றீர்களா?
உங்களைப் போன்ற மற்றொரு பெண் அரச அதிபரையும் ஜெனீவாவிற்கு அழைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் இருந்து அவர் நழுவியிருப்பதாக அறிகின்றோம். நீங்கள் உங்கள் பிரதான எதிரிகளில் ஒருவராக வரித்திருக்கின்ற அவரால் நழுவிக் கொள்ள முடியும் என்றால் ஏன் உங்களால் முடியவில்லை.
காணொளியில் உள்ளது நீங்களா?
ஆனாலும் ஒரு தாயாக, ஒரு தமிழ்ப் பெண்ணாக, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனித உயிராக கீழ் இணைக்கப்படுகின்ற காணொளியினைப் பாருங்கள். அதில் சொல்லப்படுகின்ற தகவல்கள் கருத்துக்கள் உண்மையற்றவை என்றால் ஜெனீவாவில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உரை நிகழ்த்துங்கள். ஒரு கணம். ஒரே ஒரு கணம் மட்டும் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் காணொளியில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மையா? பொய்யா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

நன்றி:சரிதம்.

10 செப்டம்பர் 2011

இமெல்டாவுடன் கே,பியின் சகோதரரையும் ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளது ஸ்ரீலங்கா அரசு!

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமான மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் நடைபெறுகிறது என்றும், போரின் போது மக்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக ஜெனிவா செல்லும் யாழ். மாவட்ட அரச முகவர் இமெல்டா சுகுமாருடன் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதனின் சகோதரரும், வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தலைவருமான எஸ்.தவரட்ணமும் ஜெனிவா செல்கிறார்.
அரசாங்கம் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்கிறது என்றும் துரிதமாக புனர்வாழ்வு பணிகள் நடைபெறுகிறது என்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்து சொல்வதற்காகவே இமெல்டா சுகமாரையும் தவரட்ணத்தையும் சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது.

படைசிப்பாய்க்கு கத்திக்குத்து!பண்டத்தரிப்பில் சம்பவம்.

மதுபோதையில் நின்றவருடன் தகராறில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்கானார். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயச் சூழலில் நள்ளிரவு வேளை மதுபோதையில் இருந்த இளைஞர்களிடம் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அவர்களிடம் தேவையற்ற விதத்தில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் தடிகள் பொல்லுகள் சகிதம் நின்றபோது இராணுவத்தினர் அதனைப்
பறிக்க முற்படுகையில் கையில் கத்தி வெட்டிற்கு இலக்கானார். இதனையடுத்து நேற்றுக் காலை அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் தகராறில் ஈடுபட்ட நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றனர். அச்சம் காரணமாக குறித்த நபரை இராணுவ முகாமில் ஒப்படைத்த போது, குறித்த நபரை இராணுவத்தினர் தாக்கியதோடு எச்சரிக்கை செய்து விடுவித்ததாக யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தூரில் மீட்கப்பட்டு யாழ்,மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலம் மர்ம மனிதனுடையதா?

புத்தூர் மீசாலை வீதியில் புத்தூர் சந்தியில் இருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. வீதித் திருத்தபணிக்காக நேற்றுக் காலை சென்ற சிலர் வீதியில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டுள்ளனர்.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் கஜசிங்க தலைமையிலான பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
காற்சட்டையும் பெனியனுடமே குறித்த சடலம் மீக்கப்பட்டுள்ளது. சடலம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் நேற்றிரவு வரை இனம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் சடலம் மர்ம மனிதனுடையதா? என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

09 செப்டம்பர் 2011

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை ஸ்ரீலங்காவில் நடத்தக்கூடாது!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த மாநாட்டை 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வாஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்குவதையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்படி வழங்குவதாயின் வன்னியில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து உள்ளுர் மற்றும் அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு பொது நலவாய நாடுகள் அமைப்பு கடும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்ட பகிரங்க மடல் ஒன்றில் வலியுறுத்தி உள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவது தொடர்பாக தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள் எமக்குக் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் காரணமாக, 2011, 2013 காலப்பகுதிக்கான கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு தள்ளி வைக்கப்பட்டது.
போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், இலங்கையில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கள் மீதான ஒடுக்கு முறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன.
இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க் குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இவ்வாறான பின்னணியில், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை இலங்கையில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமன்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடும்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப் போகின்றது என்ற நிலையில், கூட்டம் இலங்கையில் நடத்தப்படுவது கவலை தருவதாகும். எனவே 2013 கூட்டத்தை நடத்துவதாயின் அதற்கு முன்னர் இலங்கை அரசு குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்க வேண்டிய நிபந்தனைகளை அமைப்பு முன்வைக்க வேண்டும். அவற்றுள் பின்வரும் விடயங்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்கள் அனைத்தையும் அவற்றின் தராதரத்துடன் இலங்கை உள்நாட்டில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துதல்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் கௌரவத்துடனம் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புக்களை மீள உருவாக்குதல்
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைப் பாதுகாக்கத்தக்க செயல்திறனுள்ள, பொறிமுறை ஒன்றைச் செயற்படுத்த வெண்டும்.
நாட்டில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், குறிப்பாக 2009 மே மாதம் நிறைவடைந்த போரின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்தவை குறித்து உள்ளுர்மற்றும் சர்வதேசபக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஒத்துழைப்பையும் ஆதவையும் வழங்க வேண்டும்.ஐ.நா. செயலாளர்நாயகம் நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக
செயலாளர்நாயகம் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, ஒத்துழைத்துச் செயற்படுதல். ஆகிய கோரிக்கைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச்சபை அதிரடி நடவடிக்கை!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின்போது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எதிரான விசேட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தலாமெனக் கருதப்படுவதால் மன்னிப்புச்சபை இந்த விசேட அறிக்கையைத் தயார் செய்து வருகிறது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆராயப்படவில்லை என்று குறிப்பிட்டு தனது அறிக்கையைத் தயார் செய்துவரும் மன்னிப்புச்சபை இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அரசுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டும் பேச்சுகளில் இலங்கைத் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

08 செப்டம்பர் 2011

தமிழ் தேசியம் தொடர்பான துண்டுப்பிரசுரம் வைத்திருந்ததாக ஏழாலையில் இளைஞர் கைது!

துண்டுப்பிரசுரம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 20.09.2011 வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் ஏழாலை மேற்கு உதய சூரியன் சனசமூக நிலைய செயலாளரான செல்வராஜா கிருசன் வயது 32 என்பவரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் 5.09.2011 அன்றைய தினம் அச்சிட்டு வெளியிட்டதாகக் கூறப்படும் தமிழ் தேசியப் பற்றுள்ள இயக்கம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரத்தை மேற்குறித்த சனசமூக நிலையத்தில் வைத்திருந்ததாக தெரிவித்து யாழ்ப்பாணப் பொலிசாரால் செவ்வாய்கிழமை இரவு 8.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் சுன்னாகம் பொலிஸ் நிலைய எல்லைக்குள் இருந்த போது யாழ்ப்பாணப் பொலிசாராலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியின் நெஞ்சில் கீறிய காடையர்கள்!

சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குச் சென்ற மாணவியை வீதியில் இடைமறித்த இனந்தெரியாத நான்கு இளைஞர்கள் அந்த மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை சாவகச்சேரி கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது நேற்றுக்காலை சாவகச்சேரி கச்சாய் வீதியில் இருந்து கயிலாயபிள்ளை வீதி ஊடாக மாணவி சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். இந்த வேளையில் மாணவியைத் திடீரென இடை மறித்த நான்கு இளைஞர்களில் ஒருவர் மாணவியின் தலை மயிரைப் பிடித்து இழுக்க மற்றவர் கூரிய பிளேட்டினால் மாணவியின் நெஞ்சில் கீறியுள்ளார். எனினும் தெய்வாதீனமாக மாணவிக்குக் காயம் ஏற்படவில்லை. அவர் அணிந்திருந்த பாடசாலை சீருடை மட்டும் கிழீந்திருந்தது.
மாணவி உடன் கூச்சலிட்டதால் அந்தப் பகுதியில் நின்ற வேறு ஒரு இளைஞர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்ததாகவும் அதனைக் கண்ட நான்கு இளைஞர்களும் இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாகவும் அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களும் இதனால் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற சாவகச்சேரி இந்துவின் அதிபர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார்.
இதேவேளை, ஏழாலை மேற்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம மனிதர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வரன் நவீனன் (வயது22) என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.
இந்த இளைஞர் இயற்க்கைக் கடன் கழிக்க வெளியே நின்ற வேளை மர்ம மனிதரின் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டது.

07 செப்டம்பர் 2011

எங்கிட பிள்ளைக்காக எங்களால் போராட முடியவில்லையே"சாந்தனின் தாயார் கண்ணீர்!

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து அழுதார் மரணதண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தனின் தாயார்.
மரண வாசலில் இருந்து மீண்டு நிற்கும் மூவரில், சற்று வித்தியாசமானவர் சாந்தன். சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பக்தர்கள் குழாம் ஒன்றையே சிறையில் உருவாக்கிவிட்டார்.
சாந்த சொரூபியாக வலம் வரும் சாந்தன் பேசுவது ரொம்பவும் குறைவு. பெயர் மாற்றக் குழப்பத்தால் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் இவருக்கு, ‘ஈழத்தில் இருக்கும் தாய், தந்தையர் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் கதி என்ன?’ என்றே தெரியவில்லை.
அந்தத் துயரத்தை ஜூனியர் விகடன் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருந்தார்!
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம்.
‘தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்…’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ… திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
‘எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை… உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!” என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
ஐயா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு… வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம்.
ஆனா, ஐயா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது ஐயா…”
தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ”10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் ஐயா… 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)… வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார்.
தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்… தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்…
புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, ‘அம்மா பாவம்… நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார்.
அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்… எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது… எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, ஐயா…
எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை… ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது.
வறுமை இன்னொரு பக்கம்… வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்…
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது.
இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது…
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை… 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை… வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்… (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்)
என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…
எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
ஜூனியர் விகடனுக்காக இரா.தமிழ்க்கனல்.

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு,ஒன்பது பேர் பலி!

டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் ப்ரீப்கேஸில் வைக்கப்பட்ட பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் 9 பேர் பலியானதாக உள்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் யு.கே.பன்சால் தெரிவித்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
5வது வாசலில்:
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர். பின்னர் வக்கீல்களே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
'ப்ரீப்கேஸ்' குண்டு:
முதலில் இந்தக் குண்டுவெடிப்பு சாதாரணமானதாக கருதப்பட்டது. ஆனால் போலீஸ் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் இது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்பது தெரிய வந்தது.
ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. 30க்கும் மேற்பட்டோர் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை:
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் டெல்லி காவல்துறையுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறை ஆணையருடன் தொடர்ந்து விவரம் கேட்டு வருகின்றனர்.
இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சிறப்பு செயலாளர் யு. கே. பன்சால் கூறியதாவது,
டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் ஒரு ப்ரீப்கேஸ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நீதிமன்றத்திற்குள் செல்வதற்காக நுழைவுச் சீட்டு வாங்க சுமார் 200 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தான் அந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
குண்டுவெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிற்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்த இடத்தில்
அம்மோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
2-வது சம்பவம்:
கடந்த மே மாதம் 25ம் தேதியும் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்தது நினைவிருக்கலாம்.
குண்டுவெடிப்பு எதிரொலி-ராஜ்யசபா ஒத்திவைப்பு:
இந்த நிலையில் குண்டுவெடிப்பு குறித்து ராஜ்யசபாவில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்யசபா கூடியதும் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்துத் தெரிவித்தார். அவர் கூறுகையில் டெல்லி உயர்நீமன்றம் அருகே இன்று குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதில் சிலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து மேல் விவரங்கள் கிடைத்ததும் அதை அரசு உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும். பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

06 செப்டம்பர் 2011

நடைப்பயணம் மேற்கொண்ட செந்தமிழன் சீமான் கைது!

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன் மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று காலை வேலூர் கோட்டை பூங்காவிலிருந்து சீமானின் நடைப் பயணம் தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பேரணிக்கு திரண்டு வந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க, இயக்குநர் ஆர்கே செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
அனுமதி இல்லை:
வேலூர் நகர எல்லையில் சீமானின் நடைப் பயணம் நெருங்கியபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசாரும் சீமான் தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற பேரணி இது என்பதை விளக்கிச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சில நிமிடங்கள் பேச்சு நடந்தது. ஆனாலும் போலீசார் பிடிவாதமாக இருந்தனர்.
சீமான் கைது:
எனவே தடையை மீறி, நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் சீமான். இதனால் அவரை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றினர் போலீசார். அவருடன் வந்த 1000-க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.
முதல் கைது:
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி நடத்திய பரப்புரை நிகழ்வுக்காக சீமான் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

ஜெகத் டயஸ் போர்க் குற்றவாளி"மீண்டும் எழுகிறது அழுத்தம்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பின்னணியில், சிறிலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது – European Centre for Constutitional and Human Rights (ECCHR) – ஐரோப்பிய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் போர்மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையினை இந்த அமைப்பு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா படைத்துறையின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மன் நாட்டிற்கான சிறிலங்காவின் துணைத் தூதுவராக பதவியில் உள்ளார்.
’2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் 57வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸினால் மேற்கொள்ளப்பட்ட போர்மீறல் குற்றச்சாட்டுகள்’ எனத் தலைப்பிடப்பட்ட 23 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் ஜெகத் டயஸிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் விபரிக்கப்பட்டுள்ளதோடு, 57வது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட போர்மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நேரடிச் சாட்சியங்களும் இவ்வறிக்கையில் பதிவாகியுள்ளன.
சுவிஸ் நாட்டில் ஜெகத் டயஸிற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுத்துள்ள Track Impunity Always எனும் மனித உரிமைக் குழுவின் இணைப்பாளர் Philip Grant கூறும் போது, பல்வேறு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையத்தினதும் ஐ.நா நிபுணர் குழுவினதும் அறிக்கைகளும் அவற்றில் உள்ளடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
டயஸ் தலைமையிலான படையினர் போர்க்குற்றங்களாக வரையறுக்கத்தக்க பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமைக்கான நம்பகமான ஆதாரங்கள் இவை என அவர் கூறியுள்ளார்.
டயஸ் மீதான குற்றச்சாட்டுகள் சுவிஸ் நீதித் துறையினால் விசாரிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள Philip Grant இந்த மோசமான குற்றச்சாட்டுகள் காரணமாக, இராஜதந்திர வாய்ப்புகள் டயஸிற்கு வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
போர் தொடர்பான மேலோட்டமான அறிமுகத்துடனும், பொது மக்களின் அவலங்கள் ‘ஏற்றுக் கொள்ள முடியாத பேரிழப்பு’ என 2009 ஜுன் 1ஆம் திகதி ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வெளியிட்ட கூற்றையும் மேற்கோள் காட்டியவாறு இவ்வறிக்கை தொடங்குகின்றது.
தொடர்ந்து வீக்கிலீக்ஸ் தகவற் கசிவினை ஆதாரமாகக் கொண்ட 2010 ஜனவரி 15 அமெரிக்க தூதுவர் Patricia Butenis அனுப்பிய அறிக்கையில், போர்மீறல்களுக்கு பொறுப்பானவர்களாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர்கள் உட்பட மற்றும் முன்னாள் படைத்துறைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட்ட இராணுவத் தலைமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பல மூத்த படைத்துறைத் தளபதிகளை அனைத்துலக நாடுகளில் தனது இராஜதந்திர பிரதிநிதிகளாக அனுப்பி வைத்துள்ளது என்பது தொடர்பாக இவ்வறிக்கையில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஜேர்மன், சுவிஸ் மற்றும் வத்திக்கான் ஆகிய நாடுகளில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெகத் டயஸ் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தவறியுள்ளதாக ஜேர்மன் நாட்டின் மீது அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாறாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு புதுப்பித்தல் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஜேர்மனிலுள்ள சிறிலங்கா தூதரகத்தை நாடும் தமிழர்களை ‘அச்சுறுத்தவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மன் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டவராக மட்டும் விளங்கவில்லை. அவர்களுடைய பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியிலுள்ள தமிழ்ச் சமூகத்தைக் கண்காணிக்கவும் விசாரணைகளுக்கு உட்படுத்தவும் ஜேர்மன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினரால் ஜெகத் டயஸ் கையாளப்படுகின்றார். சுவிஸ் நாட்டிலும் இதே வகை நடிவடிக்கைகள் இடம்பெறுகின்றவை தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு போர்மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவங்களையும் கவனமாக ஆராய்ந்து, அதை தொடர்பான நம்பகமான ஆதாரங்களுடன் அவை அறிக்கையிடப்பட்டுள்ளன என ECCHR தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான சம்பவங்கள் மனித உரிமைக் கண்காணிப்பகம், அனைத்துலக முரண்பாட்டுக் குழு, பி.பி.சி உட்பட்ட காத்திரமான நம்பகமான மூலத்தகவல்களிலிருந்து விபரிக்கப்பட்டுள்ளன. போர்மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை நேரடிச் சாட்சியங்கள் மூலமும் ECCHR பெற்றுக் கொண்டுள்ளது எனவும் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

05 செப்டம்பர் 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது இலங்கை படைகள் தாக்குதல் நடத்தியதை உலகே அறியும்!

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, தான் இலங்கை ஜனாதிபதியின் அப்போதைய ஆலோசகரான பஸில் ராஜபக்ஷவிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது தொடர்ச்சியாக சில நாள்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்த நம்பகமான தகவல்கள் பற்றிய தூதுவரின் கரிசனைகளுக்கு, பஸில் ராஜபக்ஷ வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரகத்தால் மார்ச் 5 ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவல் கூறுகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு மீண்டும் மீண்டும் உறுதி வழங்கியிருந்தது.
பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்தது என பஸில்ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் பொதுமக்களின் உயிர்களைக் காவுகொண்டன. இலங்கை அரசு கடப்பாட்டை மீறுவதாக உள்ளது எனவும் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அமெரிக்கத்தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.
இந்தத் தகவல்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசு அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.
பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக இலங்கை அரசு உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்தது எனவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பஸில் ராஜபக்ஷ இரு அண்மைய சந்திப்புக்களின்போது இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தினர் என ஒப்புக்கொண்டுள்ளார்.ஆனால் அந்த விடயத்தைப் பேசுவதில் அவர் அவ்வளவு விருப்பமில்லாதவராக இருந்தார் என்றும் நோர்வேத் தூதுவர் கூறியிருக்கிறார்.
ஆனால், மிக மோசமான மனித நேய பேரழிவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கேட்கப்பட்டதை, ஜப்பான், நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் எதிர்த்தன எனவும், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குவதற்கு அப்பால், தமது முன்னைய கரிசனைகள் பலவற்றுக்கு இலங்கை சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த நாடுகள் கூறியது எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் கசிந்த தகவல் கூறியுள்ளது.