09 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச்சபை அதிரடி நடவடிக்கை!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின்போது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எதிரான விசேட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தலாமெனக் கருதப்படுவதால் மன்னிப்புச்சபை இந்த விசேட அறிக்கையைத் தயார் செய்து வருகிறது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆராயப்படவில்லை என்று குறிப்பிட்டு தனது அறிக்கையைத் தயார் செய்துவரும் மன்னிப்புச்சபை இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அரசுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டும் பேச்சுகளில் இலங்கைத் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக